ரஜினி திரைப்படத்துறையில் கால் பதித்து 36 ஆண்டுகள் ஆகிறது. ‘அபூர்வ ராகங்கள்’ தொடங்கி ‘ராணா’ வரையிலான அவரது திரைப் பயணத்தின் சில முக்கிய 36 சுவடுகள் இங்கே...
1 ’அபூர்வ ராகங்கள்’ படத்தில் அறிமுகமான ரஜினி பேசிய முதல் வசனம் ‘பைரவி வீடு இதுதானே’ என்பதுதான். நடித்த காட்சிகள் 6.
2 ரஜினி சிகரெட் ஸ்டைல் அறிமுகமான படம் ‘மூன்று முடிச்சு’. படப்பிடிப்பு காலத்தில் அவர் பிடித்த சிகரெட்டுகளின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது.
3 ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்த சிவகுமார் வில்லனாகவும், வில்லனாக நடித்துக் கொண்டிருந்த ரஜினி ஹீரோவாகவும் நடித்த படம் ‘புவனா ஒரு கேள்விக்குறி’.
4 ’16 வயதினிலே’ படத்தில்தான் ரஜினி முதன் முறையாக பன்ஞ் டயலாக் பேசினார். பின்பு அந்த டயலாக்கை பல படத்தில் பேசினார். அந்த டயலாக்கையே தலைப்பாக கொண்டு ஒரு படமும் வெளியானது. அந்த டயலாக் ‘இது எப்படி இருக்கு’.
5 ரஜினி பல படங்களில் வில்லனாக நடித்திருந்தாலும் கொடூர வில்லனாக நடித்த படம் ‘ஆடுபுலி ஆட்டம்’. ஒவ்வொரு வில்லத்தனத்தையும் செய்து விட்டு ‘இது ரஜினி ஸ்டைல்’ என்று வசனம் பேசுவார்.
6 கண்டக்டராக இருந்து சூப்பர் ஸ்டாரான ரஜினி பஸ் டிரைவராக நடித்த படம் ‘ஆறு புஷ்பங்கள்’. விஜயகுமாருடன் இணைந்து நடித்த முதல் படம்.
7 ரஜினி நடித்த முதல் திகில் படம் ‘ஆயிரம் ஜென்மங்கள்’. படத்தில் அவருக்கு ஜோடி இல்லை. உடன் நடித்த விஜயகுமாருக்கு ஜோடி லதா.
8 ஒன்பது நாட்களில் நடித்து முடித்த படம் ‘மாங்குடி மைனர்’. 6 நாட்களில் நடித்த படம் ‘அன்புள்ள ரஜினிகாந்த்’. ரஜினியின் வீட்டில் படப்பிடிப்பு நடத்தப்பட்ட ஒரே படமும் இதுதான்.
9 அக்ரஹாரத்து இளைஞனாக பிராமண லாங்குவேஜ் பேசி நடித்த ஒரே படம் ‘சதுரங்கம்’. குப்பத்து சென்னைத் தமிழ் பேசி நடித்த படம் ‘தப்புத் தாளங்கள்’.
10 ’வணக்கத்துக்குரிய காதலியே’ முதல் தோல்விப் படம்.
11 நடித்த படங்களிலேயே ரஜினிக்கு பிடித்த படம் ‘முள்ளும் மலரும்’, ரஜினி மகள்களுக்கு பிடித்த படம் ‘மூன்று முகம்‘.
12 ஆங்கிலத்தில் வெளிவரும் கவ்பாய் ஸ்டைலில் நடித்த படங்கள் ‘தாய்மீது சத்தியம்’, ‘அன்னை ஓர் ஆலயம்’.
13 சிவாஜியுடன் நடித்த முதல் படம் ‘ஜஸ்டிஸ் கோபிநாத்’. சிவாஜியின் வளர்ப்பு மகனாக நடித்தார்.
14 முதல் பேண்டஸி படம் ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’. ஒரிஜினல் கதையில் இல்லாத கமருதீன் என்ற கேரக்டர் ரஜினிக்காக உருவாக்கப்பட்டது.
15 மேனியாக் டிப்ரெசிங் நோயால் பாதிக்கப்பட்ட ரஜினி குணமடைந்த பிறகு நடித்த படம் ‘தர்மயுத்தம்’. படத்திலும் அதே மாதிரியான நோயால் பாதிக்கப்பட்டவராகவே நடித்திருந்தார்.
16 இளைஞன், நடுத்தர வயதுக்காரர், முதியவர் என்ற மூன்று பருவ கேரக்டரில் நடித்த படம் ‘ஆறிலிருந்து அறுபது வரை’.
