ஆக்‌ஷனில் அறிமுகமாகிறார் மயில்சாமி மகன்!



அரசியலில் மட்டுமல்ல, சினிமாவிலும் வாரிசுகளுக்கு எப்போதுமே மவுசுதான். அவ்வகையில் மயில்சாமியின் மகன் யுவன் மயில்சாமிக்கும் இண்டஸ்ட்ரியில் நல்ல எதிர்பார்ப்பு. அறிமுக இயக்குநர் சுரேஷ் கே. வெங்கிடி இயக்கும் ‘வாய்க்கா தகராறு’ படத்தின் மூலம் நாயகனாக களமிறங்குகிறார். படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளில் பிஸியாக இருந்த இயக்குநரிடம் படத்தைப் பற்றி கேட்டோம்.
“கதை?”

“பொதுவா ஒருவருக்கு இரண்டு மனைவிகள் இருக்கும்போது என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான் என்று சண்டை போடுவார்கள். ஆனால் என்னுடைய கதையில் இரண்டு பெண்கள் ஒரே புருஷனுடன் ஒரே வீட்டில் குடும்பம் நடத்துகிறார்கள். அவர்களுக்கு இரண்டு மகன்கள். சக்களத்தி சண்டையிட்டுக் கொள்ள வேண்டிய பெண்கள் ஒற்றுமையாக வாழ, ஒற்றுமையாக வாழவேண்டிய சகோதரர்கள் மோதிக்கொள்கிறார்கள்.

அம்மாக்களின் வளர்ப்பு சரியாக இருந்தாலும் பசங்களிடம் பகை இருந்துகொண்டே இருக்கும். வீட்டில் ஒற்றுமையாக இருக்கும் சகோதரர்கள் வெளியில் எலியும் பூனையுமாக சண்டையிட்டுக் கொள்வார்கள். சகோதரர்கள் ஒற்றுமையாக வாழ முடிந்ததா என்பதை கிராமப் பின்னணியில் சொல்லியுள்ளேன்.”

“சின்ன மயில்சாமியின் நடிப்பு எப்படி?”

“யுவன் மயில் சாமி இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்று சொல்வார்கள். அதை மெய்ப்பிக்கும் வகையில் யுவன் சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார்.
வாரிசு நடிகர்களாக இருந்தாலும் கஷ்டப்பட்டு நடித்தால்தான் நிலைக்க முடியும் என்பதைப் புரிந்தவர் அவர். அப்பாவின் வழிகாட்டுதலே தேவைப்படாமல் மிகச் சிறப்பாக பண்ணியிருக்கிறார். டபுள் ஆக்‌ஷனுக்காக அதிக மெனக்கெடல் போட்டிருக்கிறார். ஒரு வேடத்துக்கு பிரபல நடிகரை நடிக்க வைக்கலாமா என்று தயாரிப்பாளர் சஜஷன் கேட்டார். ஆனால் யுவன் இரட்டை வேடத்தை சவாலாக எடுத்துப் பண்ணினார்.

ஒரு நடிகராக எனக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார். டெடிகேஷன் அதிகம். நடிகர் பையன் என்பதால் நடனம், சண்டை, நடிப்பு எல்லாவற்றிலும் கெட்டிக்காரத்தனம் தெரிந்தது. அவங்க அப்பாவுக்கு சொந்தமான காமெடி சென்ஸ், இவருக்கும் அப்படியே இருக்கிறது. வழக்கமாக சில நடிகர்கள் தங்கள் சொந்த சரக்கையும் இறக்குவார்கள்.

அது அந்தப் படத்தை மெருகேற்ற உதவும். இதில் யுவன் நான் சொல்லித் தந்த மாதிரியே நடிக்கவேண்டிய தேவை இருந்தது. ஏன்னா ஒரு முடிச்சு அவிழ்ந்தாலும் எல்லா முடிச்சும் அவிழ்ந்து விடக்கூடிய அபாயம் இருந்தது. அதுக்காக இந்தக் கதை சொல்லப்படாத கதை என்றெல்லாம் சொல்லமாட்டேன். படம் பார்த்துவிட்டு நீங்களே பாராட்டுவீர்கள். இன்னொரு ஹீரோவா ‘யோக்கியன் வரான் சொம்ப எடுத்து உள்ளே வை’ விஜய்ராஜ் நடித்துள்ளார்.”

“ஹீரோயின்?”

“நைனா. கேரள வரவு. இன்னொரு ஹீரோயின் வர்ஷிகா. பிலிம் இன்ஸ்டிடியூட்டில் நடிப்பு பயின்றவர். இருவருக்கும் மொழிப் பிரச்சனை இருந்தாலும் நான் சொன்னதை உள்வாங்கி சிங்கிள் டேக்கில் ஓ.கே பண்ணினார்கள். பிரமாதமான டான்ஸ் பண்ணியிருக்கிறார்கள்.”
“மற்ற நட்சத்திரங்கள்?”

