SCHOOL கேம்பஸ் ராஜ்கமல்



டைட்டில்ஸ் டாக் 71

ஸ்கூல் லைஃபைத்தான் யாராலுமே எப்பவுமே மறக்கமுடியாது. அதனாலேதான் நானும் நாகேஷ் சார் பேரன் கஜேஷும் சேர்ந்து நடித்திருக்கிற படத்துக்கு ‘ஸ்கூல் கேம்பஸ்’ என்று பெயர் வைத்திருக்கிறோம். பல வருடங்களுக்குப் பிறகு இந்தப் படத்துக்காக ஸ்கூல் யூனிஃபார்மை அணிந்து மாணவனாக மாறியதில் என் மனசு துள்ளிக் குதிக்க ஆரம்பித்திருக்கிறது.

திருச்சியில்தான் என்னுடைய ஸ்கூல் லைஃப். பத்து வருடங்களுக்குப் பிறகு பிறந்த குழந்தை என்பதால் என்னைக் கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொண்டார்கள் பெற்றோர். தவமாய் தவமிருந்து என்னைப் பெற்றெடுத்தார்கள். வீட்டுக்கு ஒரே பிள்ளை என்பதால் செல்லம் ஜாஸ்தி.நல்லா படிக்கிற பசங்க அதிக மார்க் எடுக்கவேண்டும் என்கிற மன அழுத்தத்துடன் பள்ளிக்கூடத்துக்குக் கிளம்புவார்கள்.

வறுமையில் இருக்கும் பசங்க கொஞ்சம் அச்சத்துடன்தான் பள்ளிக்குச் செல்வார்கள். நானோ தனிக்காட்டு ராஜா போல் இஷ்டம் போல் பள்ளிக்கூடத்துக்குச் செல்வேன். காமகோடி வித்யாலயாவில்தான் என் ஆரம்பக் கல்வி. கண்டிப்புக்கு பேர் போன பள்ளி அது. ஆனால், நான் ரொம்ப சேட்டையான மாணவன். அப்படியிருந்தும் அந்தப் பள்ளியில் எப்படியோ எட்டாம் வகுப்புவரை தாக்குப்பிடித்தேன்.

நாலைந்து வகுப்புவரை பள்ளிக்கூடத்தின் கண்டிப்புக்குள் அடங்கி இருந்தேன். அதன் பிறகு அடங்க மறுத்த மாணவனாக மாறினேன். அதற்கு ICSE என்ற பாடத் திட்டமும் ஒரு காரணம். அது CBSE மாதிரியான ஒரு பாடத்திட்டம். அந்தப் பாடத்திட்டம் எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் மற்ற மாணவர்கள் எளிதாகப் படித்தார்கள். தலைகீழ் நின்று தண்ணி குடித்தாலும் என்னால் படிக்க முடியவில்லை.

எவ்வளவு முயற்சி எடுத்தாலும் என்னுடைய சிற்றறிவுக்கு அது எட்டாத கனியாகவே இருந்தது. அதன் பிறகு என் போராட்டத்தை விட்டுவிட்டேன். வகுப்புகள் மாற மாற மார்க்குகள் குறைய ஆரம்பித்தது; மார்க் குறைய ஆரம்பித்ததும் கட் அடித்துவிட்டு வெளியே சுத்த ஆரம்பித்தேன். வகுப்பைப் பொறுத்தவரை கடைசி பெஞ்ச் கார்த்தி போல் மாறினேன்.

திருச்சி மாதிரி மாநகரங்களில் கட் அடித்தால் மாணவர்களின் புகலிடம் சினிமா தியேட்டர் மட்டுமே. நானும் விதிவிலக்கு அல்ல. திருச்சியில் புகழ்பெற்ற தியேட்டர் மாரீஸ். ஒரே காம்ப்ளக்ஸில் அஞ்சு ஸ்க்ரீன்.

டவுசர் போட்டிருந்தால் தியேட்டருக்குள் அனுமதிக்கமாட்டார்கள் என்பதால் வீட்ல இருந்து கிளம்பும் போதே பைக்குள் ஒரு கலர் பேண்டை சுருட்டி வைத்துக் கொள்வேன். காலைக் காட்சி, மதிய காட்சி பார்த்துவிட்டு ஸ்பெஷல் க்ளாஸ் என்று சொல்லி ஈவினிங் ஷோவையும் பார்த்துவிட்டுத்தான் வீட்டுக்குத் திரும்புவேன். டிக்கெட்டுக்கு அப்பா பாக்கெட்டில் இருந்து ஆட்டையைப் போடுவேன். சில சமயம் அம்மா மளிகைக்காகக் கொடுக்கும் பணத்தில் கமிஷன் அடிப்பேன்.

ரஜினி சாரின் தீவிர ரசிகன் என்பதால் அவர் படங்களை விரும்பிப் பார்ப்பேன். மற்றபடி யார் படமா இருந்தாலும் பார்ப்பேன். திரையில் படமே ஓடவில்லை என்றாலும் வெறுமையான திரையையும் அதிசயமாகப் பார்ப்பேன். அந்தளவுக்கு எனக்குள் சினிமா மீது மோகம் இருந்தது. அதன் தாக்கத்தால்தான் நான் நடிகனானேன்.

