கடைக்குட்டி சிங்கம்



எகிறி அடிக்கிறான் இந்த துரைசிங்கம்!

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனம் செய்ய சொன்னார் பாரதி. இயக்குநர் பாண்டிராஜோ உழவுக்கும் தொழிலுக்கும் மட்டுமின்றி கூடுதலாக உறவுக்கும் வந்தனம் செய்து படமெடுத்திருக்கிறார்.கவுரவமான விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த சத்யராஜ், ஆண் வாரிசுக்கு ஆசைப்பட்டு இரண்டு பெண்களை மணக்கிறார். அடுத்தடுத்து பிறந்த ஐந்து பெண் குழந்தைகளுக்குப் பிறகு, ‘கடைக்குட்டி சிங்கம்’ கார்த்தி பிறக்கிறார்.

படிப்பில் கொஞ்சம் மந்தமாக இருந்தாலும் பத்திரிகைகளில் கவர் ஸ்டோரி எழுதுமளவுக்கு விவசாயத்தில் கொடி கட்டிப் பறக்கிறார் கார்த்தி. அக்காள் மகள்களான பிரியா பவானி சங்கர், அர்த்தனா பினு இருவரும் இவருக்குத் திருமண ஆசையில் போட்டி போட்டு நூல் விடுகிறார்கள். கார்த்தியின் மனமோ நாயகி சாயிஷா மீது மையல் கொள்கிறது.

சாயிஷாவைத் திருமணம் செய்தால் குடும்பம் இரண்டாக உடையும் என்ற சூழலில் குடும்பமும் பாதிப்பு அடையாமல் காதலிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் கார்த்தி. அச்சமயத்தில் சமுதாயப் பிரச்சினையில் கார்த்தியைக் கொலை செய்து அந்தக் குடும்பத்தையும் உடைக்க நினைக்கிறது வில்லன் கோஷ்டி.

கார்த்தி காதலில் வென்றாரா, குடும்பம் பிளவுபடுவதைத் தவிர்த்தாரா, வில்லனை நொறுக்கினாரா என்பதே மீதிக்கதை.பெரிய நட்சத்திரப் பட்டாளம் இருந்தாலும் ஒன்மேன் ஆர்மியாக மொத்தப் படத்தையும் குத்தகை எடுத்துள்ளார் கார்த்தி.

“விவசாயின்னு கல்யாணப் பத்திரிகையிலே பேர் போட்டா சிரிப்பாங்க” என்றவுடன், “சிரிக்கிறவனை செருப்பாலே அடிப்பேன்” என்று பொங்கும் கார்த்தி, படம் முழுக்க அடித்து ஆடியிருக்கிறார். காதல், சென்டிமென்ட், சண்டை, சோகம் என நவரசங்களைப் பிழிந்து நடிக்க வேண்டிய வேடம். அதில் எந்தக் குறையும் வைக்காமல் சிறப்பாகச் செய்திருக்கிறார்.

நாயகி சாயிஷா அழகோஅழகு. கார்த்தியின் அப்பாவாக வரும் சத்யராஜ் தன் கேரக்டருக்கு நியாயம் செய்திருக்கிறார். நடிப்பு சூப்பர்னு புதிதாகச் சொல்ல வேண்டியதில்லை. தத்துபித்துன்னு உளறிக் கொட்டும் சூரி வியக்க வைக்கிறார். படத்தின் பெரும் பலத்துக்குச் சொந்தக்காரர்களில் இவரும் ஒருவர்.

கொஞ்சம் விட்டால் டாக்குமெண்டரி போல் ஆகிவிடக்கூடிய பேராபத்தைத் தடுத்து நிறுத்தி சிரிப்பு வெடிகளால் படத்தை லகுவாக்கியுள்ளார். ‘இவ்வளவு மாஸ் இருக்கு; இதையாடா தடுத்தீங்க’ என்று மத்திய அரசை விமர்சிப்பதில் தொடங்கி சூரி பேசும் வசனங்கள் வாய்விட்டுச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கின்றன.

அதிகமாகத் துள்ளுவார் என்று எதிர்பார்த்த பிரியா பவானிசங்கருக்கு பெரிதாக ஸ்கோப் இல்லை. கிடைத்த சின்ன கேப்பில் தன் இருப்பை காட்டிக் கொள்கிறார். அர்த்தனா பினு சோடை போகவில்லை. பானுப்பிரியா, விஜி சந்திரசேகர், சரவணன், செளந்தரராஜா, மெளனிகா ஆகியோர் கொடுத்த வேலையைச் சரியாகச் செய்திருக்கிறார்கள்.

முதல் பாதி கலகலவென்று இருக்கிறது. இரண்டாம் பாதியில், குடும்ப உறவுகளில் சிக்கல் ஏற்படுவதெல்லாம் சகஜமானவை என்பதால் சலிப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.  இரண்டு மனைவிகள், ஆண் குழந்தைக்காகத் திருமணம் போன்ற பழைய பஞ்சாங்கத்தை பாடியிருந்தாலும் கடைசியில் பெண் குழந்தை பிறந்தவுடன் குடும்பக் கட்டுப்பாடு செய்து நேர்ப்பட பேசியிருக்கிறார் இயக்குநர்.

வேல்ராஜின் ஒளிப்பதிவு படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறது. பசுமையான வயல்வெளி, பொங்கி வரும் ஓடை என்று ரம்மியமான இடங்களைத் தன் கேமரா கண்களால் கைது செய்துள்ளார்.

இமானின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் அருமை. சோழர் கால நிலவுடைமை அமைப்பையும், விவசாயத்தின் அவசியத்தையும் இன்றைய தலைமுறை தெரிந்துகொள்ளும் விதத்தில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் சொல்லியிருக்கும் இயக்குநர் பாண்டிராஜுக்கு ஒரு சபாஷ் போடலாம்.