புஜ்ஜியம்மா இப்போ ரொம்ப பிஸி!



நாள் பொழுதும் சோஷியல் நெட்வொர்க்கிலேயே காலம் தள்ளுபவருக்கு மிர்ணாளினி ரொம்பவே பரிச்சயம்.டப்மாஷ் மிர்ணாளினி, இப்போ நடிகை மிர்ணாளினி.‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் ஏலியனாக அறிமுகமானவர், “இப்போ டப்மாஷ் பண்ணுறதையே விட்டுட்டேன். ஏன்னா சினிமாவுக்கே நேரம் பத்தலை” என்று சந்தோஷமாக அலுத்துக் கொள்கிறார்.

சுமார் அரை டஜன் படங்களில் ஹீரோயினாக ஒப்பந்தமாகி இருக்கிறாராம். ‘ஜிகர்தண்டா’ படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘வால்மீகி’யில் ஹீரோயினாக இவர்தான் நடித்தார். எனவே, அக்கட தேசத்திலும் அம்மணி பிஸி.இப்போது பொன்ராம் இயக்கத்தில் ‘எம்.ஜி.ஆர் மகன்’ படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருப்பவரை பேட்டிக்காக டிஸ்டர்ப் செய்தோம்.

“உங்க பேக்கிரவுண்டு?”“பம்பாயிலே பாட்ஷாவா இருந்தேன்னு சொன்னா நம்பவா போறீங்க? அப்பா ரவி, அம்மா மொழி. நான் பாண்டிச்சேரி பொண்ணு. ஆனா பெங்களூர்லதான் பிறந்தது, படிச்சது எல்லாமே.
இப்போ பெங்களூர்லதான் இருக்கேன். எங்க குடும்பத்தில எல்லாரும் டாக்டராவும், லாயராவும் இருக்காங்க. நான் மட்டும்தான் சினிமா இண்டஸ்ட்ரிக்கு வந்திருக்கேன். அப்போ சினிமாவுக்கு போற ஐடியா எல்லாம் சுத்தமா கிடையாது. இன்ஜினியரிங் முடிச்சிட்டு ஐடி கம்பெனியிலே வேலைக்கு போயிட்டு இருந்தேன்.

காலேஜ் முடிச்சிட்டு வீட்லே சும்மாதான் இருந்தேன். ரொம்ப போர் அடிச்சது. ஜாலியா எதாவது பண்ணணுமேனு தோணுச்சி. அப்போ தான் டப்மாஸ் பண்ண ஆரம்பிச்சேன். நான் போடுற வீடியோ எல்லாமே பயங்கரமா வைரல் ஆனதால நிறைய பேரு ஃபாலோ பண்ணாங்க. ஆனா, டப்மாஷ் மூலமா சினிமாவுக்கு போயிறலாம்னு எல்லாம் அந்த வீடியோவ பண்ணலை.”

“ஹீரோயினா ஆவோம்னு அப்போ நினைச்சாவது பார்த்தீங்களா?”

“அய்யோ… சத்தியமா அப்படி ஒரு நாள் கூட நினைச்சி பார்த்ததில்லை. டப்மாஷ் பண்ணும்போதுதான் எனக்கு நடிக்க வரும்னே தெரியும். ஜாலியா தொடங்கின டப்மாஷ் என்னை சீரியஸான நடிகையா ஆக்கிருச்சி.”

“வால்மீகி படத்துலே நடிச்ச அனுபவம்?”

“பெங்களூர்லே வேலைக்குப் போயிட்டு இருந்தப்போதான் ‘வால்மீகி’ வாய்ப்பு கிடைச்சது. டப்மாஷ் பார்த்துட்டுதான் இந்தப் படத்திலேயும் வாய்ப்பு கொடுத்தாங்க. இந்தப் படத்திலே புஜ்ஜியம்மா கேரக்டர் ரொம்ப க்யூட்டா பண்ணியிருக்கேன். பெரிய புரொடக்‌ஷன், பெரிய ஹீரோகூட நடிச்சதாலே நிறைய கத்துக்கிட்டேன். நான் பெங்களூர்ல வளர்ந்ததால தெலுங்கு மொழியை நல்லாப் புரிஞ்சிக்கிட்டேன். ஓரளவுக்கு பேசவும் தெரியும். அதனால லாங்வேஜ் ஒரு பிராப்ளமா இல்லை.”

“சூப்பர் டீலக்ஸ்?”

“குமாரராஜா சார் ஆபீஸ்ல இருந்து கால் பண்ணி வரச் சொன்னாங்க. சாரை போய் மீட் பண்ணேன். உங்க டப்மாஷ் வீடியோ எல்லாம் பார்த்திருக்கேன், நல்லா நடிக்கிறீங்கன்னு சொன்னாரு. ‘சூப்பர் டீலக்ஸ்’தான் எனக்கு ஃபர்ஸ்ட் படம்.”

“ஐடி வேலையை மிஸ் பண்ணுற ஃபீல் இருக்கா?”

“நிச்சயமா. என்னோட மேனேஜர் லீவ் கொடுத்து நடிக்க அனுப்புவாரு. ஆபீஸ்ல எல்லாருமே ரொம்ப என்கரேஜ் பண்ணுவாங்க. முக்கியமா என்னோட டீம் பயங்கர சப்போர்ட்டா இருந்தாங்க.”

“சினிமா புடிக்கலையா?”

“புடிக்காமலா நடிச்சிட்டு இருக்கேன்? சினிமாவை ரொம்பவே புடிச்சிருக்கு. ஐடி கம்பெனியிலே டிபன் பாக்சிலே சாப்பாடு கட்டிட்டு காலையில வேலைக்குப் போனா சாயந்திரம் தான் வீட்டுக்கு வர முடியும். ரொட்டின் லைஃபா இருக்கும். ஆனா சினிமா அப்படி இல்லை. புதுசு புதுசா நிறைய கத்துத் தருது.”

“கேமரா ஃபியர் இருந்ததா?”

“டப்மாஷ்லே நானேதான் கேமராமேன், டைரக்டர், நடிகை எல்லாமே. ஆனா சினிமாவிலே அப்படி இல்லை. நம்மளை சுத்தி முன்னூறு பேரு நிற்பாங்க. நம்மளை நம்பி வாய்ப்பு கொடுத்ததாலே, பயமும் பொறுப்பும் இருந்துக்கிட்டே இருக்கும்.”

“யார் கூட எல்லாம் நடிக்க ஆசை?”

“சின்ன ஹீரோ பெரிய ஹீரோன்னு இல்லை. எல்லார் கூடவும் நடிக்கணும். வாய்ப்பு கிடைச்சா தமிழ், தெலுங்கு மட்டும் இல்லாம எல்லா லேங்வேஜ்லேயும் நடிக்க ஆசை.”

- தீக்சா தனம்