தமிழ்ப்படம் 2



சைட் டிஷ்ஷே சாப்பாடு ஆகுமா?

பாட்டெழுதி பேர் வாங்கும் புலவர்கள் ஒருவகை. அந்தப் பாட்டில் குற்றம் கண்டுபிடித்து பேர் வாங்கும் புலவர்கள் மறுவகை. இயக்குநர் சி.எஸ்.அமுதன், இரண்டாம் வகை.ரஜினி, கமல், விஜய், அஜீத், விக்ரம், சூர்யா, விஷால், தனுஷ், சிவகார்த்திகேயன் உட்பட எல்லா நடிகர்களின் படங்களிலும், அந்தப் படங்கள் வெளியான காலத்தில் சுட்டிக்காட்டப்பட்ட அபத்தங்களைத் தொகுப்பு தோரணமாகக் கட்டி தொங்கவிட்டுள்ளார்.
சினிமாவையும் தாண்டி கமல், ரஜினியின் அரசியல் பிரவேசம், முன்னாள் முதல்வர் மறைவுக்குப் பிறகு வங்கக் கடலோரம் நடந்த தியானம், தர்மயுத்தம், சமாதி மேல் ஆணை போன்ற சூடான நாட்டு நடப்புகளையும் கிண்டலடித்திருக்கிறார்.

முதல் பாகத்துக்கும் இரண்டாம் பாகத்துக்குமிடையே இருக்கும் மிகப்பெரிய வித்தியாசம், அதில் நாயகன் சிவா அளவான உடலோடு இருந்தார்; இதில் ஊதிப்போயிருக்கிறார். மற்றபடி நடிப்பு எவ்வளவு கிலோ என்றமாதிரியே நடித்திருக்கிறார்.காமெடி நடிகர் சதீஷ்தான் வில்லன். அவருக்கு வில்லத்தனமும் வரவில்லை, நகைச்சுவையும் நஹி என்பது பெரும் சோகம். ‘மங்காத்தா’ அஜீத், ‘அந்நியன்’ விக்ரம், ‘தேவர்மகன்’ நாசர், ‘நூறாவது நாள்’ சத்யராஜ் ஆகிய கெட்டப்பில் வரும் சதீஷ், இன்னமும் வெளிவராத ஷங்கரின் ‘2.0’ வில்லன் கெட்டப்பிலும் வருகிறார். நாயகி ஐஸ்வர்யா மேனன் பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

பெரிய நடிகர்களின் படங்களில் எல்லோரும் பார்த்து வியந்த அல்லது நொந்த காட்சிகளைக் கிண்டலடித்திருப்பதால் பல காட்சிகளில் சிரிப்பால் திரையரங்கு அதிர்கிறது.‘தமிழ்ப்படம்’ வந்தபோது மீம்ஸ் கலாச்சாரம் என்பதே இல்லை. இப்போது ஒரு செயல் நடந்து முடியும் முன்பே அல்லது நடக்கும்போதே மீம்ஸ் வந்துவிடுகிறது.

அதனால் இப்படம் செய்யும் கேலிகள் பெரிதாக எடுபடவில்லை. வலுவான திரைக்கதை அமைத்து அதற்குப் பக்கபலமாக இந்தக் கேலி, கிண்டல்களை வைத்திருந்தால் இயக்குநர் அமுதனுக்கு அறுபது மார்க் கிடைத்திருக்கும்.மெயின் டிஷ் இல்லாமல் சைட் டிஷ் மட்டுமே உணவானால் செரிமானம் ஆகாது என்பதுதான் படம் சொல்லும் செய்தி.