சூர்யாவைப் பிடிக்கும்.. ஆனா விஜய்யோடு நடிக்கணும்!



இதோ இன்னொரு கன்னடத்துப் பைங்கிளி ரெடி. ‘கோமாளி’, ‘பப்பி’ என்று ரவுண்டு கட்டி அடித்துக் கொண்டிருக்கும் பெங்களூரு தக்காளி சம்யுக்தா ஹெக்டேதான் அவர். பைங்கிளியை சந்தித்தோம்.

“பெங்களூர் டூ சென்னை பயணம் பற்றி சொல்லுங்களேன்?”

“நான் பெங்களூரு பொண்ணு. அப்பாவுக்கு பிசினஸ். அம்மா ஹோம் மேக்கர். அண்ணன் சொந்தமாக ஜிம் வைத்திருக்கிறார். அடிப்படையில் நான் டான்ஸர். சினிமா பக்கம் வருவேன் என்று எதிர்பார்க்கவில்லை.
அந்த வகையில் நான் சினிமாவுக்கு வந்தது ஒரு விபத்து மாதிரி என்று சொல்லலாம். சினிமா எனக்கு பரிச்சயமில்லாத துறையாக இருந்தாலும் கேமரா ஃபியர் இருந்ததில்லை. டான்ஸர் என்பதால் பொது வாழ்க்கை அனுபவம் இருந்ததால் சினிமா பீப்பிள்ஸை எளிதாக அணுக முடிந்தது.”

“தமிழ் சினிமா அனுபவம் எப்படி இருந்தது?”

“என்னுடைய அறிமுகம் கன்னடத்தில் ஆரம்பித்து தெலுங்கில் தொடர்ந்தாலும் தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. காரணம்...தமிழில் நல்ல நல்ல கதைகள் வெளிவருகிறது. அந்தவகையில் தமிழில் நடிப்பது எனக்கு மகிழ்ச்சியே.  தமிழ் சினிமா அனுபவம் குறித்து சொல்வதாக இருந்தால் ஈஸியாக இருந்தது என்று சொல்லலாம். நான் நடித்த படங்கள் சமீபத்தில் வெளிவந்திருந்தாலும் சென்னை எனக்கு அறிமுகமாகி மூன்று வருடங்களாகிவிட்டது. அரைகுறை தமிழும் தெரியும். அந்தவகையில் முதல் நாள் படப்பிடிப்பில் கலந்து கொண்டபோது எந்தவித பயமும் இல்லாமல் இருந்தது.

தமிழில் முதலில் நான் நடித்த படம் ‘பப்பி’. ஆனால் ரிலீஸில் ‘கோமாளி’ படம் முந்திக்கொண்டது. ‘கோமாளி’ படத்தைப் பொறுத்தவரை முதலில் காஜல் அகர்வால் கேரக்டருக்குதான் செலக்டாகியிருந்தேன். ‘பப்பி’ படத்தில் நான் நடித்த காட்சிகளைப் பார்த்துவிட்டு என்னுடைய கேரக்டர் மாறியது.”

“ஜெயம் ரவி?”

“முதல் நாள் ஜெயம் ரவி சாரைப் பார்த்ததும் ஷாக்கானேன். ஏன்னா, அதற்குமுன்தான் அவர் நடித்த ‘போகன்’ படத்தில் வாட்ட சாட்டமான ரவி சாரை பார்த்தேன். ‘கோமாளி’யில் அச்சு அசலாக ஒரு பள்ளி மாணவன் தோற்றத்தில் இருந்தது பெரும் வியப்பாக இருந்தது.

நான் 90 கிட்டாக இருந்தாலும் ரவி சார் படித்த காலத்தின் உணர்வுகளை புரிந்துகொள்ளமுடிந்தது. இப்போது நேரடியாக போன் நம்பர் கேட்டு வாங்குகிறார்கள். அப்போது காதலை லெட்டர் வழியாகத்தான் தெரிவிக்க வேண்டும். இந்த விஷயங்களை ரவி சார் பண்ணும்போது எளிதாக என்னால் கேரக்டருக்குள் டிராவல் பண்ண முடிந்தது. அவருடன் நடித்தபோது கடினமாக இருக்கவில்லை. ‘ஜெயம்’ ரவி சாரை ஃபேமிலி ஹீரோ என்று சொல்லலாம். அவருக்கு அனைத்து தரப்பு ரசிகர்களும்  இருக்கிறார்கள்.”

“உங்கள் நடிப்புக்கு கிடைத்த பாராட்டு?”

“நிறையப் பேர் பாராட்டினார்கள். ‘கோமாளி’ படத்தில் காமெடி கலந்த வேடத்திலும், ‘பப்பி’ படத்தில் சீரியஸ் வேடத்திலும் நடித்தேன். இரண்டு படத்துக்கும் பாராட்டு கிடைத்தது. நடிகர்களில் விஜய்சேதுபதி சார் என்னுடைய நடிப்பை சிலாகித்து பாராட்டினார்.”
“லவ் எக்ஸ்பீரியன்ஸ் எதாவது?”

“என்னுடைய முதல் லவ்வை மறக்க முடியாது. நான் கொஞ்சம் போல்ட் என்பதால் எங்கிட்ட நெருங்கி வர பசங்க யோசிப்பாங்க. அப்படியிருந்தும் சில லவ் புரபோஸல் வந்தது. அப்படி 15 முதல் 20 காதல் கடிதங்கள் வந்துள்ளது.”

“நடிகர்களில் யாரை அதிகம் பிடிக்கும்?”

