வாரிசுகளுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கக் கூடாது! விக்னேஷ் வலியுறுத்துகிறார்



இருபத்தியோரு வயதில் ‘சின்னத்தாயி’ படத்தில் ஹீரோவாக அறிமுகம். அடுத்தடுத்து பாரதிராஜா, பாலுமகேந்திரா, வி.சேகர் என்று பெரிய இயக்குநர்களின் படங்களில் இடம்பெற்று, தொண்ணூறுகளில் முன்னணி இளம் ஹீரோவாகத் திகழ்ந்தவர் விக்னேஷ்.
இயக்குநர் பாலாவின் முதல் படமான ‘சேது’வுக்கு இவர்தான் முதலில் ஹீரோவாக நடிக்க பரிசீலிக்கப்பட்டார். விக்னேஷ் இழந்த அந்த வாய்ப்புதான் விக்ரமுக்கு திரையுலக வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது.

2000ங்களுக்குப் பிறகு விக்னேஷின் கேரியர் கொஞ்சம் இறங்குமுகம்தான். எனினும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று தென்னிந்திய மொழிகளில் இவரது படங்களின் எண்ணிக்கை அரை சதம் அடித்துவிட்டது. கடந்த வாரம் வெளியான ‘ஆருத்ரா’வில் கொடூரமான வில்லனாக தன்னுடைய செகண்ட் இன்னிங்ஸை வெற்றிகரமாகத் துவக்கியிருக்கிறார்.

‘ஆருத்ரா’வுக்கான பாராட்டு மழையில் நனைந்துகொண்டிருந்தவரை, ஓரங்கட்டி பேசினோம்.“எப்படி இருக்கீங்க?”

“வயசு ஐம்பதை நெருங்குது. எனக்கு 24 மணி நேரமும் நினைப்பு சினிமாதான். ஐம்பது படங்களுக்கும் மேலே நடிச்சிட்டேன். பெரிய பிரேக் கிடைக்கவே இல்லையே என்கிற ஏக்கம் எப்பவும் உண்டு. அதுக்காக சோர்ந்துடலை. சினிமா வாய்ப்பு டல்லடிச்சப்போ பிசினஸில் இறங்கினேன். நான் சினிமாவில் சம்பாதிச்சதைவிட பன்மடங்கு பிசினஸில் சம்பாதிச்சிட்டேன். இருந்தாலும் சினிமாவில் சாதிக்கணும் என்கிற எண்ணம் மட்டும் எனக்கு கொஞ்சம்கூட குறையவே இல்லை.”

“நீங்களும் வில்லன் ஆயிட்டீங்களே?”

“கவிஞர் பா.விஜய்யும் நானும் நெடுங்கால நண்பர்கள். திடீர்னு ‘ஆருத்ரா’ கதையை சொல்லிட்டு, வில்லனாக நீங்க நடிக்கணும்னு கேட்டாரு. எனக்குக் கொஞ்சம் தயக்கம் இருந்தது. ஆக்சுவலா இந்தப் படத்துலே சித்தார்த் ஹீரோ, விஜய் வில்லன்னுதான் ஆரம்பத்துலே ஏற்பாடு. அதுலே ஏதோ சுணக்கம் ஏற்பட்டு விஜய் ஹீரோ, நான் வில்லன்னு ஆயிடிச்சி.

மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய சப்ஜெக்ட் என்பதால் தயக்கத்தை உதறிட்டு நடிச்சேன். நடிக்கிறப்போ கூட எதுவும் தெரியலை. டப்பிங் பேசுறப்போதான் இவ்வளவு கொடுமையான வில்லன் கேரக்டரான்னு பதட்டம் வந்துடிச்சி.படத்தைப் பார்த்த என்னோட ஊழியர்கள், ‘இம்மாதிரி கேரக்டரில் உங்களைப் பார்க்கவே பயமா இருக்கு சார்’னு சொன்னாங்க.

எங்க குடும்பத்தாரும் அதே உணர்வை பிரதிபலிச்சாங்க. அப்போதான் நாம வில்லனாகவும் கரெக்டா நம்ம ரோலை செஞ்சிருக்கோம்னு நம்பிக்கையே வந்துச்சி. என்னை ஹீரோவாகப் பார்த்துப் பழகின ரசிகர்களுக்கு இது ரொம்பவே வித்தியாசமான அனுபவம். இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் சார், என்னோட நடிப்பை ரொம்பவே பாராட்டினார். நடிகன்னா எல்லா மாதிரி வேடங்களையும் ஏற்கத் தயாராக இருக்கணும், கிடைச்ச வேடத்தில் ஸ்கோர் பண்ணணும் என்கிற உணர்வை ‘ஆருத்ரா’ ஏற்படுத்தியிருக்கு.”

“சேது?”