17 ’அன்னை ஓர் ஆலயம்’ படமானபோது ரஜினியால் அந்தப் படம் பல வகையில் தாமதமானது. இதனால் தயாரிப்பு கம்பெனிக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. கடைசி நாள் படப்பிடிப்பு முடிந்ததும் ரஜினி இயக்குனர் தியாகராஜனிடம் ஒரு கடிதம் கொடுத்து ‘இதை வீட்டில் சென்று படித்து பாருங்கள்’ என்றார். வீட்டிற்கு சென்று கடிதத்தை படித்தார் தியாகராஜன். ‘என்னால் உங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கு வருந்துகிறேன். அதனால் 2 மாதம் கால்ஷீட் தருகிறேன். உங்கள் நஷ்டத்தை சரி செய்து கொள்ளுங்கள்’ என்று எழுதப்பட்டிருந்தது. அந்த கால்ஷீட்டில் தெலுங்குப் படம் ஒன்றை இயக்கினார் தியாகராஜன்.
18 முதன் முதலில் இரட்டை வேடத்தில் நடித்த படமும், முதல் வெள்ளி விழா படமும் ‘பில்லா’.
19 சூப்பர் ஸ்டார் பட்டத்தை ‘பைரவி’ படத்தின்போது தந்தது கலைப்புலி எஸ்.தாணு. டைட்டில் கார்டில் ‘சூப்பர் ஸ்டார்’ என்று போடப்பட்டது ‘நான் போட்ட சவால்’. பிடித்த நடிகரான எம்.ஆர்.ராதாவுடன் ரஜினி நடித்த ஒரே படமும் ‘நான் போட்ட சவால்’தான்.
20 முதல் சினிமாஸ்கோப் படம் ‘பொல்லாதவன்’. முதல் 70எம்எம் படம் ‘மாவீரன்’.
21 ’முரட்டுக்காளை’ படத்தின் மூலம் ஜெய்சங்கர் வில்லனாக அறிமுகமானார். கிளைமாக்சில் அவரை போலீஸ் கைது செய்து அடித்து இழுத்துச் செல்வது போன்று காட்சி எடுக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதற்கு ரஜினி எதிர்ப்பு காட்டினார். ‘ஜெய்சங்கர் எவ்வளவு பெரிய ஹீரோ. அவரை அப்படி படம் எடுக்கக் கூடாது’ என்றார். அதனால் கைது செய்து ஜீப்பில் ஏற்றிச் செல்வது போன்று படமாக்கப்பட்டது.
22 மீசையை மழித்து விட்டு நடித்த முதல் படம் ‘தில்லுமுல்லு’. கே.பாலசந்தர் படத்தின் கதையைக்கூறி ‘உன் அழகான மீசையை இழக்க வேண்டும்’ என்றார். மறுநாளே மீசையை மழித்து விட்டு கே.பி. முன்னாடி போய் நின்று ‘நீங்க எதிர்பார்த்த மாதிரி இருக்கிறேனா’ என்றார். அவ்வளவு குரு பக்தி.
23 ஆர்.எம்.வீரப்பன் எம்.ஜி.ஆருக்காக எழுதி வைத்திருந்த கதைதான் ‘ராணுவ வீரன்’. அவர் முதல்வராகிவிட்டதால் அந்த கதையில் நடிக்க தகுதியானவர் ரஜினிதான் என்று அவரை வைத்து படம் எடுத்தார். தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி ரஜினியுடன் நடித்த ஒரே படமும் இதுதான்.
24 ’ரங்கா’ 50வது படம். இந்தப் படத்தில் ரஜினியின் அக்காவாக ஜெயலலிதா நடிப்பதாக இருந்தது. ஆனால் எம்.ஜி.ஆர் ‘நான் அம்முவை அரசியலில் ஈடுபடுத்தப் போகிறேன். அவருக்கு பதிலாக கே.ஆர்.விஜயாவை நடிக்க வையுங்கள். அவரிடம் நான் பேசி விட்டேன்’ என்று சொல்லி கே.ஆர்.விஜயாவை எம்.ஜி.ஆர்தான் நடிக்க வைத்தார்.
25 ரஜினிக்கு தேசிய விருது எதிர்பார்க்கப்பட்ட படம் ‘எங்கேயே கேட்ட குரல்’. பண்பட்ட கிராமத்து மனிதராக நடித்திருந்தார். சகோதர நடிகைகள் அம்பிகாவும், ராதாவும் அக்கா தங்கையாக நடித்திருந்தார்கள்.
26 ‘பாயும் புலி’ படத்தில் ஒரு சண்டைக் காட்சியில் எம்.ஜி.ஆர் போஸ்டர் வரும்படியும் அதற்கு ரஜினி வணக்கம் சொல்வது போலவும் ஒரு காட்சி வைத்திருந்தார்கள். அதில் நடிக்க ரஜினி மறுத்தார். ‘நான் எம்.ஜி.ஆர் ரசிகர்களை ஏமாற்ற விரும்பவில்லை’ என்று அதற்கு காரணம் சொன்னார்.
