அஜித்துக்காக காத்திருக்கிறேன்! சரண் உருக்கம்



இயக்குநர் சரண் என்றதும் அஜித் கண் முன் வந்து நிற்பார். ‘காதல் மன்னன்’, ‘அமர்க்களம்’, ‘அட்டகாசம்’, ‘அசல்’ என்று அஜித்தை வைத்து அதிகமான படங்களை இயக்கியவர்.
இவருடைய சாதனையை சமீபத்தில் இயக்குநர் சிவாவும் தொட்டிருப்பதாக அவரே ஞாபகப்படுத்துகிறார். சமீபத்தில் இயக்குநர் சரணை சந்தித்தோம். ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்தைக் குறித்தும் தமிழ் சினிமாவைக் குறித்தும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

“இது என்ன மாதிரி படம்?”

“ஃபேன்டஸி ஆக்‌ஷன் ஜானர்ல இந்தப் படத்தைப் பண்ணியுள்ளேன். இந்த வகையான படத்தை இதுவரை நான் இயக்கியதில்லை. ஆனால் இந்த வகையான படமான ‘முனி’ படத்தை நான் தயாரித்துள்ளேன். ‘முனி’யில் ஆரம்பித்து வைத்த அவ்வகை ஜானர் படங்களின் தாக்கம் இன்றளவும் தொடர்கிறது.
ஆனால் நான் அதே பாணியில் போகாமல் அதே விஷயத்தை வேறு விதமாக சொல்லியிருக்கிறேன். பெரிய ரவுடி. அவன் உலக ரவுடிகள் யாருமே சந்திக்காத பிரச்சனையை சந்திக்கிறான். அதிலிருந்து அவன் எப்படி வெளியே வருகிறான் என்பதுதான் படத்தின் ஸ்டோரி லைன்.”

“இதை ‘வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்தின் இரண்டாம் பாகம் என்று சொல்லலாமா?”

“அப்படி சொல்லக்கூடாது. அந்தப் படம் கிளாசிக்கல் சினிமா. இது பொழுதுபோக்கிற்காக  உருவாக்கப்பட்ட படம். ராஜா மற்றும் எம்.பி.பி.எஸ் என்கிற பெயர் ஒற்றுமையைத் தவிர அந்தப் படத்துக்கும் இந்தப் படத்துக்கும் எவ்வித ஒற்றுமையும் கிடையாது.

சொல்லப்போனால் ‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்துக்கு முதலில் ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’ என்றுதான் தலைப்பு வைத்திருந்தேன். கடைசி நேரத்தில் ‘வசூல்ராஜா’ என்ற தலைப்பு முடிவானது. அந்தவகையில் ‘மார்க்கெட் ராஜா’ என்ற டைட்டில் கைவசம் இருந்ததாலும்,  கதைக்கு டைட்டில் பொருத்தமாக இருந்ததாலும் ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’ என்ற டைட்டில் வைத்தோம்.”

“அஜித், விக்ரம் என்று பிரபலங்களுடன் வேலை செய்துள்ள உங்களுக்கு புதுமுகம் ஆரவ்வுடன் பணிபுரிந்த அனுபவம் எப்படியிருந்தது?”

“ஆரவ்வை இந்தப் படத்துக்கு தேர்வு செய்யும்போது அவருக்கு நடிக்கத் தெரியுமா என்பதை மட்டுமே எதிர்பார்த்தேன். அவர் தனியார் நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றவர் என்று பார்க்கவில்லை. அந்தவகையில் அவருடைய நடிப்புத் திறன் எந்தளவுக்கு இருக்கிறது என்பதைப் பார்த்தேன். முதன் முறையாக அவரைச் சந்திக்கும்போதே அவர் என்னுடைய கதைக்கு பொருத்தமாக இருப்பார் என்று தெரிந்தது.

வளர்ந்துவரும் நடிகர்களில் ஆக்‌ஷன் ஹீரோவுக்கான இடம் காலியாக இருக்கிறது. அந்த வெற்றிடத்தை ஆரவ் நிரப்புவார். அதனால்தான் ஆரவ்வை வைத்து இந்தப் படத்தை இயக்கியுள்ளேன். என்னால் சாக்லேட் பாய் லுக்கில் இருக்கும் ஆரவ்வுக்கு லவ் படம் எடுத்திருக்க முடியும். அவர் தேர்வு செய்யும் படங்கள் ஆக்‌ஷன் கலந்த படமாகவும் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படமாகவும் இருக்கிறது. வெயிட் பண்ணி படங்கள் பண்ணுகிறார். அதனால்தான் இந்தக் கதைக்கு ஆர்வ்வை செலக்ட் பண்ணினேன்.”