“மீட்டர் மிராசு என்ற கேரக்டர்ல பவர் ஸ்டார் வர்றார். 100 ரூபாய் கொடுத்தா 110 ரூபாயா வசூல் பண்ணுவதுதான் வட்டித் தொழில். ஆனால் இவர் கடனை திருப்பிக் கேட்கும்போது ஏமாத்துவார்கள். அந்தக் காட்சிகளில் நகைச்சுவையைத் தெறிக்க விட்டுள்ளார். அவருடைய அல்லக் கையா  போண்டா மணி வர்றார்.

சூப்பர் கட்டிங் விநாயகம் என்ற கேரக்டர்ல சிங்கம் புலி நடிக்கிறார். தொடை தூக்கி துரைராஜ் என்ற கேரக்டர்ல மனோபாலா பண்ணியிருக்கிறார். வேட்டியைத் தூக்கி தொடையைத் தடவும் அவருடைய மேனரிசம் சிரிப்புக்கு உத்தரவாதமாகச் சொல்லலாம். அவருடைய தீர்ப்பு வழங்கும் ஸ்டைல் செம ரகளையா வந்துள்ளது.”

“இசை?”“இந்தப் படத்தை செங்குத்தாக இந்தளவுக்கு தூக்கி நிறுத்த காரணமே இசையமைப்பாளர் தேவாதான். சீனியர் மியூசிக் டைரக்டர். நான் சிச்சுவேஷன் சொல்லும்போது இளமையோடு டியூன் போட்டுக் கொடுத்தார். ‘என்னடா லுக்கு’, ‘ஒக்கடி, இரடு, மூடு’ போன்ற பாடல்கள் மீண்டும் தேவாவின் புகழ் பாட வைக்கும்.  இது அனிருத் சீஸனாக இருந்தாலும் எனக்கு வில்லேஜ் ஃபீல் தேவைப்பட்டது.

இளையராஜா சார் அதில் அல்டிமேட் என்றாலும் எனக்கு கானாவும் சேர்த்து தேவைப்பட்டதால் தேவா சாரிடம் போனேன். அவர் நல்லா பண்ணியிருக்கிறார் என்று ஒரு சீனியரைப் பார்த்துச் சொல்லும் தகுதி எனக்கு இல்லை என்றாலும் ஒரு ரசிகனாக அவருடைய பாடல்கள் சிறப்பாக வந்துள்ளது என்று சொல்வேன்.

இப்போ டிரெண்ட் வேற லெவல் என்று சொல்பவர்கள் பாடலைக் கேட்டதும் தங்கள் கமெண்ட்ஸை வாபஸ் வாங்குவது நிச்சயம். ஒளிப்பதிவாளர் முத்துராஜ், பிரபல ஒளிப்பதிவாளர் பன்னீர் செல்வம் உதவியாளர். குருவை மீஞ்சும் சிஷ்யனாகக் கலக்கியிருக்கிறார்.”

“உங்களைப் பற்றி?”“சொந்த ஊர் சென்னை. படிச்சதும் பேனா கம்பெனியில் வேலை செய்தேன். அப்போது நண்பர்களிடம் கதை சொல்வேன். அவர்கள் உசுப்பிவிட்டதால் சினிமாவுக்கு வந்தேன். முதன் முதலில் ‘யார்’ கண்ணன் சார் ஆபீஸில் வேலை கிடைத்தது. வெங்கட்ராமன் என்ற பெயரை சினிமாவுக்காக வெங்கிடி என்று ஷார்ட்டா வைத்துக் கொண்டேன்.

பிறகு பிரபல மலையாள இயக்குநர் மது சாரிடம் சேர்ந்தேன். தமிழில் மம்மூட்டி நடித்த ‘மெளனம் சம்மதம்’ பண்ணியவர். நான் இயக்கிய ‘போத’ என்ற ஷார்ட் பிலிம் எனக்கு இயக்குநரா பேர் வாங்கிக் கொடுத்தது. ‘ராயல் சினி என்டர்டைன்மென்ட்’ முருகவேல் சாரிடம் கதை சொன்னேன். ஆரம்பத்தில் இரண்டு, மூணு பேர் சேர்ந்து தயாரிப்பதாக இருந்தது.

கதை மீது இருந்த நம்பிக்கையால் அவர் மட்டுமே தயாரிக்க முன் வந்தார். சினிமா அவருக்கு புதுசா இருந்தாலும் காம்ப்ரமைஸ் பண்ணாத பட்ஜெட்டில் படம் எடுத்துள்ளார். சமீபத்துல படத்தோட ரஷ் பார்த்தவர் முகத்தில் மகிழ்ச்சி படர்ந்தது. அதுவே அவருடைய நம்பிக்கையை காப்பாத்தியிருக்கிறேன் என்ற திருப்தியைக் கொடுத்துள்ளது.”

- சுரேஷ்ராஜா