27 ரஜினியின் சில படங்களுக்கு கடைசி நேரத்தில் பெயர் மாற்றப்பட்டது. ‘நானே ராஜா நீயே மந்திரி’ என்ற பெயர் ‘தம்பிக்கு எந்த ஊரு’ என்று மாறியது, ‘நான் காந்தி அல்ல’ படம் ‘நான் மகான் அல்ல’ என்று ஆனது. ‘காலம் மாறிப்போச்சு’ ‘தர்மதுரை’ ஆனது.
28 ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ படத்தில் ‘ரஜினி அங்கிள்’ என்று செல்லமாக அழைத்த குழந்தை நட்சத்திரம் மீனா, ‘எஜமான்’ படத்தில் ஜோடியாக நடித்தார்.
29 ‘தர்மதுரை’ படம் பொங்கலுக்கு வெளிவரும் என்று அறிவிக்கப் பட்டது. ஆனால் சில காரணங்களால் படம் தாமதமாகி பொங்கலுக்கு வெளிவர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால் ரசிகர்கள் தமிழ் நாடெங்கும் தர்மதுரையை வரவேற்று போஸ்டர் ஒட்டிவிட்டார்கள். இதைக் கேள்விப்பட்ட ரஜினி ரசிகர்களை ஏமாற்றக்கூடாது என்று கருதி 72 மணிநேரம் தொடர்ந்து நடித்து பொங்கலுக்கு படத்தை வெளியிடச் செய்தார்.
30 ‘மூன்று முடிச்சு’, ‘மாப்பிள்ளை’, ‘மன்னன்’, ‘படையப்பா’ படங்களுக்கு ஒரு ஒற்றுமை உண்டு. மூன்றிலுமே ரஜினியோடு மோதுபவர்கள் பெண்கள்.
31 ‘பாண்டியன்’ படம் எஸ்.பி. முத்துராமன் டீமுக்காகவும், ‘அருணாச்சலம்’ படம் பல்வேறு காலகட்டங்களில் தனக்கு உதவிய நண்பர்களுக்காகவும் ரஜினி நடித்துக் கொடுத்த படங்கள்.
32 நடிகர்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தபோது ரஜினி ‘என் சம்பளத்தை நான்தான் தீர்மானிப்பேன்’ என்று கூறியிருந்தார். அதனால் விநியோகஸ்தர்கள் சங்கம் ரஜினிக்கு ரெட் போட்டது. ‘உழைப்பாளி’ படம் வெளிவந்தபோது அதை வாங்க விநியோகஸ்தர்கள் முன்வரவில்லை. ரஜினி தானே சொந்தமாக வெளியிட்டார். படம் 100 நாட்கள் ஓடியது. விநியோகஸ்தர் சங்கம் பகிரங்க மன்னிப்பு கேட்டது. தயாரிப்பாளர்கள் நேரடியாக படத்தை திரையிடும் வழியையும் திறந்து வைத்தது. படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க முடியாத சோகத்தில் இரண்டு ரசிகர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள்.
33 முதன் முறையாக ஜப்பான் மொழியில் டப் செய்யப்பட்ட படம் ‘முத்து’. ஜப்பானில் அவருக்கு பெரிய ரசிகர் வட்டத்தை ஏற்படுத்தியது. முத்துவின் ஜப்பானிய பெயர் ‘டான்சிங் மகராஜா’.
34 ‘படையப்பா’ படம் 21 ஆயிரம் அடி எடுக்கப்பட்டிருந்தது. எந்த காட்சியையும் குறைக்க முடியவில்லை. படத்துக்கு இரண்டு இடைவேளை விட்டு ரிலீஸ் செய்ய திட்டமிட்டார்கள். ரஜினிதான் ‘ரசிகனை ரொம்ப கொடுமைப்படுத்தக்கூடாது’ என்று வேடிக்கையாக சொல்லி படத்தின் நீளத்தை குறைத்து வெளியிடச் செய்தார்.
35 ரஜினி தயாரித்த முதல் படம் ‘மாவீரன்’. ரஜினி திரைக்கதை வசனம் எழுதியது ‘வள்ளி’. பாடிய படம் ‘மன்னன்’.
36 அதிக நாட்கள் ஓடியது ‘சந்திரமுகி’, அதிக பட்ஜெட்டில் உருவானது ‘எந்திரன்’. உடல் நலக்குறைவிலிருந்து மீண்டு நடிக்க உள்ள படம் ‘ராணா’.
பைம்பொழில் மீரான் எழுதிய ‘ரஜினி’ நூலிலிருந்து