யானையை எறும்பு வீழ்த்தும் ‘செயல்’



ஒரு புதுமுக நடிகருக்கு சினிமா ஆசை இருக்கும். வெறி இருக்குமா? “எனக்கு இருக்கிறது, இனியும் இருக்கும்” என்கிறார் ராஜன் தேஜேஸ்வர். ‘செயல்’ படத்தின் ரிலீஸ் பரபரப்பில் இருந்தபோதும் பேட்டி என்றபோது எந்த தயக்கமும் இல்லாமல் பேசத் தொடங்கினார்.
“அப்பாவோட தயாரிப்பிலேயே நடிகராக அறிமுகம் ஆகுறீங்க. எக்கனாமிக்கலா பெரிய ரிஸ்க்தான் இல்லையா?”

“ரிஸ்க்கெடுத்தாதான் ஜெயிக்க முடியும். எனக்காக என்னோட அப்பா ரிஸ்க் எடுத்திருக்காரு. சரியான தயாரிப்பாளர் அமையாத காரணத்தினால் அப்பாவே தயாரிக்க முடிவெடுத்தாரு. எங்களோட பூர்வீகம் தமிழ்நாடுதான். பிசினஸுக்காக தாத்தா காலத்திலேயே திருப்பதியில் செட்டில் ஆன குடும்பம். சின்ன வயசுலேருந்தே எனக்கு சினிமான்னா உயிர்.

ஒரு கட்டத்தில் அது வெறியாகவே ஆயிடிச்சி. திருப்பதியில் நேரடியாகவே தமிழ்ப் படங்கள் ரிலீஸ் ஆகும். ஒரு படம் விடமாட்டேன். என்ஜினியரிங் முடிச்சதும் சினிமாவுக்காக என்னைக் கொஞ்சம் கொஞ்சமா தயார் பண்ணிக்கிட்டேன். பாண்டியன் மாஸ்டரிடம் சண்டை, மைம் கோபியின் ஆக்டிங் ஸ்கூலில் நடிப்புன்னு அடிப்படை வேலைகள் அத்தனையையும் கத்துக்கிட்டு வாய்ப்பு தேடினேன்.

அந்த சமயத்தில் ‘ஷாஜகான்’ படத்தை இயக்கிய ரவி சாரோட நட்பு கிடைச்சது. அவர் ஒரு அருமையான கதைசொல்லி. எனக்கு சொன்ன கதை ஒண்ணு ரொம்பவே கவர்ந்திருந்தது. நான் சினிமாவில் அறிமுகமாக எப்படிப்பட்ட கதை தேவைன்னு தேடிக்கிட்டு இருந்தேனோ, அதே கதை. மக்களுக்கு அறிமுகமில்லாத ஒரு புதுமுக ஹீரோவுக்கு இப்படிப்பட்ட வெயிட்டான சப்ஜெக்ட் கிடைக்கிறது கஷ்டம். எனக்கு மிஸ் பண்ண இஷ்டமில்லை. என்னோட பரிதவிப்பை பார்த்துட்டுதான் அப்பாவே தயாரிக்க முன்வந்தாரு. படம் பொருளாதார ரீதியாகவும் எங்களைக் காப்பாத்தும்னு நம்பிக்கையா இருக்கோம். அந்தளவுக்கு பிரமாதமா வந்திருக்கு.”

“முன்னாடி ரசிகனா இருந்தீங்க. இப்போ நீங்களும் இண்டஸ்ட்ரியில் ஓர் அங்கம்....”“ஆமாம் சார். கனவு மாதிரி இருக்கு. முன்னாடியெல்லாம் படத்தைப் பார்த்துட்டு ஃபேஸ்புக், ட்விட்டரில் மனம் போன போக்கில் ‘சுமார்’, ‘மொக்கை’ன்னுலாம் கமெண்ட் எழுதுவேன். சினிமாவைப்பத்தி நெகட்டிவ்வா எழுதினாதான் அதிகமா லைக் விழும். அதனாலேதான் இணைய விமர்சகர்கள் எல்லாரும் சினிமாவை மாஞ்சி, மாஞ்சி திட்டித் தீர்க்குறாங்க.

