சந்தானம் நரகாசுரன் சந்திப்பு



Vannathirai magazine, Vannathirai weekly magazine, Tamil Magazine Vannathirai, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

                 திடீரென்று சந்தானத்தின் முன்பாக வந்து நின்ற மாறுவேடம் போட்ட சிங்கமுத்து ‘‘என்னை யாரென்று தெரிகிறதா?’’ என்று கேட்கிறார்.

சந்தானம் : “டேய் ஸ்டுப்பிட். உள்ளூர் ஆயா முன்னாடி ஓபாமாவே வந்தாலும் நீ யாருன்னுதான் கேட்கும். நீ யாருங்கிறது உனக்கே தெரியலைன்னா கஜினி சூர்யாவின் ஒரிஜினல் கேரக்டர் நீயாகதான் இருக்கும்” என்றதும், “நான்தான் நரகாசுரன்’’ என்று சிங்கமுத்து குரலை உயர்த்திச் சிரிக்க, “ஓ நீயா அது” என அலட்டிக்கொள்ளாமல் நிற்கிறார் சந்தானம்.

நரகாசுரன் : பூலோக மக்கள் என் மீது இன்னும் கோபத்தில் இருக்கிறார்களா என்பதைப் பார்க்க வந்தேன்.

சந்தானம் : காந்தி தாத்தா பிறந்த நாளைகூட நாங்க அவ்வளவு கிராண்டா கொண்டாட மாட்டோம். ஆனா நீ செத்த நாளை தீபாவளிங்கற பேர்ல புதுப்படம், புது டிரஸ்ஸு, பலகாரம், பட்டாசு, டாஸ்மாக் சரக்குன்னு செமத்தியா என்ஜாய் பண்ணும்போது உன் மேல கோபம் வருமா?

நரகாசுரன் : வேறு எப்படியெல்லாம் தீபாவளியைக் கொண்டாடுவீர்கள்?

சந்தானம்  : ஒரு ஹீரோவோட படம் ஊத்திக்கிட்டா இன்னொரு ஹீரோ பார்ட்டி கொடுத்து கொண்டாடுவோம். சோத்துக்கு இல்லாம சுருண்டு கிடக்கிற நாய் வாலுல சரவெடிய கட்டிவிட்டு இதுக்கு முன்னாடி தமிழ் சினிமா வில்லன் மாதிரி நீ சிரிச்சில்ல, அதுமாதிரி ஹா ஹா ஹான்னு சிரிப்போம். ஐம்பது ரூபா டிக்கெட்டை ஐந்நூறு ரூவா கொடுத்தாவது படம் பார்ப்போம்.

நரகாசுரன் : உங்க இயக்குனர்கள் எப்படி கதை உருவாக்குகிறார்கள்?

சந்தானம் : அதுவா வெரி சிம்பிள். பர்மா பஜாருக்கு ஆள அனுப்பியோ அல்லது அங்கிருந்து ஆள வரவச்சோ நிறைய டி.வி.டிக்கள் வாங்குவாங்க. அதிலிருந்து சில சீன்களை உருவி கதையாக்கிடுவாங்க. இப்பெல்லாம் இன்னும் அட்வான்ஸா போயி, மொத்த படத்தையும் சுட ஆரம்பிச்சுட்டாங்க. டிஸ்கஷன் ரூம்ல அவங்க எந்த ‘சரக்கையோ’ யூஸ் பண்ணிட்டு போகட்டும். படத்தில சொந்த சரக்கு கொஞ்சமாச்சும் இருந்தாத்தானே நல்லாயிருக்கும்.

நரகாசுரன் : அந்த மாதிரி காபி அடிக்கிற இயக்குனர்கள் படத்தில் நீங்களும் நடிக்கத்தானே செய்றீங்க?

சந்தானம் : டேய் நீ நரகாசுரனா நாரதரா? என்ன வம்புல மாட்டிவிட்டு வேடிக்கை பார்க்கப் போறீயா? ஆமா வந்ததிலிருந்து நீயே கேள்வி கேட்டுட்டு இருக்க. இப்போ நான் கேட்கிறேன். நீ சொல்லு. பார்ப்போம்?