பொதுவா சின்ன வயசு பசங்களுக்கு அவங்களுடைய அப்பா ஹீரோவாகத் தெரிவாங்க. என் விஷயத்தில் நானே எனக்கு ஹீரோவா தெரிந்தேன். ஏன்னா, ஸ்கூலில் நடக்கும் நடனம், பாடல் போட்டி, காம்பியரிங் என்று அனைத்து கல்ச்சுரல் ஆக்டிவிட்டீஸிலும் நான்தான் முதல் ஆளாகப் பங்கேற்று முதல் பரிசைத் தட்டிச் செல்வேன். ஸ்கூல் மிஸ்ஸே சில சமயம் ஓரிரு போட்டியில் பங்கேற்றால் போதாதா, உனக்கு போரடிக்கவில்லையா என்று கலாய்த்தும் இருக்கிறார்கள்.

சின்னத்திரை, வெள்ளித்திரை என்று எல்லா தளங்களிலும் நான் இயங்கி வருவது சிலருக்கு ஆச்சயர்யமாக இருக்கலாம். ஆனால் அப்பவே நான் அப்படித்தான். சின்ன வயதில் என் கூட படிச்ச பசங்க என்னை ஹீரோ லெவலுக்கு திரிச்சிவிட்டாங்க. அதனால் பந்தாவா ஷர்ட் காலரை ஸ்டைலா தூக்கிவிட்டுத் திரிவேன். இதெல்லாம்தான் நான் படிக்காமல் போனதற்குக் காரணமா நினைக்கிறேன்.

எட்டாம் வகுப்பு படிக்கும் போது ஒரு திருப்பு முனை. இந்த வருடம் நாங்க 100 சதவீதம் ரிசல்ட் காட்டவேண்டும். உன்னை வைத்திருந்தால் அதை பண்ண முடியாது. நீயா டிசியை வாங்கிட்டுப் போனா பாஸ் போட்டு அனுப்புவோம். இல்லைன்னா பெயிலாக்கி அனுப்புவோம் என்று ஸ்கூல் நிர்வாகம் ஒரு டீல் போட்டது. எனக்கு முதல் டீல் பிடித்திருந்ததால் டிசியை வாங்கிவிட்டு நடையைக் கட்டினேன்.

திருச்சியில் புகழ் பெற்ற E.R அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு சேர்ந்தேன். ஒன்பது, பத்து எனக்கு எளிதாகத் தெரிந்தது. காரணம், தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பில் படித்த விஷயங்கள் ஒன்பதாம் வகுப்பில் இருந்ததால் எளிதாகத் தோன்றியது.

ப்ளஸ் ஒன் ப்ளஸ் டூ படித்த அந்தக் காலகட்டங்கள் என் வாழ்வில் மறக்கமுடியாத பீரியட். என்னுடன் படித்த சக நண்பர்கள் இப்போது பெரிய லெவலில் இருக்கிறார்கள். அன்பில் மகேஷ் MLA வின் தம்பி உதயநிதி, மும்பை இண்டியன்ஸ் கேப்டன் சதீஷ் ராஜகோபால் ஆகியோர் என்னுடைய க்ளாஸ்மேட்ஸ்தான். இவர்கள் தவிர என் நண்பர்கள் பலர் டாக்டர்களாகவும், தொழிலதிபர்களாகவும் உள்ளார்கள்.

வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டிய ஒட்டுமொத்த இனிமையையும் ப்ளஸ் டூ வாழ்க்கையில் அனுபவித்தேன். ஆனால் ஒரே ஒரு குறை எனக்குள் இருந்தது. என் பள்ளியில் கோ-எஜுகேஷன் இல்லாமல் போனதுதான் மனசுக்குள் வடுவாக இருந்தது. அந்த வடு இப்போது நடிக்கும் ‘ஸ்கூல் கேம்பஸ்’ படத்தின் மூலம் மாயமாகிவிட்டது என்று சொல்லலாம். ஏன்னா இதில் அழகான பெண்கள் இருக்கிறார்கள்.

மாணவர்களுக்கு நான் சொல்லும் ஒரே விஷயம், ஸ்கூல் ஃலைப் எப்போது முடியும் என்று நினைக்காதீங்க. அப்படி நினைக்கிறவர்கள் என்னைப் பொறுத்தவரை முட்டாள்கள். ஏன்னா, அவங்க வாழ்க்கையில் பெரிய விஷயத்தை மிஸ் பண்ணுகிறார்கள்.

வாழ்க்கையில் எவ்வளவு உயர்ந்தாலும் நீங்கள் மறுபடியும் உள்ளே போகமுடியாத அறை இரண்டு மட்டுமே. முதல் அறை தாயின் கருவறை; இரண்டாவது உங்கள் வகுப்பறை.இந்த இரண்டு அறைகளுக்குள்ளும் எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும் உள்ளே போகமுடியாது. அதனால் ஸ்கூல் ஃலைபை மகிழ்ச்சியாய் கடக்கப் பாருங்கள்.

தொகுப்பு: சுரேஷ்ராஜா

(தொடரும்)