முதல் படம் விதார்த்



டைட்டில்ஸ் டாக் 82

என்னுடைய பள்ளி நாட்களில் முதல் இடத்துக்கு வர என்றுமே முயற்சித்தது இல்லை. முதல் இடத்துக்கும் கடைசி இடத்துக்கும் நடுவுலதான் இருப்பேன். சராசரி அல்லது சராசரிக்கும் கொஞ்சம் கூடுதலாகத்தான்  மார்க் வாங்குவேன். அப்போதெல்லாம் விளையாட்டில்தான் என்னுடைய ஆர்வம் அதிகமாக இருந்தது. ஃபுட்பால், கிரிக்கெட் எனக்குப் பிடித்த விளையாட்டு.

நம்பர் ஒன் பவுலர், நம்பர் ஒன் பேட்ஸ்மேன் என்பவர்களைவிட ஆல்ரவுண்டராக இருப்பவர்கள்தான் உண்மையில் சிறந்த வீரர்கள். நான் ஆல்ரவுண்டர். படிப்பில் படுசுட்டியாகவும் விளையாட்டில் பீலே, கவாஸ்கர் மாதிரி வரவேண்டும் என்றும் ஒருபோதும் நினைத்ததில்லை. இளம் வயதில் நண்பர்களுடன் என்ஜாய் பண்ணவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது. என் குடும்பமும் முதலிடத்துக்கு என்னை வற்புறுத்தியதே இல்லை.

என்னுடைய தாத்தா காலத்தில் குடும்பமே சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டது. என்னுடைய அப்பா தன்னுடைய காலத்தில் கடுமையான உழைப்பால் அதை சீராக்கினார். நான் பிறக்கும் போது என்னுடைய குடும்பம் நல்ல நிலையில் இருந்தது.
என்னுடைய அப்பாவிடம் தன்னம்பிக்கை குணம் அதிகம். அந்த தன்னம்பிக்கையை எங்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக நாங்கள் எதைச் செய்தாலும் உங்களால் சாதிக்க முடியும் என்று உற்சாகப்படுத்துவார்.  என்னுடைய வாழ்க்கையில் டிரைவர், நடிகர் என்று பல முடிவுகளை நான்தான் சுயமாக  எடுத்தேன். ஆனால் எங்கேயும் என்னுடைய அப்பா குறுக்கீடு செய்யவில்லை.

என்னுடைய அப்பா சொன்ன ஒரே விஷயம், ‘‘நாலு பேருக்கு நல்லது பண்றியோ இல்லையோ உனக்கு நல்லது பண்ணிக்கோ. யாருக்கும் கெடுதல் நினைக்காதே. உன் தேவைக்கு மீறியவைகளை இல்லாதவர்களுக்கு கொடு. அது உன்னைக் காப்பாற்றும்’’ என்றார். அந்தப் பழக்கம்தான் இப்போது என்னை சொந்தங்களோடு வாழ வைத்துள்ளது. சொந்தங்களும் என்னை அரவணைத்துக் கொள்கிறது.

வாழ்க்கையில் முதல் இடம் பிடிக்கவேண்டும் என்று நினைத்ததைவிட நடிகனாக வேண்டும் என்று நினைத்தபோதுதான் சென்னைக்கு வந்தேன். நடிகனாக முதல் இடத்துக்கு வர வேண்டும் என்பதைவிட கும்பலோடு கும்பலாக நடித்துக் கொண்டிருந்த நான் தனித்து தெரிய வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறேன். இப்போது விதார்த் நல்ல நடிகர்; அவர் நடிக்கும் படங்களில் நல்ல கதை இருக்கும் என்ற பெயர் எனக்கு கிடைத்துள்ளது. இந்த பெயர் எடுக்க பத்து, இருபது படங்கள் எனக்கு தேவைப்பட்டது.

‘மின்னலே’ படத்தில் என் சினிமா பயணம் ஆரம்பித்தது. ‘மைனா’ ஹிட். அதன் பிறகு பல தோல்விப் படங்கள். தோல்விக்கு மற்றவர்களைக் காரணமாகச் சொல்லாமல் நான் இன்னும் கவனமாகக் கதைகளைத் தேர்வு செய்யவேண்டும் என்று கற்றுக் கொண்டேன். ‘ஆள்’, ‘காடு’, ‘குற்றமே தண்டனை’, ‘ஒரு கிடாரியின் கருணை மனு’, ‘குரங்கு பொம்மை’ போன்ற படங்கள் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது.

ஒரு நடிகனாக முதல் இடம் என்ற வட்டத்துக்குள் வருவதற்கு நான் முயற்சி செய்யமாட்டேன். ஏன்னா, அவ்வளவு பெரிய இடத்துக்கான தகுதிகளை வளர்த்துக் கொள்ளக்கூடிய வலிமை என்னிடம் இல்லை. வந்துவிடுவேன், ஜெயித்துவிடுவேன் என்று பெருமை பேச விரும்பவில்லை. அந்த வலிமை என்னிடம் இல்லை என்பது எனக்குத் தெரியும். அதை எப்போதோ உணர்ந்துவிட்டேன்.

