சினிமாவாகிறது ஜல்லிக்கட்டு!கடந்த வருடம் தமிழ்நாட்டில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. இந்தப் போராட்டத்தை அடிப்படையாக வைத்து ‘ஜல்லிக்கட்டு’ என்ற பெயரில் படமாக தயாராகி இருக்கிறது. நிருவாமா, அனுராக் காஷ்யப் இணைத் தயாரிப்பில் அகிம்சா புரொடக்‌ஷன் தயாரித்துள்ளது. இயக்கம் சந்தோஷ். படத்தைப் பற்றி இயக்குநரிடம் கேட்டோம்.

‘‘வெவ்வேறு துறைகளில் உள்ளவர்கள் அவர்களுக்கு நேரடித் தொடர்பு இல்லாத ஒரு விஷயத்துக்காக ஒன்றிணைந்து போராடியது எப்படி என்பதை அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளோம். முக்கியமான காட்சிகளை அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படமாக்கியுள்ளோம்.

பெரும்பாலான காட்சிகளை கென்யாவின் மசாய்மாரா பகுதியில் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம். அங்குள்ள காளையும் ஜல்லிக்கட்டு காளையும் ஒரே இனத்தைச் சேர்ந்தவை என்பது டிஎன்ஏ சோதனை மூலம் தெரிய வந்தது எங்களுக்கு ஆச்சர்யத்தைக் கொடுத்தது.

கென்யா மக்களின் வாழ்வியலைச் சொல்லும் முதல் படமாக எங்கள் படம் இருக்கும். மசாய்மாராவில் எடுக்கப்பட்ட காட்சிகள் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும். உலகின் அனைத்துப் பகுதிகளிலும் நடைபெற்ற போராட்ட நிகழ்வுகளுடன் மெரினா போராட்டத்தையும் சொல்லியுள்ளோம்.

ரமேஷ் விநாயகம் இசையமைத்துள்ளார். புதுமுகங்களோடு சேர்ந்து நானும் நடித்துள்ளேன். சமீபத்தில் சிங்கிள் டிராக்கை ஐ.நா. தலைமையகத்தில் வெளியிட்டோம். நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் இறுதிக் கட்ட வேலைகளை அதிக உற்சாகத்துடன் செய்து வருகிறேன்’’ என்றார்.

- எஸ்