ஓமன பெண்ணே



Vannathirai magazine, Vannathirai weekly magazine, Tamil Magazine Vannathirai, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

                     தமிழ் சினிமாவிற்கு ஹீரோயின் பஞ்சம் வராமல் பார்த்துக் கொள்வது மலையாள தேசம்தான். இப்போது திறமை காட்ட வந்திருக்கும் சில ஓமன பெண்குட்டிகளைப் பற்றிய சிறு குறிப்பு:

அர்ச்சனா கவி

மலையாள ஹிட் படமான ‘நீலத்தாமரா’வில் அறிமுகமான கையோடு தமிழுக்கு வந்துவிட்டார். முதல் படத்திலேயே மோதிரக் கையால் குட்டு வாங்குகிற வாய்ப்பு. ‘அரவான்’ படத்தில் வசந்தபாலன்தான் அறிமுகப்படுத்துகிறார். தமிழ், இந்தி ஆங்கிலம் என மும்மொழிகள் தெரியும். கொஞ்சம் அம்பிகா சாயல் இருப்பது கூடுதல் தகுதி.

செல்லி

திருவனந்தபுரத்தில் பாப்புலரான தியேட்டர் ஆர்ட்டிஸ்ட். சினிமா வேண்டாம், நாடகமே போதும் என்று இருந்தவரை அழைத்து வந்து ‘தங்க மீன்’ படத்தில் தனக்கு ஜோடியாக்கி இருக்கிறார் ‘கற்றது தமிழ்’ ராம். அகன்ற கண்கள், முத்துப்பல் வரிசை என அப்படியே அச்சு அசலான தமிழ் முகம். முதல் படத்திலேயே ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிக்கிறார்.

இனியா

மலையாளத்தில் 3 படங்கள், தமிழில் இரண்டு படங்கள் நடித்திருந்தாலும் வெளிச்சத்துக்கு வராமல் இருந்தவர் மீது வெளிச்சம் பாய்ச்சியிருக்கிறது ‘வாகை சூட வா’.  2005ல் ‘மிஸ் திருவனந்தபுரம்‘, 2010ல் ‘மினி ஸ்கிரீன் மகராணி’ என ஏகப்பட்ட அழகி பட்டங்களை வைத்திருக்கிறார். ‘வாகை சூட வா’வில் பாவாடை தாவணியில் படுத்தியெடுத்தவர், இப்போது ‘மவுன குரு’வில் மார்டன் மருத்துவ மாணவி. ஹீரோ அருள்நிதி.

நித்யா மேனன்

மொழு மொழு முகமும், வாளிப்பான உடலுமாய் பயமுறுத்துகிறார் நித்யா மேனன். மலையாளப்படங்களில் அறிமுகமாகி, அப்புறம் தெலுங்கில் முகாம் கொண்டு, அங்கு ஒரு வெற்றிப் படத்தில் நடித்துவிட்டு தமிழுக்கு வந்திருப்பவர். ‘வெப்பம்‘ படத்தில் குப்பத்து பெண்ணாகவும், ‘180’ படத்தில் மார்டன் பிகராகவும் இருவேறு தளங்களிலும் திறமை காட்டியிருக்கிறார். ரேவதி சேச்சி மாதிரி கேரக்டர் ரோல் நிறைய பண்ண வேண்டும் என்பது நித்யாவின் ஆசை.

பார்வதி ஓமனக்குட்டன்

இந்தியாவே அறிந்த அழகி. 2005ல் ‘மிஸ் இந்தியா’ பட்டம் பெற்றவர். 2010ல் உலக அழகி பட்டத்தை ஒரு கேள்வியால் மிஸ் பண்ணியவர். இருந்தாலும் இரண்டாவது கிடைத்த தால் இந்தி சினிமா அள்ளி அணைத்துக் கொண்டது. ‘யுனைடெட் சிக்ஸ்’ படத்தில் நடித்த கையோடு தமிழுக்கு வந்து விட்டார். வந்ததுமே ஜாக்பாட்தான். பில்லா&2வில் ‘தல’க்கு ‘தலைவி’யாகிறார்.

கவிதா நாயர்

பூர்வீகம் மலையாள தேசம் என்றாலும் வசிப்பது மும்பை. அதனால் கேரள அழகும், மும்பை கிளாமருமாய் நிற்கிறார். முதல் படமே மூத்த நிறுவனமான ஏவிஎம்மின் ‘முதல் இடம்’. தமிழில் முதல் இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக இங்கேயே செட்டிலாகவிருக்கிறார். விதார்த்துக்கு ஜோடியாக அறிமுகமானாலும் விஜய்க்கு ஜோடியாகியே தீருவது என்ற முடிவில் இருக்கிறார்.
பி.எம்.எம்