மாறாக, நான் எனக்கென்று ஒரு இடத்தை உருவாக்குகிறேன். எனக்கான இடத்தை உருவாக்கி அதற்கு அங்கீகாரம் கிடைக்கணும் என்று உழைத்து வருகிறேன். அதனால் முதல் இடத்துக்கான ரேஸிலிருந்து சற்று விலகியே இருக்கிறேன். பயம் காரணமாக முதல் இடத்தை நோக்கி பின்வாங்குகிறேன் என்பது விஷயம் இல்லை. நான் அவ்வளவு ஒர்த் இல்லை என்பதுதான் உண்மை.

கேமரா ஃபோகஸ் என் பக்கம் விழ வேண்டும் என்று தவித்த காலகட்டம் ஒரு காலத்தில் இருந்தது. நடிக்க வரும் அனைவருக்கும் அந்த ஆசை இருக்கும். ஆனால் நான் துணை நடிகராக நடிக்க ஆரம்பித்தபோதே என் மீது கேமரா  வெளிச்சம் பாய்ந்தது. ‘மின்னலே’ படத்தில் கல்லூரி மாணவனாக நடித்தேன். ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் தனியாக அழைத்து நான் நல்லா இருப்பதாக இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் சொன்னதாக என்னிடம் சொன்னபோதே சினிமாவில் ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கை அதிகமானது.

அந்த வகையில் ஆரம்பத்திலிருந்தே கேமராவுக்குப் பிடித்த முகமாகவே இருந்துள்ளேன். ஏராளமான படங்களில் என்னை முன்னிறுத்திக் கூப்பிடுவார்கள். எப்போதும் பின்னுக்குத் தள்ளியதில்லை. சில படங்களில் முக்கிய நடிகரைத் தாண்டி நான் துருத்திக் கொண்டு இருப்பேன். அதற்காகவே மறு படப்பிடிப்பு நடந்த படங்களும் உண்டு. சுருக்கமாகச் சொல்வதாக இருந்தால் என்னை அவாய்ட் பண்ணியிருக்கிறார்கள். ஏன்னா, அவர்களைவிட நான் தெரிய ஆரம்பித்தேன்.

என் குடும்பத்தில் எல்லோரும் நல்லா படித்தவர்கள். நான் மட்டும் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு ஐடிஐ டிஸ்கன்டினியூ பண்ணியவன்.  என் சொந்தங்கள் நான் படிக்காத விஷயத்தை பெரிதுபடுத்திப் பேசுவார்கள். வர்றவங்க போறவங்க என்று ஆளாளுக்கு அட்வைஸ் மழை பொழிந்தார்கள். அப்போது என் அப்பா மட்டும்தான் என்னை நம்பினார். நான் நேசித்த சினிமாவுக்காக எட்டு வருடம் கூத்துப்பட்டறையில் என்னை நான் பட்டை தீட்டிக் கொண்டேன்.

என்னுடைய தம்பிகள் இரண்டு பேர் ஆடிட்டர்கள். சகோதர்களைச் சுட்டிக்காட்டி அவன் பார் என்னமா படிச்சிருக்கான் என்றார்கள். சமீபத்தில் இந்திய அளவில் ஆடிட்டர்களுக்கான ஒரு கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்துக்கு ஐ.டி.ஐ படிப்பை பாதியில் நிறுத்திய இந்த விதார்த் தான் சிறப்பு விருந்தினர்.

பள்ளிக்கூடத்தில் முதல் இடத்தைப் பிடித்த என் சகோதர்கள் கூட்டத்தோடு கூட்டமாக கீழ் வரிசையிலும், படிக்காத நான் மேடையில் சிறப்பு விருந்தினராகவும் உட்கார்ந்திருந்தேன். என் சகோதரர்களுக்கு முன்னாடி நான் ஒரு அடையாளத்தைக் கொடுத்திருக்கிறேன் என்றால் அவர்களுக்கு முன்னாடி நான் முன்னேறிவிட்டேன் என்று அர்த்தமில்லை.

அது எதை உணர்த்துகிறது என்றால் நமக்கு எது பிடிக்குமோ அதை உண்மையாக நேசித்து காரியத்தில் இறங்கினால் நினைத்தது கைகூடும் என்பதை வெளிப்படுத்துகிறது. உழைப்புக்கு அங்கீகாரம் உண்டு என்பதை உணர்த்துகிறது. நான் எடுத்துக்கொண்ட லட்சியத்தில் உண்மையாக இருந்ததால் தான் எனக்கு அந்த உயர்வு கிடைத்தது.

அதுக்காக நீங்கள் நடிகராக இருக்கவேண்டும் என்று அவசிய மில்லை. அது எந்த தொழிலாக வேண்டுமானாலும் இருக்கலாம். உங்களுக்குப் பிடித்த விஷயத்தில் முழுமையான உழைப்பைக் கொடுத்தால் உங்களுக்கான இடம் உண்டு. லட்சியத்தை நேசியுங்கள். விரும்பியதைச் செய்யுங்கள். வெற்றி நிச்சயம்.

தொகுப்பு:சுரேஷ்ராஜா

(தொடரும்)