ஆருத்ரா
பாலியல் வன்முறைக்கு எதிரான படம்!
இளஞ்சிறுமிகள் மீது திணிக்கப்படும் பாலியல் வன்முறை என்பது உலகளவில் இந்தியாவைப் பற்றிய ஒரு தவறான பார்வையை ஏற்படுத்தியிருக்கும் அவலத்தை பதிவு செய்திருக்கிறது இந்த ‘ஆருத்ரா’.சமுதாயத்தில் புகழ் பெற்றிருக்கும் சில மனிதர்கள் திடீரென கடத்தப்படுகிறார்கள். சிலர் மர்மமாகக் கொலை செய்யப்படுகிறார்கள்.
அவர்களைக் கடத்துவது யார், எதற்காக அந்தக் கொலைகள் நடக்கின்றன என்பது மீதிக்கதை. வெறுமனே கடத்தப்பட்டுக் கொலை செய்யப்படுகிறார்கள் என்றால் சுவாரஸ்யமாக இருக்காது என்று நினைத்து புராணகாலம் போல் ஒவ்வொரு கொலைக்கும் ஒவ்வொரு பெயர் வைத்துக் கொல்வது கதையின் சிறப்பு.
அன்பான சிவா அப்பாவாக அறிமுகமாகும் நாயகன் பா.விஜய், மேடைகளில் பெண் குழந்தைகள் மீது ஏவப்படும் கொடும் உடல் துன்புறுத்தல்களுக்கு எதிராக ஆவேசமாகப் பேசுகிறார். சில இடங்களில் வன்கொடுமைகளுக்கு எதிராக எரிமலை ஆகிறார். சண்டைக்காட்சிகளில் அவருடைய கடும் உழைப்பு தெரிகிறது.
கும்பகோணத்தில் நடக்கும் குடும்பக் காட்சிகள் மனம் நெகிழச் செய்கின்றன. எஸ்.ஏ.சந்திரசேகர் வித்தியாசமான தோற்றத்தில் வருகிறார். பொறுப்பான குடும்பத்தலைவராக அவர் பேசும் வசனங்கள் சிறப்பு. சஞ்சனா சிங், தக்ஷிதா குமாரி, மேகாலீ, யுவா, சோனி சிரிஷ்டா போன்ற நடிகைகளின் பங்கும் கதைக்கு பயனுள்ளதாக இருக்கிறது.
கொலைகள் பற்றி விசாரிக்கும் அதிகாரியாக கே.பாக்யராஜ், அவருக்கு உதவியாக நான்கடவுள் ராஜேந்திரன் ஆகியோர் வருகிற காட்சிகளில் சிரிப்பு வெடிகளைத் தூவி விட்டிருக்கிறார்கள். சிலை வடிக்கும் சிற்பிகளின் உழைப்பு விலாவாரியாகக் காட்டப்பட்டிருப்பது அருமை. வித்யாசாகர் இசையில் ‘செல்லம்மா செல்லம்’ பாடல் இனிமையாக இருக்கிறது. அதுவே சோகமாகப் பாடப்படும்போது மனம் கலங்குகிறது.
ஒளிப்பதிவாளர் பி.எல்.சஞ்சய்யின் கேமரா நகரத்தை விட கிராமத்தை அதிகமாகக் காதலிக்கிறது. எடிட்டர் ஷான் லோகேஷ் கதைக்கான விறுவிறுப்பை நேர்த்தியாகக் கொடுத்துள்ளார்.
நடிப்பில் மெருகேறியிருக்கும் பா.விஜய், திரைக்கதை அமைப்பில் இன்னும் தேர்ச்சி பெறவேண்டும். ஆனாலும், பெண் குழந்தைகளை வைத்திருக்கும் ஒவ்வொரு குடும்பமும் கட்டாயம் பார்க்க வேண்டிய படமாக இதை உருவாக்கிய விதத்தில் இயக்குநர் பா.விஜய்யின் சமுதாய அக்கறையைப் பாராட்டலாம்.
|