நரகாசுரன் : ஒன்று சோனா மேட்டர். இன்னொன்று ராணா மேட்டர். சோனா ஆஃப் ஆகிவிட்டார். ராணா ஸ்டார்ட் ஆகப்போகிறது.

சந்தானம் : பேசாம நீ சினிமா ரிப்போர்ட்டர் ஆகிடலாம். அவ்வளவு அப்டேட்ல இருக்க. உன்ன கிருஷ்ணர் வதம் பண்ணிட்டதா எங்க தாத்தா, பாட்டியெல்லாம் கதை சொல்லி கேட்டிருக்கோம். அப்புறம் எப்படி நீ உயிரோட வந்திருக்க?

நரகாசுரன் : தம்பி லாஜிக்கெல்லாம் பேசக்கூடாது. உங்க தமிழ் சினிமாவுல 100 பேரு வந்தாலும் ஒல்லியா இருக்குற ஹீரோ ஒத்த ஆளா நின்னு அடிக்கலையா?

சந்தானம் : தனுஷ் மட்டும் இதை கேட்டாருன்னா உன்ன உண்டு  இல்லைன்னு பண்ணிடுவார். ஃபைட் சீனாவது பரவாயில்லை. மாத்து தாவணிக்கே வழியில்லாத ஹீரோயின் மலேசியாவுல டூயட் பாடுற மாதிரி எடுக்கிறதெல்லாம் ரொம்ப கொடுமை. எனக்கு ஒரு சந்தேகம்.

நரகாசுரன் : கேளுங்கள்.

சந்தானம் : பத்து தலை ராவணன் ரொமான்ஸ் மூடுல இருந்தா எந்த வாயால கிஸ் கொடுப்பார்?

நரகாசுரன் : இந்த கேள்விக்கு கமலிடமே பதில் கிடைப்பது கஷ்டம். சொர்க்கம், நரகம் பற்றிக் கேளுங்கள் சொல்கிறேன்.

சந்தானம் : அதுதான் எங்களுக்கும் தெரியுமே?

நரகாசுரன் : பூலோக மக்களுக்குத் தெரிய சாத்திய மில்லையே?

சந்தானம் : ஏன் இல்லை. எங்க ஊரு டிராபிக் ஜாமில் மாட்டினா அதுதான் நரகம். அதே ஈ.சி.ஆர் ரோட்ல ஒரு பொண்ணோட பைக்ல போனா அதுதான் சொர்க்கம். இன்னும் சொல்றேன் கேட்டுக்க. டிரையின்ல டாய்லெட்டுக்கு பக்கத்து சீட்டு கிடைச்சிருச்சுன்னா அது நரகம். ஃபிளைட்ல போறப்போ ஓசில கொடுக்குற சரக்கு சொர்க்கம்.

நரகாசுரன் : தம்பி இவ்வளவு கருத்து சொல்றீங்களே, நீங்க தொடர்ந்து கதாநாயகனாகவே நடிக்கலாமே?

சந்தானம் : டேய், இப்போதாண்டா உன்னோட நல்ல மனசு புரியுது. என்ன எப்படியாவது காலி பண்ணணும்னு திட்டம்போட்ட ஒரு கும்பல்தான் உன்னை இங்க அனுப்பி வச்சிருக்கு. கவுண்டமணி மாதிரி எட்டி உதைக்கிறதுக்குள்ள ஓடிப் போயிடு. எனக்காக வெயிட் பண்ணிகிட்டு இருக்கும் புரொடியூசர்களுக்கு காமெடியனா நடிக்க கால்ஷீட் கொடுத்துட்டு ஷூட்டிங் கிளம்புறேன்” என்றபடி நடையைக் கட்டுகிறார்.
கற்பனை : அமலன்
ஓவியம் : அரஸ்