ரவுடியாக ஆசை! ‘அசுரன்’ மாரியம்மா சொல்கிறார்



கத்தரிப் பூவழகி கரையா பொட்டழகியாக ‘அசுரன்’ படத்தில் இளம் தனுஷு டன் கதாநாயகியாக நடித்திருக்கும் அம்மு அபிராமி பக்கா தமிழ்ப் பொண்ணு. அப்பா சினிமாவில் சவுண்ட் இன்ஜினியர்.“எனக்கு சினிமா ரொம்பப் புடிக்கும். அப்பாவுக்கும் ரொம்பப் புடிக்கும். பத்தாம் வகுப்பு முடிச்சதுக்கு அப்புறமா வாய்ப்பு தேட சொல்லிட்டாங்க.

அப்படி தேடும்போது கிடைச்சதுதான் ‘ராட்சசன்’ பட வாய்ப்பு. ரெண்டாவது  படம்தான் ‘தீரன் அதிகாரம் ஒன்று’. ஆனா முதல்லே ரிலீஸ் ஆனது ‘தீரன்’தான்” என்கிறார் அம்மு அபிராமி.‘அசுரன்’ அனுபவங்களை நம்மிடம் உற்சாகத்தோடு பகிர்ந்து கொண்டார்.

“எப்படி கிடைச்சது ‘அசுரன்’ வாய்ப்பு?”

“தாணு சார் தயாரிப்பிலே ‘துப்பாக்கி முனை’ன்னு ஒரு படத்தில நடிச்சிட்டு இருந்தேன். அந்தப் படம் பண்ணும்போதே தாணு சாருக்கு என்னை ரொம்பப் பிடிக்கும். எப்பவுமே அப்ரிஷியேட் பண்ணுவாரு. அவருதான் வெற்றிமாறன் சார்கிட்டே சொன்னாரு. வெற்றிமாறன் சார் ஆபீஸ்ல டெஸ்ட் ஷூட் பண்ணாங்க. அந்த ரோலுக்கு நான் கரெக்டா இருந்ததால ஓக்கே சொல்லிட்டாங்க.”

“வெற்றிமாறன் கூட வேலை பார்த்த அனுபவம்?”

“இப்போதான் நான் வளர்ந்துட்டு வர்றேன். இப்பவே பெரிய டைரக்டர் கூட வேலை பார்க்குறது கூச்சமாவும் பயமாவும் இருந்துச்சி. அதை பெரிய பாக்கியமாவும் நினைக்கிறேன். அவருகிட்ட நிறைய கத்துக்கிட்டேன்.”

 “படப்பிடிப்பில் படபடப்பா இருந்தீங்களாமே?”

“நாளைக்கு ஷூட்டிங்னா இன்னைக்கு சாயந்தரம்தான் வரச் சொன்னாங்க.  என்ன கேரக்டர் என்ன ரோல்னு எதுவுமே தெரியாது. பிளாங்க்கா போய் நின்னேன். அங்க போயி மூணு நாளைக்குப் பிறகு தான் தனுஷ் சாருக்கு ஜோடின்னே தெரியும். ரொம்ப சர்ப்ரைஸா இருந்துச்சி. எதாவது சின்ன கேரக்டரா இருக்கும்னு எதுவும் ரெடி  பண்ணாமலே போயிட்டேன். அதனால மனசிலே கொஞ்சம் பயம் இருந்துச்சி.”

“தனுஷ்?”

“ஒரு கேரக்டரை உள்வாங்கி ஃபீல் பண்ணி நடிப்பாரு. எல்லாத்தையும் ஆர்வமா கத்துப்பாரு. தனுஷ் சார் ரொம்ப ஹார்ட் ஒர்க்கர். கூட இருந்து பார்க்கும் போது தான் தெரியும். அதே மாதிரி அவருகூட நடிக்கிறது ரொம்ப கம்ஃபர்ட்டா இருக்கும்.”

“பெரிய டீம் என்கிற பயம் இருந்துச்சா?”

“பெரிசா பயம் ஒண்ணுமில்லை. நமக்கு கொடுத்த கேரக்டரை சரியா பண்ணணும். அது மட்டும்தான் மனசிலே இருந்துச்சி. அவங்களுக்கு என்ன தேவைன்னு புரிஞ்சு நடிச்சேன். அவங்க எதிர்பார்த்த அளவுக்கு பெஸ்ட்டா நடிச்சிருக்கேன்னு நம்புறேன்.”