“இருபது வருஷமா என்னிடம் எல்லாரும் ‘சேது’ பத்தி விசாரிப்பாங்க. ‘சேதுவை’ நான் மிஸ் செய்ததற்காக வருத்தப்படாத நாளே கிடையாதுன்னுதான் சொல்லணும். டைரக்டர் பாலாவும் நானும் ரூம் மேட்ஸ் என்பது ரொம்பப் பேருக்குத் தெரியாது.

என்னை வெச்சித்தான் அவர் ‘சேது’வை ஆரம்பிச்சார். அப்போ அந்தப் படத்துக்கு ‘அகிலன்’னு தலைப்பு. தாணு சாரோட மேனேஜர் செல்வம்தான் தயாரிப்பாளர். ஃபைனான்ஸ் பிரச்சினையால் ‘அகிலன்’ தொடங்கினதுமே முடங்கிடிச்சி.

வேற தயாரிப்பாளர் மூலமாக பாலா மறுபடியும் பிராஜக்ட்டைத் தொடங் கினப்போ நான் தமிழ், மலையாளம்னு நிறைய கமிட்மென்ட்களில் சிக்கிட்டேன். அதனால என்ன? ‘சேது’ மூலமா அறிமுகமான என்னோட நண்பன் பாலா, இன்னிக்கு தமிழ் சினிமாவுக்கே பெருமை சேர்க்கிற அளவுக்கு உயர்ந்திருக்கிறார்.

‘சேது’ மட்டுமில்லை. அதுக்கு முன்னாடியே ‘வண்ண வண்ணப் பூக்கள்’ படத்துலே கூட ஏழு நாள் நடிச்சபிறகு மாற்றப்பட்டேன். இதுமாதிரி நிறைய நல்ல வாய்ப்புகள் கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாமப் போயிருக்கு.

இப்போ அதையெல்லாம் திரும்ப நினைச்சாலே பெரும் துன்பமா இருக்கு. அம்மாதிரி சில சமயங்களில் தற்கொலை முயற்சிவரை கூட போயிருக்கேன். அப்போ நண்பன் பாலாதான், ‘உனக்கான நேரத்துக்காக காத்திரு’ன்னு தன்னம்பிக்கை கொடுத்து உற்சாகப்படுத்தினார்.”

“கொடூரமான வில்லன்களை சித்தரிப்பதில் உங்க நண்பர் பாலா ஸ்பெஷலிஸ்ட். அவர் அழைத்தால் அம்மாதிரி கேரக்டரை ஏற்பீர்களா?”

“சந்தோஷமாக ஏத்துப்பேன். எல்லாமே நடிப்புதானே? பாலாவோட படங்களில் வில்லன் கேரக்டர் கொடூரமாக அமைஞ்சாலும், அதுக்கான ஜஸ்டிஃபிகேஷன் சரியா இருக்கும். இதுவரை ஹீரோவாக நடிச்சிக்கிட்டிருந்த நான், இனிமேல் வில்லனாகவும் என்னோட திறமையைக் காண்பிக்கத் தயாராக இருக்கேன்.”

“இனிமே வில்லன்தானா?”

“வில்லன் ரோலும் நடிப்பேன்னுதான் சொன்னேனே தவிர, வில்லனா மட்டுமே நடிப்பேன்னு சொல்லலையே! நண்பர் விவேகபாரதி இயக்கத்தில் ‘பாசக்காரப் பய’ன்னு நல்ல சப்ஜெக்ட்டில் நடிக்கிறேன்.

‘முள்ளும் மலரும்’ மாதிரி யதார்த்தமான களம். அக்கா - தம்பி இடையே நடக்கும் பாசப்போராட்டம்தான் படத்தோட அடிநாதம். நேட்டிவிட்டி கதையா இதில் என்னோட கேரக்டர் வேற ஒரு பரிமாணத்தில் பேசப்படும்.இது தவிர சொந்தமாக படங்கள் தயாரிக்கும் திட்டமிருக்கு.

நிறைய திறமையாளர்களை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தணும் என்பதே இந்தத் திட்டத்தின் பின்னால் இருக்கும் நோக்கம். கிராமப்புறங்களிலிருந்து நம்பிக்கையோடு சென்னைக்கு படையெடுக்கும் திறமையாளர்களுக்கு அடையாளம் கொடுக்கணும் என்பதே ஆசை.

சினிமாத்துறையில் பணியாற்றியவர்களின் வாரிசுகள்தான் இப்போ சினிமாவில் சாதிக்க முடியும் என்கிற நிலைமை இருக்கு. இதனாலே நிறைய திறமையாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்க மாட்டேங்குது. வாரிசுகள் வரக்கூடாதுன்னு சொல்லலை. ஆனா, அவங்களுக்கும் திறமை இருக்கணும்.

என்னோட பையனாக இருந்தாலும் திறமைசாலியாக இருந்தால் மட்டுமே சினிமாவில் அவனுக்கு வாய்ப்பு கிடைக்கணும். அப்போதான் சினிமா ஆரோக்கியமாக இருக்கும்.”

- சுரேஷ்ராஜா