யோகி ‘யோகி’ தேவராஜ்



டைட்டில்ஸ் டாக் 75

நேர்மையும், ஒழுக்கமும் நிறைந்தவர்களை யோக்கியமானவர்கள் என்று சொல்வார்கள். யோக்கியமானவர்களை யோகி என்று அழைப்பது தவறே அல்ல. என் வாழ்வில் நான் சந்தித்த சில யோகிகளைப் பற்றி உங்களிடம் ஷேர் பண்ணிக்க விரும்பறேன்.எனக்கு சொந்த ஊர் வேலூருக்கு அருகில் குடியாத்தம். பிளஸ் ஒன் வரை மட்டுமே படிக்க முடிஞ்சது. சினிமா ஆசையால்தான் சென்னைக்கு வந்தேன்.

நகைச்சுவை நடிகர் தேங்காய் சீனிவாசன், வேலூர் கோட்டை மைதானத்தில், தமிழக அரசு நடத்திய பொருட்காட்சியில், ‘கிருஷ்ணன் வந்தான்’ என்ற மேடை நாடகத்தை நடத்தினார்.புதிய பஸ் நிலையம் அருகில் ஓட்டல் ரிவர்வியூவில் தங்கியிருந்த அவர், என்னைப்பற்றி கேள்விப்பட்டார்.

‘‘சிவாஜி, கே.ஆர்.விஜயா, மோகன், ரேகா நடிப்பில் ‘கிருஷ்ணன் வந்தான்’ நாடகத்தை திரைப்படமாகத் தயாரித்து நடிக்க திட்டமிட்டுள்ளேன். அதில் நீ ஒரு பாட்டு எழுது. படத்துக்கு இளையராஜா இசை யமைக்கிறார். சென்னைக்கு வந்ததுமே தொடர்பு கொள்” என முகவரி கொடுத்தார். சென்னை கோபாலபுரத்திலுள்ள அவர் வீட்டுக்கு ஒரு நாள் போனேன்.

இளையராஜாவுடன் சந்திப்பும் நடந்தது. ஏனோ பாட்டெழுத மட்டும் வாய்ப்பு அமையலை. அதன்பிறகு அப்போ முன்னணி இயக்குநராக இருந்த மணிவண்ணன், பாக்யராஜ் ஆகியோரிடம் வாய்ப்புக்காக நடையாய் நடந்தேன். உதவி இயக்குநராக வேண்டும் என்று ஊரை விட்டு வந்தவன், ‘தினகரன்’ நாளிதழில் பணிக்குச் சேர்ந்து கிட்டத்தட்ட 30 வருஷம் ஆயிடிச்சி.

2007ல் தேங்காய் சீனிவாசனின் உறவினர் நடித்த ‘சிவி’ என்ற தமிழ்ப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா என் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்தியது. சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்த இயக்குநர்கள் அமீர், சுப்பிரமணியம் சிவா இருவரும், “கொஞ்சம் நீளமான தாடியும், மீசையும், தலைமுடியும் வளர்த்துக் காட்டமுடியுமா?” என்று கேட்டார்கள். ஏன்னு கேட்காமலேயே, ஆறு மாசம் தாடி, மீசை வளர்த்து ஆளே உருமாறியிருந்தேன். அப்போ திடீர்னு அமீர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது.

நானும், பி.ஆர்.ஓ பாலனும் சாலிகிராமம் சென்று, அமீர் மற்றும் சுப்பிரமணியம் சிவாவைப் பார்த்தோம். எனக்கு அழுக்கான லுங்கி, பனியன் கொடுத்து அணியச் சொன்னார்கள். கொஞ்ச நேரத்தில் பிச்சைக்காரனாக மாறினேன். அந்தத் தோற்றம்தான் என்னை சுப்பிரமணிய சிவா இயக்கத்தில் அமீர் ஹீரோவாக நடிச்ச ‘யோகி’ படத்துலே நடிகனாக ஆக்கிச்சி. அந்தப் படத்தில் சைக்கோ மாதிரியான பிச்சைக்காரன் வேடம். சொல்லிக் கொடுத்ததைப் புரிந்துகொண்டு நடித்தேன். ரசிகர்கள் என்னையும், நடிப்பையும் அடையாளம் கண்டுகொண்டு பாராட்டினார்கள்.

அதுக்கப்புறம் ‘அழகர்சாமியின் குதிரை’, ‘முத்துக்கு முத்தாக’, ‘நீர்ப்பறவை’, ‘ஒரு நடிகையின் வாக்குமூலம்’, ‘கயல்’, ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’, ‘இவன் தந்திரன்’, ‘நாகேஷ் திரையரங்கம்’ உள்பட நாற்பது படத்துக்கும் மேலே நடிச்சிட்டேன். காலம் கடந்தும் நான் சினிமாவில் எனக்குரிய ஓரிடத்தை அடைய அமீர், சுப்பிரமணியம் சிவா இருவரும்தான் காரணமாக இருந்தார்கள்.

