அழகா இருக்கேன்னு நடிக்கக் கூப்பிடாதீங்க!



தமிழ் சினிமாவில் தொழில்நுட்பக் கலைஞர்களாக பெண்கள் பணியாற்றுவது அரிதிலும் அரிது. இப்போது ‘ஆண்டனி’ மூலமாக அறிமுகமாகியிருக்கும் பெண் இசையமைப்பாளர் சிவாத்மிகா. இவருக்கு பத்தொன்பது வயதுதான் ஆகிறது.சிவாத்மிகாவோடு பேசினோம்.“உங்க பின்னணி?”

“கோயமுத்தூர் பக்கத்துலே சிங்காநல்லூரு சொந்த ஊரு. பிளஸ்டூ வரை படிச்சிருக்கேன். அப்பா ராஜேஷ், அம்மா சங்கீதா. என்மேல அதிக நம்பிக்கை வெச்சு, ‘ஒரு டிகிரியாவது வாங்கிடு’ன்னு சொன்னாங்க. எனக்கு படிப்பைவிட மியூசிக்தான் இஷ்டம். பிளஸ்டூவில் ரொம்ப குறைச்சலாதான் மார்க் வாங்கினேன். ‘சரி, உனக்கு இஷ்டமான துறையில் முயற்சி பண்ணி ஜெயிக்கணும்’னு பாசிட்டிவ்வா வாழ்த்தினாங்க.

சென்னைக்கு வந்து வடபழனியில் வாடகைக்கு வீடு எடுத்து தனியாகத் தங்கினேன். ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்கூலில் ‘எலெக்ட்ரானிக் மியூசிக் புரொடக்‌ஷன்ஸ்’ படிச்சேன். ஆறாவது படிக்கிறதுலே இருந்தே இசைதான் எனக்கு எல்லாம். அப்பவே மியூசிக் கம்போஸிங், மெட்டு போடறதுன்னு பழகிட்டேன். அந்த முயற்சியும், பயிற்சியும்தான் என்னை இந்த சின்ன வயசுலேயே மியூசிக் டைரக்டர் ஆக்கியிருக்கு.”

“ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்கூலில் படிச்சதுமே, மியூசிக் டைரக்டர் வாய்ப்பு கிடைச்சிடுச்சா?”

“ஈஸியாகச் சொல்லிட்டீங்க.... சென்னைக்கு வந்து நான் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமா? ஒருவாட்டி அதைப் பத்தியெல்லாம் புலம்பி ஃபேஸ்புக்குலே ஸ்டேட்டஸ்  கூடப் போட்டிருந்தேன். அந்த ஸ்டேட்டஸை நிறைய பேருக்கு மெயில் அனுப்பியிருந்தேன். அந்த அடிப்படையில்தான் ‘ஆண்டனி’ படத்தோட எக்ஸிகியூட்டிவ் புரொடியூஸர் விவேக் சார் மூலமா எனக்கு வாய்ப்பு கிடைச்சது. மியூசிக் மட்டுமில்லாமே இந்தப் படத்துலே ரெண்டு பாட்டும் பாடியிருக்கேன்.”

“சினிமாவில் இசையமைப்பாளர் ஆவதுதான் உங்க லட்சியமா?”

“அப்படிச் சொல்லமுடியாது. எனக்கு மியூசிக் பற்றி நிறைய விஷயங்கள் தெரியும். உலக லெவல் மியூசிக்கை இந்தியாவுக்கு கொண்டு வர்றது பெரிய விஷயம் இல்லை. நம்ம மியூசிக்கை உலக லெவலுக்கு கொண்டு போய் மார்க்கெட் பண்ணணும்.

அதுதான் பெரிய விஷயம். அதைச் செய்யறதுதான் என் லட்சியம். இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் மாதிரி எவர்கிரீன் சாங்ஸ் பண்ணணும். ஒரு வருஷத்துலயோ, இல்ல, பத்து வருஷத்துலயோ கேட்டுட்டு மறந்துடற மாதிரி சாங்ஸ் பண்ணக்கூடாது. காலம் கடந்தும் என் பாட்டுகள் ஆடியன்ஸ் மனசுல நிக்கணும்.”

“சினிமாவில் நடிக்கவும் நீங்க ரெடியா இருப்பதா சொல்றாங்களே?”

“சேச்சே. நான் அழகா இருக்கேன். நடிக்க வாய்ப்பு வந்தா என்ன பண்ணுவேன்னு எல்லாரும் கேட்குறாங்க. நோ. எனக்கு நடிப்புல இன்ட்ரஸ்ட் கிடையாது. ஆனா, சினிமாவில் வேற வேற பிளான்ஸ் வெச்சிருக்கேன்.

நான் மியூசிக் டைரக்டராக முடிவு செய்தவுடனே ஒரு ஸ்கிரிப்ட் ரெடி பண்ண ஆரம்பிச்சிட்டேன். அந்தக் கதையை நானே டைரக்ட் பண்ணுவேன். டெக்னிக்கல் சைடுல ஆர்வம் அதிகமா இருக்கிறதுனாலதான் நடிப்பு பற்றி பெரிய ஆசையில்லை. மியூசிக் மற்றும் பாட்டு விஷயத்துல என் தனித்துவத்தை நிரூபிக்கணும். டைரக்‌ஷனில் கலக்கணும்.”

“காதல், கல்யாணம்?”

“அதையெல்லாம் யோசிக்கிற வயசா இது? நிறைய படத்துக்கு மியூசிக் போடணும். நிறைய சம்பாதிக்கணும். சென்னையிலேயே சொந்தமா வீடு வாங்கணும். அதுக்கு அப்புறமாதான் கல்யாணம் பத்தியெல்லாம் யோசிக்கவே முடியும்.”

- தேவராஜ்