“காலேஜ் போற ஐடியா இல்லையா?”

“இந்த வருசம் காலேஜ் சேரணும். ஆனா வீட்லே இருந்தே தான் படிக்கப் போறேன். காலேஜ் போய் படிக்கணும்னு ஆசையாவும் இருக்குது. ஆனா சினிமா புரஃபஷனா ஆகிடுச்சி. அதனால ரெகுலரா அட்டெண்டன்ஸ் கொடுக்குறது கஷ்டமா இருக்கும்.”

“சினிமாவுக்கு வரலேன்னா என்ன ஆகியிருப்பீங்க?”

“கண்டிப்பா மீடியாவுலேதான் இருந்திருப்பேன். ஏன்னா இந்தத் துறை  எனக்கு ரொம்ப பிடிச்ச துறை.”
“இந்த ‘அசுரன்’ கதை, ‘வெக்கை’ என்கிற நாவலை மையமா வச்சி எடுக்கப்பட்டது. ‘வெக்கை’ படிச்சிங்களா?”
“இல்லை சார்.  ஆனா கதை என்னன்னு கொஞ்சமா தெரியும். அப்பா படிச்சிருக்காரு.”

“நீங்க லீட் ரோலில் நடிச்ச ‘யார் இவர்கள்?’ எப்போதான் ரிலீஸ் ஆகும்?”

“தெரியலை சார். ‘யார் இவர்கள்’ படத்தோட டைரக்டர் பாலாஜி சக்திவேல் சார்தான் அந்தப் படத்திலே நடிக்க வாய்ப்பு கொடுத்தாரு. முதன்முறையா லீட் ரோல் பண்ணது அந்தப் படத்திலேதான். சீக்கிரத்திலே ரிலீஸ் ஆகும்னு நம்புறேன்.”

“இப்போ நடிச்சிட்டு இருக்கிற படம்?”

“மணிபாரதி சார் டைரக்‌ஷன்ல ஒரு படம் பண்ணிட்டு இருக்கேன். இதுலேயும் லீட் ரோல் தான் பண்ணுறேன். நல்ல ஸ்கிரிப்ட், புது டீம். அப்புறம் ஜித்து ஜோசப் சார் படத்திலேயும் நடிச்சிட்டு இருக்கேன்.”

“ரோல் மாடல்?”

“முதல்ல என்னோட அப்பா அம்மாதான். எல்லார்கிட்ட இருந்தும் ஒரு விஷயத்தை கத்துக்க முடியும். ரேவதி, அமலா மேடம் எல்லாம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ரொம்ப எதார்த்தமா நடிப்பாங்க. நான் ஆக்டிங் பார்த்து மெரண்டுபோனது விஜய் சேதுபதி சார்ஆக்டிங் தான்.”

“சினிமாவுக்கு வந்தது உங்க ஆசையா, அப்பா ஆசையா?”

“என்னோட ஆசைதான். ஆனா சினிமாவுக்கு வர காரணமா இருந்தது அப்பா அம்மா ரெண்டு பேரும் தான். எனக்கும் சரி என்னோட தம்பிக்கும் சரி அப்பா சொல்ற ஒரு விசயம் எதை பண்ணாலும் உங்க முயற்சியிலே பண்ணுங்கன்னு சொல்லுவாரு. எனக்கு நிறைய வாய்ப்பு நான் ஆடிஷன் போனதில தான் கிடைச்சது.”

“நடிக்க விரும்புற கதாபாத்திரம்?”

“எல்லா கதாபாத்திரத்திலேயும் நடிக்கணும். முக்கியமா கேங்ஸ்டர் பாத்திரத்திலே நடிக்கணும். கெத்தா ரவுடி மாதிரி ஒரு ரோல் பண்ணணும்னு ஆசை.”
“தமிழில் மட்டும் தான் நடிப்பிங்களா?”

“இல்லை.. கடைசி வரைக்கும் தமிழ் படங்கள்லே நடிப்பேன். ஏன்னா நான் பிறந்து வளர்ந்த மண்ணு இது. நல்ல கதாபாத்திரம் கிடைக்கும்போது மத்த மொழிகளிலும் நடிப்பேன்.”

- தீக்சா தனம்