“காவ்யா தப்பார்?”

“ஆடிஷனில் நிறைய பேரை பார்த்தேன். அப்போது அவர் நடித்த தெலுங்குப் படத்தை பார்த்தேன். அதுல இம்ப்ரஸாகித்தான் செலக்ட் பண்ணினேன். ‘பழநி’ என்ற படத்தில் காஜல் அகர்வாலைப் பார்த்துவிட்டு ‘மோதி விளையாடு’ படத்தில் நடிக்க வைத்தேன். அதன்பிறகு ‘நான் மகான் அல்ல’ என்று அடுத்தடுத்து ஹிட் படங்கள் மூலம் முன்னணி நடிகைக்கான இடத்தைப் பிடித்தார். அதுமாதிரி காவ்யாவுக்கும் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். இப்போதுகூட விஜய் ஆண்டனியுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.”

“ராதிகா கேரக்டர் எம்.ஆர்.ராதா ஏற்று நடித்த கேரக்டர்போல் இருக்கும் என்று ஆடியோ விழாவில் சொன்னீர்கள்...?”

“எம்.ஆர்.ராதா சார் மாதிரி புரட்சிக் கருத்துக்கள் எதுவும் பேசமாட்டார். பாடிலேங்வேஜ்ஜில் அவருடைய அப்பாவின் சாயல் தெரியும். எம்.ஆர்.ராதா சார் பெண்ணாக இருந்தால் அதற்குட்பட்டு என்ன பண்ணியிருப்பாரோ அதை இதில் ராதிகா மேடம் பண்ணியிருக்கிறார்.

‘அமர்க்களம்’ படத்துக்குப் பிறகு என்னுடைய இயக்கத்தில் நடிக்கிறார். ராதிகா மேடம் கேரக்டரை உள்வாங்கி பண்ணக்கூடியவர். இமேஜை  பொருட்படுத்தமாட்டார். தனக்காக கேரக்டரில் மாற்றங்கள் செய்யமாட்டார். அவருக்கு கேரக்டர் பிடிக்கவேண்டும். பிடித்திருந்தால் அவருடைய பாணியில் நடித்துக் கொடுத்துவிடுவார். அவருடைய நடிப்புக்கு இன்னொரு டேக் கேட்கத் தோன்றாது. முதல் டேக்கிலேயே ஓ.கே.பண்ணிவிடுவார்.  படத்துல அவர் தாதாவாக வருகிறார். கேரக்டர் பெயர் பட்டாளம் சுந்தரிபாய்.”

“திடுதிப்புன்னு ‘நடிகவேள் செல்வி’ என்ற பட்டம் கொடுத்து அமர்க்களப்படுத்திட்டீங்க?”

“படத்துல அவருடைய கேரக்டரை எம்.ஆர்.ராதா சாரை கனெக்ட் பண்ணித்தான் உருவாக்கினேன். நடிகவேள் என்ற பெண்பால் பட்டத்துக்கு அவர் தகுதியானவராக இருந்தார். பேராசிரியர் ஞானசம்பந்தம் சாருடன் அதுகுறித்து டிஸ்கஸ் பண்ணினேன். நடிகவேள் என்ற பட்டத்துக்கு பெண்பால் சொல்ல முடியாது.

அதற்கு பதில் ‘நடிகவேள் செல்வி’ என்ற பட்டம் சூட்டலாம் என்றார். அத்துடன் நிறைய பட்டப் பெயர்களை எழுதி சாய்ஸ் கொடுத்திருந்தார். அதில் ‘நடிகவேள் செல்வி’ பட்டம் எனக்கு பிடித்திருந்தது. இது அவருக்கு பொருத்தமான பட்டம். படத்தில் அதற்கு நியாயம் செய்திருப்பார். அதுமட்டுமல்ல, அவர் நிஜ வாழ்க்கையில் ஆளுமைத்தன்மை உடையவர். அவருக்கு 100 சதவீதம் இந்தப் பட்டம் பொருத்தமானதாக இருக்கும்.”
“வேறு யாரெல்லாம் நடிக்கிறார்கள்?”