“இது கான்ட்ரவர்ஸி கேள்வி. ஏன்னா நான் சின்ன வயதிலிருந்தே சூர்யா சார் ஃபேன். முதன் முதலாக ‘வாரணம் ஆயிரம்’ படம்தான் பார்த்தேன். அதிலிருந்து ‘காப்பான்’ வரை பார்த்துவிட்டேன்.  அதனால் எனக்கு சூர்யா சாரைத்தான் பிடிக்கும். ஆனால் விஜய் சாருடன் நடிக்கணும். காரணம், அவருடன் இணைந்து டான்ஸ் ஆடவேண்டும். விஜய் சார் சிறந்த டான்ஸர்.”

“கனவு வேடம்?”

“க்ரைம் த்ரில்லர் ஜானர்ல உருவாகும் படங்களில் நடிக்க பிடிக்கும். எனக்கு மார்ஷல் ஆர்ட்ஸ் தெரியும். அதனால் சண்டைக் காட்சிகளில் நடிக்க பிடிக்கும். விளையாட்டுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். போலீஸ் கேரக்டரும் பண்ண வேண்டும். அது  விரைவில் நடக்கும் என்று நினைக்கிறேன்.”

“அடுத்து?”

“பிரபுதேவா மாஸ்டருடன் ‘தேள்’ படத்தில் நடித்துள்ளேன். அடிப்படையில் நான் டான்ஸர் என்பதால் டான்ஸுக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடிக்க திட்டமிட்டிருந்தேன். அந்தக் கனவின் பாதி ‘தேள்’ படத்தில் நிறைவடைந்துள்ளது. ‘தேள்’ படத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம். காரணம், பிரபுதேவா மாஸ்டர். அந்தப் படத்தில் எனக்கு இரண்டு டான்ஸ் இருக்கிறது. மாஸ்டருடன் இணைந்து டான்ஸ் ஆடியது மறக்க முடியாது. ஆரம்பத்தில் கொஞ்சம் பயமாகவும் இருந்தது.

பிரபு மாஸ்டரின் டான்ஸ் எனக்கு பிடிக்கும். அவருடைய பெரிய ஃபேன் நான். எனக்கு டான்ஸ் தெரிந்திருந்தாலும் மாஸ்டர் எப்படி டான்ஸ் ஆடுகிறார் என்று உன்னிப்பாக கவனித்தேன். அவருடைய நடனத்துக்கும் என்னுடைய நடனத்துக்குமிடையே செக் லிஸ்ட்  பண்ண முடிந்தது. அதன் மூலம் அவரிடம் சில நுட்பங்களைக் கற்றுக் கொண்டேன். என் டான்ஸ் எப்படி இருக்குன்னு பார்த்துவிட்டு சொல்லுங்க.”

“எந்த மொழிக்கு முக்கியத்துவம் தருகிறீர்கள்?”

“மொழி எனக்கு பிரச்னை இல்லை. கதைதான் முக்கியம். தமிழில் நல்ல தொடக்கம் கிடைத்திருப்பதால் தமிழில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். சமீப காலமாக பாலிவுட்டிலும் கதைகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் வெளிவருகிறது. வாய்ப்பு கிடைக்கும்பட்சத்தில் பாலிவுட் படங்களில் நடிப்பேன்.”

“உங்கள் பலம், பலவீனம்... எது?”

“பலம் என்றால் எனக்கு டான்ஸ் நல்லா தெரியும். பலவீனம் என்றால் கொஞ்சம் ஓவராக பேசுவேன்.”

“சம்யுக்தாவுக்கு பிடிச்ச விஷயங்கள்?”

“பெயிண்டிங் பண்ண பிடிக்கும். என்னுடைய வீட்டில் என் ரூமில் என் கைப்பட வரைந்த பெயிண்டிங் இருக்கிறது. பெயிண்டிங் வரையும்போது மன அழுத்தம் குறையும். விசேஷ நாட்களுக்கு நண்பர்களுக்கு பரிசு கொடுக்கும்போது என் கைப்பட வரைந்த ஓவியங்களை பரிசாகக் கொடுத்துள்ளேன்.
அப்புறம் வாட்டர் ரைடிங் பிடிக்கும்.

ஒருமுறை வாட்டர் ரைடிங் பண்ணப் போன இடத்தில் விதித்த கண்டிஷனால் ரைடிங் பண்ணமுடியாத சூழ்நிலை வந்தது. 100  கிலோ உடல் எடை உள்ளவர்களுக்கும் 50 கிலோவுக்கும் கீழே உடல் எடை உள்ளவர்களுக்கும் அனுமதி இல்லை. என்னுடைய உடல் எடை 48 கிலோ. இரண்டு கிலோவை அதிகரிக்க என்னுடைய ஸ்விம்மிங் டிரஸ்ஸில் இரண்டு கிலோவுக்கு சாக்லேட்டுகளை வாங்கி நிரப்பினேன்.”

“உங்கள் அழகு ரகசியம்?”

“அப்படி தனியாக எதையும் மெயின்டெயின் பண்ணுவதில்லை. ஆரோக்கியமான உணவை சரியான நேரத்தில் எடுத்துக் கொள்கிறேன். ஜங்க் ஃபுட்டை தவிர்த்துவிடுவேன். தினமும் நாலைந்து லிட்டர் தண்ணீர் குடிப்பேன். குறைந்தது ஆறேழு மணி நேரம் உறங்குவேன்.”

“எதிர்கால லட்சியம்?”

“எதிர்கால லட்சியம் என்று எதுவுமில்லை. வாழ்க்கையை அதன் போக்கில் வாழ விரும்புகிறேன். நடிகையாக இருப்பதால் உலகம் முழுவதும் ரசிகர்களைப் பெற விரும்புகிறேன். கன்னடம் எனக்கு பிரச்னை இல்லை. தமிழும் எனக்கு தெரியும் என்பதால் ரசிகர்களின் இதயங்களைத் தொட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.”

- சுரேஷ்ராஜா