1983ல் எஸ்.எஸ்.எல்.சி முடித்த நான் வேலூரில் உள்ள பாலிடெக்னிக் அல்லது ஐ.டி.ஐயில் சீட்டு கேட்க எம்.ஜி.ஆரைச் சந்தித்தேன். காட்பாடி தொகுதி எம்.எல்.ஏ இந்தச் சந்திப்புக்கு சிபாரிசு செய்திருந்தார். ராமாவரம் தோட்டத்தில் எம்.ஜி.ஆரைப் பார்த்தப்போ, “மார்க் ரொம்ப கம்மியா இருக்கு. எல்.எல்.ஏ.வோட சிபாரிசு இருந்தாலும்கூட நான் உனக்கு சிபாரிசு செய்யமுடியாது” என்று நேர்மையாக சொல்லிவிட்டார். வெறும் முகஸ்துதிக்காகவோ, அபிமானம் காரணமாகவோ அவர் தன்னுடைய யோக்கியத் தன்மையிலிருந்து தடம் புரளவில்லை என்பதே எனக்கு வாழ்க்கையில் பெரிய பாடமாய் அமைந்தது.

1986-87களில் வேலூர் ஓட்டல் ரிவர்வியூவில், ஹவுஸ்கீப்பிங் பிரிவில் பணியாற்றியபோது நடந்த மறக்கமுடியாத சம்பவம் இது. அப்போது தேர்தல் சுற்றுப்பயணத்துக்காக வேலூருக்கு வந்திருந்த கலைஞர் அவர்கள், ரிவர்வியூவில் தங்கினார். காலை தினசரி நாளிதழ்களைப் படித்து முடித்த அவர், ‘காபி வேண்டும்’ என்று கேட்டிருக்கிறார். என்னிடம் கலைஞரின் பிளாஸ்க்கைக் கொடுத்து, காபி வாங்கி வரச் சொன்னார்கள்.

சைக்கிள் மிதித்துச் சென்று, காபி வாங்க பிளாஸ்க்கைக் கொடுத்தேன். பிளாஸ்க்கை சுத்தமாகக் கழுவ நினைத்த கடைக்காரர், வெந்நீரில் சாதாரண தண்ணீர் கலக்காமல் ஊற்றினார். அவ்வளவுதான், பிளாஸ்க் உள்ளே இருந்த ரீஃபிள் உடைந்தது. எனக்குப் பேரதிர்ச்சி. நான் உடைத்தது கலைஞரின் பிளாஸ்க்..

கலைஞர் என்ன சொல்வாரோ, என் முதலாளி என்ன சொல்வாரோ என்று பயந்து போனேன். பிளாஸ்க் உடைந்த விஷயத்தைச் சொன்னேன். உடனே, கலைஞரிடம் சொல்லியிருக்கிறார்கள். கலகலவென்று சிரித்த அவர், ‘யார் அந்தப் பையன்?’ என்றார். ‘நான்தான் அய்யா’ என்று அவர் முன் நின்றேன். என்னைப் பார்த்த அவர், எதுவும் சொல்லவில்லை. ‘சரி சரி. ஓட்டலில் இருக்கும் பிளாஸ்க்கில் இருந்து காபி வாங்கி வா’ என்றார்.

இந்தச் சம்பவத்திலிருந்து நான் கற்றுக்கொண்ட பாடம், தவறு என்பது எதிர்பாராமல் நடக்கும். அதை நேர்மையாக ஒப்புக் கொண்டால் யாரும் நம்மை எதுவும் சொல்ல மாட்டார்கள். அன்று முதல் இன்றுவரை எந்த பிளாஸ்க்கையும் நான் உடைத்ததில்லை. உடைப்பதற்குக் காரணமாகவும் இருந்ததில்லை.

 திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள், தவத்திரு ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், உவமைக்கவிஞர் சுரதா, புதினப்பேரரசு கோவி.மணிசேகரன் போன்றோர் எனது இலக்கிய அறிவைச் செம்மைப்படுத்தியவர்கள். வேலூரான், வேலூர் தேவதேவன், சன்னியாசி போன்ற புனைபெயர்களில் புதுக்கவிதை, சிறுகதை, கட்டுரை, நகைச்சுவைத் துணுக்குகள் எழுதி வந்தேன்.