“நாசர் நல்லா பண்ணியிருக்கிறார். என்னுடைய நிறைய படங்களில் நடித்திருக்கிறார். அவர் பண்ணக்கூடிய ரோலாக இருந்தால் மட்டுமே அவரை நடிக்க கூப்பிடுவேன். அவர் தவிர வேறு யாரும் பண்ணமுடியாது. சமீபத்தில் பார்க்காத நாசரை இதில் பார்க்கலாம்.

ரோகிணி மேடம் பெரிய ரோல் பண்ணியிருக்கிறார். காது கேளாத, வாய் பேசாதவராக வர்றார். அவர் கேரக்டர் பற்றி அதிகம் வெளியில் சொல்லவில்லை. அவர் கேரக்டருக்காக சித்ரா அம்மா ஒரு தாலாட்டுப் பாடலைப் பாடியிருக்கிறார். அந்தப் பாடல் அடுத்த பத்து வருடத்துக்கான தாலாட்டுப் பாடலாக இருக்கும்.”

“சரண் படம் என்றாலே வைரமுத்து- பரத்வாஜ் காம்போ இருக்கும். இதில் அந்த காம்போ மிஸ்ஸாகியிருக்கிறதே?”

“நான், பரத்வாஜ், வைரமுத்து அடங்கிய கூட்டணி இயல்பான கூட்டணி. அந்தக் கூட்டணி எப்போதும் இருக்கும்.  இந்தப் படத்துக்கு புதியவர்கள் தேவைப்பட்டார்கள். அந்தவகையில் சைமன் கே.கிங்  இசை புதுசா இருக்கும். எழுதி வைத்துக் கொள்ளுங்கள். மிகப் பெரிய இடத்துக்கு வருவார்.”
“டெக்னீஷியன்கள்?”

“முதன் முறையாக என் சகோதரர் குகன் இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.  நான் தயாரித்த ‘முனி’ படத்துக்கு அவர் கேமரா பண்ணியிருந்தார். இப்போது அவர் தெலுங்கில் டைரக்டராகவும் இருக்கிறார். சமீபத்தில் ‘118’ என்ற தெலுங்குப் படத்தை இயக்கி வெற்றி பெற்றுள்ளார். அவர் கவனம் முழுவதும் டைரக்‌ஷனில் மட்டுமே உள்ளது. எனக்காக இந்தப் படத்தை பண்ணிக் கொடுத்தார். அவர் இந்தப் படத்தில் இருப்பது பெரிய பலம்.

சுரபி ஃபிலிம்ஸ் சார்பில் எஸ்.மோகன் தயாரித்திருக்கிறார். அவர் ‘காதல் மன்னன்’ படத்திலிருந்து எனக்கு பழக்கம். அந்தப் படத்தை என்.எஸ்.சி. ஏரியாவில் விநியோகம் பண்ணியிருக்கிறார். என் மீது மரியாதை கலந்த நட்பு உண்டு. நீண்டநாட்களாக நாங்கள் இணைந்து படம் பண்ண வேண்டும் என்று பேசுவோம். தற்போதுதான் அதற்கான சூழ்நிலை கிடைத்தது. அவர் எதிர்பார்த்த அனைத்து அம்சங்களும் இதில் இருப்பதால் ஹேப்பியாக இருக்கிறார்.”

“அஜித்தை வைத்து நான்கு படங்கள் இயக்கியிருக்கிறீர்கள்?”

“அடுத்து எப்போது என்று கேட்கிறீர்கள். இயக்குநர் சிவாவும் நான்கு படங்கள் பண்ணியிருக்கிறார். ஐந்தாவது படம் பண்ண நான் ரெடி. முதல் வாய்ப்பாகட்டும், அடுத்தடுத்த படங்களாட்டும்,  எல்லாம் அஜித் சார் கொடுத்த வாய்ப்பு. மீண்டும் நான் அஜித் சாரை வைத்து படம் பண்ணுவது அவர் கையில்தான் இருக்கிறது. அதற்கான வாய்ப்பு அமையும்போது பண்ணுவேன்.

