அருவம்



கலப்படத்தை ஒழிக்கும் பேய்!

சமீபத்தில் வெளிவந்த ‘வேலைக்காரன்’ படம் போன்று சமூகப் பொறுப்புணர்வு உள்ள கதைக்களம். அடடே... நல்ல கதை போல் தெரிகிறதே... என்று நினைத்தால், வெயிட் ப்ளீஸ். படம் எப்படி என்று பார்க்கலாம்.
கலப்படம் இல்லாத உணவை மக்கள் சாப்பிட வேண்டும் என்ற கனவுடன் உணவுப் பாதுகாப்புத் துறையில் திறமையாகப் பணி புரிந்து வருபவர் சித்தார்த். தனிக்கட்டையான இவருக்கு இவரைப் போன்ற சமூக சிந்தனையுள்ள கேத்தரின் தெரசா மீது காதல் ஏற்படுகிறது.

இதற்கிடையில் சித்தார்த் உணவுப் பரிசோதனைக்காக வேட்டையில் இறங்கும்போது அது மாபியா கையில் இருக்கிறது என்பதை அறிந்துகொள்கிறார். அவர்களுக்கு சட்ட ரீதியாக தண்டனை வாங்கிக் கொடுத்து அவர்கள் கதையை முடிக்கவேண்டும் என்று நினைப்பதற்குள் சித்தார்த்தின் கதையை முடித்துவிடுகிறது மாபியா கும்பல்.

அதன்பின்னர் சித்தார்த் தன்னுடைய காதலி கேத்தரின் தெரசாவின் உடலுக்குள் புகுந்து மாபியா கும்பலை எப்படி வேட்டையாடுகிறார்  என்பது  மீதிக் கதை.சித்தார்த் சில இடங்களில் அமுல் பேபி போலவும் சில இடங்களில் முரட்டு சிங்கிளாகவும் லுக் விடுகிறார். அதிகாரி என்பதால் கெத்து காட்ட வேண்டும் என்பதால் கொஞ்சம் ஓவர் ஆக்ட் கொடுத்திருக்கிறார்.

வாசனையை நுகர முடியாத கேரக்டரில் நடித்திருக்கிறார் கேத்தரின் தெரசா. ஆனால் கேத்தரினை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற வாசனையே தெரியாமல் படம் பண்ணியிருப்பது மன்னிக்க முடியாத தவறு.சதீஷ், ஆடுகளம் நரேன், மனோபாலா கொஞ்சம் சிரிக்க வைக்கிறார்கள்.

தமன் இசையில் பாடல்களுக்கு மார்க் கொடுத்தாலும் பின்னணி இசைக்காக அந்த மார்க்கை அவரே வாபஸ் பண்ணுமளவுக்கு இம்சிக்கிறார். அவ்வளவு நாய்ஸ்!டெக்னீஷியன்களில் ஏகாம்பரம் மட்டுமே தன் பணியை செவ்வனே செய்து முடித்திருக்கிறார்.

காமெடி, ஹாரர், சமூகப் பொறுப்பு என்று புத்திசாலித்தனமாக கலந்துகட்டி கவனம் ஈர்த்திருக்கும் இயக்குநர் சாய்ஷேகர் நல்ல படத்தை வீணடித்துவிட்டாரே என்ற சிந்தனை தோன்றாமல் இல்லை.