தமிழ் முன்னணி நாளேடுகள், வாராந்திர ஏடுகள், மாதமிருமுறை இதழ்களில் எனது படைப்புகள் வந்தன. எனது பதினெட்டாவது வயதில், அதாவது, 1986ல் வேலூர் பாலாற்றங்கரை அருள்மிகு ஸ்ரீ செல்லியம்மனைப் பற்றி நான் எழுதிய ‘வேண்டும் வரம் தருவாள்’ என்ற பக்திப் புத்தகத்தை கிருபானந்த வாரியார் வெளியிட்டார். அதில் இலக்கணப்படி பாடல்கள் எழுதியிருந்தேன். ‘உருவு கண்டு எள்ளாமை வேண்டும்’ என்ற தத்துவத்தை வாரியார் மூலம் மற்றவர்களுக்குப் போதித்தேன்.

 சுரதா தலைமையில் 1990ல் ஏற்காட்டில் நடந்த படகு கவியரங்கில், ‘பெண்ணுரிமை’ என்ற தலைப்பில் கவிதை பாடியபோது, நேரத்தை சரியாகக் கடைப்பிடிக்கவில்லை என்ற காரணத்தால், பரிசு பெறக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. சோர்ந்துபோய் அழுதேன்.

அப்போது சுரதா வந்து, ‘நீ யோக்கியமாதான் இருந்தே; நல்லாதான் கவிதை பாடினே; ஆனா, நேரம்னு ஒண்ணு இருக்கில்ல. அதை நீ கடைப்பிடிக்க மாட்டேன்னு அடம்பிடிச்சா, எப்படி உனக்கு பரிசு தருவாங்க?’ என்றார். ஆமாம், திறமை பெரிதல்ல. அந்தத் திறமையையும், அதை வெளிப்படுத்தக்கூடிய நேரத்தையும் நாம் மிகச் சரியாகக் கையாண்டால் மட்டுமே வெற்றி நம் வசப்படும் என்று நான் புரிந்துகொண்டேன்.

 கடந்த 2017 ஜூன் மாதம், சென்னை மருத்துவக்கல்லூரி  சென்ற நான், டாக்டர் சுதா சேஷய்யன் மூலமாக, இறந்தபின் மருத்துவ ஆராய்ச்சிக்காக என் முழு உடலையும் தானம் தர சம்மதம் தெரிவித்து, உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்துப் போட்டேன். பிறகு சங்கர நேத்ராலயாவில் இரு கண்களையும் தானம் செய்வதற்கான உறுதிமொழிப் பத்திரத்தை அளித்தேன்.

இதைக் கேள்விப்பட்ட நடிகர் கமல்ஹாசன், உடனே அவரது அலுவலகத்துக்கு என் குடும்பத்தினரை வரவழைத்துப் பேசும்போது, “தேவராஜ் இதைச் செய்தது பெரிய விஷயம் இல்லை. அதை அனுமதித்த குடும்பத்தினருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். இறந்த பிறகு நாம் சொர்க்கத்துக்கோ, நரகத்துக்கோ போகவில்லை. மண்ணில் அழியும் உடல், மருத்துவ ஆய்வு செய்யப் பயன்படட்டும் என்ற நல்ல எண்ணத்தில் அனைவரும் செயல்பட்டால் போதும்” என்று குறிப்பிட்டதோடு, “இப்படிச் செய்ய உங்களுக்கு யார் இன்ஸ்பிரேஷன்?’’ என்று கேட்டார்.

 வேலூரில் சில வருடங்களுக்கு முன் என் பெரியம்மாவும், பிறகு அவரது மகனும் இறந்தபோது, அங்குள்ள தொண்டு நிறுவனங்கள் ‘கண் தானம் மற்றும் உடல் தானம் செய்தவர்கள்’ என்று விழிப்புணர்வு கோணத்தில் போஸ்டர் ஒட்டியிருந்தார்கள். கிராமத்தில் இருக்கும் அவர்களே இவ்வளவு விழிப்புணர்வுடன் செயல்படும்போது, மாநகரத்தில், அதுவும் மீடியாவிலும், சினிமாவிலும் இருக்கும் நான் ஏன் இவ்வளவு பின்தங்கியிருக்கிறேன் என்று யோசித்து, உடனே செயலில் இறங்கினேன்.

நம் மனசாட்சிக்குப் பயந்து யோக்கியனாக இருந்தால் மட்டும் போதாது; சமூகப் பணியிலும் அதைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதையே அவர்களின் இறப்பு எனக்கு கற்றுக்கொடுத்தது எனலாம். இருக்கும்வரை பிறரையும் மகிழ்வித்து மகிழ்வோம். இறந்தபின்னும் நம் தானங்களால் பிறர் மகிழ்ந்தால் இங்கு அனைவரும் யோக்கியர்களே!

தொகுப்பு: சுரேஷ்ராஜா

(தொடரும்)