அஜித் சார் இப்போது வருடத்துக்கு ஒரு படம் அல்லது மூன்று வருடத்துக்கு இரண்டு படம் என்கிற ரீதியில் படம் பண்ணுகிறார். அஜித் சாரை வைத்து படம் இயக்க வேண்டும் என்பது எல்லா இயக்குநர்களின் கனவுகளில் ஒன்று. புது இயக்குநர்களுக்கான கதவுகள் திறந்திருப்பதால் நல்ல கதைகளுடன் அவரை நெருங்குகிறார்கள்.  நான்தான் பண்ணவேண்டும் என்றில்லை.

பலரின் கனவு நிறைவேறுகிறது என்றால் தூரமாக நின்று  அதை பிரமிப்புடன்  ரசிக்கிறேன். எனக்கான வாய்ப்பு வரும்போது பண்ணுவேன். காத்திருக்கிறேன். அப்படி பண்ணும்போது என் கேரியரில் அந்தப் படம் பிரம்மாண்டமாக இருக்கும். அஜித் சாருக்காக ஒரு கதை அல்ல. அலமாரி முழுவதும் கதை வைத்திருக்கிறேன்.”

“இளம் நடிகர்களில் யாரை வைத்து படம் பண்ண ஆர்வமாக இருக்கிறீர்கள்?”

“ஒவ்வொருவருக்கும் ஒரு பாணி இருக்கும். அது படத்துக்கு படம் மாறுபடும். அருண் விஜய்க்கு நீண்ட  போராட்டத்துக்குப் பிறகுதான் அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதற்கு அஜித் சாருக்கு நன்றி சொல்ல வேண்டும். ‘என்னை அறிந்தால்’ படத்தில் அவர் ஸ்பேஸ் கொடுத்திருக்கவில்லை என்றால் அவருக்கான அங்கீகாரம் தாமதமாகியிருக்கும். கதைக்கு மேட்ச் ஆகும்போதுதான் ஹீரோ காம்பினேஷன் கரெக்ட்டாக இருக்கும். இங்கு எல்லாரும் நல்ல நடிகர்கள். வாய்ப்பு அமையும் பட்சத்தில் அவர்களுடன் வேலை செய்வேன்.”

“இளம் இயக்குநர்களின் படங்களை கவனிக்கிறீர்களா?”

“இயக்குநர்களாகிவிட்டால் அவர்கள் இயக்குநர். அதில் இளம் இயக்குநர், பழம்பெரும்  இயக்குநர் என்கிற வித்தியாசம் கிடையாது. கல்லூரியில் படிக்கும்போது மணிரத்னம் சார் என்னுடைய  ஆதர்ச இயக்குநர். என் மகள் படிக்கும்போதும் அவர் இளைய தலைமுறையை ஈர்க்கிறார். இப்போது சினிமாவில் இயக்குநர்களின் முயற்சிகள் நன்றாக இருக்கிறது. எல்லோரும்  பட்டைதீட்டப்பட்டபிறகு வருகிறார்கள். குறும்படங்கள் மூலம் கவனம் ஈர்க்கிறார்கள்.

‘96’, ‘ராட்சசன்’ படங்களின் இயக்குநர்கள் தமிழ் சினிமாவுக்கு நல்வரவுகள். மிரட்டியிருந்தார்கள். ‘ 96’ படத்தை அவசர அவசரமாக காட்சிகளை அடுக்காமல் நியாயமாக எடுத்திருந்தார்கள். ‘கோமாளி’ இயக்குநர் நல்லா பண்ணியிருந்தார். வயதில் இளையவராக இருந்தாலும் மெச்சூரிட்டியுடன் பண்ணியிருந்தார்.

என்னைப்பொறுத்தவரை ஒருவர் இயக்குநர்  ஆகிவிட்டால் அவர் எனக்கு போட்டி இல்லை. என்னுடைய போட்டி அசிஸ்டெண்ட் இயக்குநர்கள், அசோசியேட் இயக்குநர்களுடன்தான். ஏன்னா, அவர்கள் எப்படி பண்ணுவார்கள் என்று தெரியாது. அந்தவகையில் படம் பண்ணியவர்களுடன் எனக்கு போட்டி இல்லை.”

- சுரேஷ்ராஜா