சரியா சக்சஸ் மீட் கலாச்சாரம்?



பிலிமாயணம் 49

இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒருமுறை எங்கள் ஊரில் இருந்து இளைஞர்கள், மாட்டு வண்டியிலும் லாரியிலுமாக திருநெல்வேலிக்கு மொத்தமாக கிளம்பிப் போவார்கள். ஏதாவது எம்.ஜி.ஆர் படத்தின் நூறாவது நாள் அல்லது வெள்ளிவிழா நிகழ்வாக அது இருக்கும். தன்னுடைய மனம் கவர்ந்த ஹீரோவின் வெற்றியை, ரசிகன் திருவிழாவாகக் கொண்டாடிய காலம் அது. எல்லா நடிகர்களுமே தங்கள் படத்தின் வெற்றிவிழாவைக் கொண்டாட ஆர்வம் காட்டுவார்கள். எனினும், எம்.ஜி.ஆரின் விழாதான் திருவிழா.

சினிமா வெற்றி விழாக்களில் அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டு படத்தைப் பற்றிப் பேசுவார்கள். மெதுவாக தங்கள் அரசியல் கருத்துகளையும் ஆணித்தரமாக முன்வைப்பார்கள். தமிழக முதல்வர்களே கூட சினிமா விழாக்களில் கலந்துகொள்ள ஆர்வமாகத்தான் இருந்தார்கள். சினிமாத்துறையைத் தொடர்ச்சியாக விமர்சித்து வந்த தந்தை பெரியார், ராஜாஜி, காமராஜர் ஆகியவர்களும்கூட சினிமா தொடர்பான விழாக்களில் கலந்துகொள்ள மறுத்ததில்லை.

தங்கள் கருத்துகளை மக்கள் மத்தியில் முன்வைக்க ஒரு வாய்ப்பாகவே இதைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.பேரறிஞர் அண்ணா, திரைப்பட விழாக்களை ஊக்குவித்தார். கலைஞர், தன்னுடைய ஆட்சிக் காலத்தில் எவருடைய படம் வென்றாலும், அதன் வெற்றிவிழாவில் கலந்துகொள்வதில் ஆர்வம் செலுத்தினார்.

எம்.ஜி.ஆர், ஆட்சியில் இருந்தபோது அவர் கலந்துகொள்வதற்காகவே சினிமாக்களின் வெற்றிவிழா நடப்பதுண்டு. தமிழகத்தைப் பொறுத்தவரை சினிமாவையும், அரசியலையும் பிரித்தே பார்க்க முடியாது.வெற்றிவிழாக்கள் பெரும்பாலும் சென்னையில்தான் நடக்கும்.

சென்னை தாண்டிய நகரங்களிலும் விழா நடத்தியவர் எம்.ஜி.ஆர்தான். சில வெற்றி விழாக்கள் அரசியல் கட்சிகளின் மாநாடுகளைப் போல பிரும்மாண்டமாக நடத்தப்பட்டதுண்டு. ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் போன்றோரின் படங்களின் 100வது நாள் விழா அடக்கமாக நடத்தப்படும்.அதெல்லாம் அந்தக் காலம்.

இன்று எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது.இப்போதைய சினிமாவில் திரையிடல், வியாபாரம் போன்றவையின் வடிவம் முற்றிலுமாக மாறிவிட்டது. நூறாவது நாள், வெள்ளி விழா கொண்டாட்டங்கள் எல்லாம் இப்போது மிகவும் அரிது.

அதிகபட்சமாக நாளிதழ்களில் விளம்பரம் கொடுக்கிறார்கள். போஸ்டர் ஒட்டுகிறார்கள். படம் வெளியான அன்று மாலையே ஏதாவது நட்சத்திர ஹோட்டலில் ‘சக்சஸ் மீட்’ நடத்தி, அதோடு திருப்தி அடைந்து விடுகிறார்கள்.

மேலும், இப்போதெல்லாம் ஹீரோக்கள் மக்களிடமிருந்து தங்களை அன்னியப்படுத்திக் கொண்டு தலைமறைவு வாழ்க்கையே வாழ விரும்புகிறார்கள். அதையே எளிமை என்று விளம்பரப்படுத்திக் கொள்கிறார்கள். பெரும் ரசிகர் பரப்பை வைத்திருக்கும் அஜீத், நயன்தாரா உள்ளிட்ட நட்சத்திரங்கள் தங்கள் படங்கள் தொடர்பான அறிமுகவிழா, வெற்றிவிழா போன்ற எதிலும் கலந்துகொள்வதில்லை.

இது தொடர்பான விமர்சனங்கள் எழுந்தாலும் அவற்றைக் கண்டு கொள்வதில்லை. படத்தில் நடித்தோமா, சம்பளம் வாங்கினோமா என்றுதான் பெரும்பாலான நட்சத்திரங்கள் தங்களைக் குறுக்கிக் கொள்கிறார்கள். படத்தின் வெற்றி தோல்வி, இயக்குநரைப் பொறுத்தது, லாப நஷ்டம் தயாரிப்பாளரைச் சார்ந்தது என்று தங்கள் பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் போக்கே இன்றைய நட்சத்திரங்களிடம் நிலவி வருகிறது.

சக்சஸ் மீட் என்கிற பெயரில் இப்போது நடக்கும் வெற்றி விழாக்களைப் பார்த்தால் தலையில் அடித்துக் கொள்ளத்தான் தோன்றுகிறது. நெருக்கமான நண்பர்களை அழைத்து நட்சத்திர ஓட்டல்களில் மது விருந்து கொடுக்கிறார்கள். இதில் படத்தில் பணியாற்றிய பெரிய கலைஞர்கள், சில முக்கிய பத்திரிகையாளர்கள்தான் கலந்துகொள்கிறார்களே தவிர, ரசிகனுக்கு ஒரு சதவிகித இடஒதுக்கீடுகூட இல்லை.

இதில் கொடுமை என்னவென்றால், முதல் காட்சியிலேயே டப்பா என்று ரசிகர்களால் தீர்ப்பளிக்கப்பட்டு விட்ட படங்களுக்குக்கூட சக்சஸ் மீட் நடக்கிறது. படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர் பல கோடிகளை இழந்து வேதனையில் இருக்கும்போது, நட்சத்திரங்களோ தாங்கள் வென்று விட்டதைப் போன்ற பிம்பத்தை ஏற்படுத்த இதுபோன்ற சக்சஸ் மீட்டுகளை நடத்துகிறார்கள்.

சில லட்சங்களைச் செலவழித்து, தோல்வியடைந்த ஒரு படத்துக்கு ஏன் சக்சஸ் மீட் நடத்த வேண்டும் என்கிற நியாயமான கேள்வி உங்களுக்கு எழலாம். ஏனெனில், இந்த சக்சஸ் மீட்தான் சம்பந்தப்பட்ட நட்சத்திரத்துக்கு அடுத்து கோடிக்கணக்கில் சம்பளம் கொடுக்கக்கூடிய ஒரு தயாரிப்பாளருக்கு போடப்படும் தூண்டில்.வெற்றிவிழாக்கள் ஒரு காலத்தில் திருவிழாவாக நடந்த தமிழ்நாட்டில், இன்று சக்சஸ் மீட் தந்திரங்கள் நிகழ்ந்துகொண்டிருப்பது ஒருவகையில் தமிழ் சினிமாவின் வீழ்ச்சிக்கான குறியீடாக அமைந்துவிட்டது.

(பிலிம் ஓட்டுவோம்)

பைம்பொழில் மீரான்