ஆனா- இப்போ நானே சினிமாவுக்குள் வந்துட்ட பிறகுதான் இந்தத் துறையோட கஷ்ட நஷ்டங்கள் தெரியுது. எவ்வளவு இமாலய உழைப்பை ஒரு நொடியிலே நம்ம ஈகோவுக்காக நிராகரிச்சிக்கிட்டு இருந்திருக்கோம்னு தெரியுது. சொல்றது ஈஸி சார். செய்யுறது ரொம்பவே கஷ்டம். சின்ன படமோ, பெரிய படமோ எல்லாத்துக்கும் டெக்னீஷியன்ஸ் ஒரே மாதிரிதான் உழைப்பைக் கொடுக்குறாங்க. சண்டைக் காட்சிகளில் ஸ்டன்ட்மேன்கள் உயிரைத் துச்சமா நினைச்சு பெஸ்ட் கொடுக்குறதைப் பார்க்குறப்போ, இந்தத் துறையோட சீரியஸ்னஸ் நல்லா புரியுது.”

“படத்தோட ஸ்டில்ஸை பார்த்தா, முதல் படமே மாஸ் படம் போலிருக்கே? அரசியலுக்கெல்லாம் வருவீங்களா?”

“இது ஆக்‌ஷன் ஸ்க்ரிப்ட். யானை பலம் கொண்ட ஒருவனை எளிமையான எறும்பு மாதிரி ஒருத்தன் மோதி சாய்க்கிற கதை. யாரு, என்னன்னு தெரியாம விளையாட்டுத்தனமா வில்லனை பொது இடத்தில் வெச்சு ஒருமுறை துவைச்சி காயப் போட்டுடறாரு சராசரி ஹீரோ. அந்த ஹீரோவை வில்லன் என்ன பாடு படுத்துறாரு, வில்லன்கிட்டே இருந்து ஹீரோ எப்படி டெக்னிக்கலா தப்பிக்கிறார் என்பதை காமெடி, ஆக்‌ஷனோடு சொல்லியிருக்கோம். ஆங்.... அப்புறம் அரசியல் பத்தி கேட்டீங்க இல்லே.... அதை ஜோக்குன்னு எடுத்து சிரிச்சிக்கறேன்.”

“இன்னொரு வேலை வெட்டி இல்லாத ஹீரோவா?”

“அப்படியும் சொல்லலாம். டீசண்டா படிப்பு முடிச்சிட்டு வேலை தேடுற இளைஞன்னும் சொல்லலாம். தப்பைக் கண்டதுமே தட்டிக் கேட்குற அழுத்தமான கேரக்டர். எனக்கு தருஷி ஜோடியா நடிச்சிருக்காங்க. ஃபர்ஸ்ட் டேயிலிருந்தே நாங்க நல்ல ஃபிரெண்ட்ஸ். அதனாலே ரொமான்ஸ் காட்சிகளில் ரீடேக் வாங்காம ரொம்ப ஜாலியா நடிச்சிருக்கோம். வில்லனாக சமக் சந்திரா பண்ணியிருக்கிறார். இந்தப் படத்தில் எனக்கு ஆக்‌ஷன் இருக்கு. காமெடி இருக்கு. லவ் இருக்கு. முதல் படமே பக்கா கமர்ஷியல் சப்ஜெக்ட்டா கிடைச்சிருக்கு.”

“உங்க டைரக்டரைப் பற்றி சொல்லவே இல்லையே?”

“அவரோட முதல் படமே இளைய தளபதி விஜய்யை ‘ஷாஜஹான்’னு இயக்கினவரு. ரவி அப்புலு சார், கிட்டத்தட்ட பதினைஞ்சு வருஷம் கழிச்சி அவரோட இரண்டாவது படத்தை என்னை ஹீரோவா வெச்சி எடுக்குறது எனக்கு சென்டிமென்டா ரொம்ப நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கு. சினிமாவில் அவ்வளவு எக்ஸ்பீரியன்ஸ் இருந்தாலும், பந்தா கொஞ்சம்கூட காட்டமாட்டார்.

எல்லா ஆர்ட்டிஸ்டுகளிடமும் ஒரே மாதிரிதான் பழகுவார். காட்சிகளை அவ்வளவு அழகா சொல்லிக் கொடுப்பாரு. புதுமுகம்னு என்னை அலட்சியமா கையாளாம, என்னோட ஆலோசனைகளையும் மதிச்சிக் கேட்டாரு. நான் சொன்னது சரியா இருந்தா அனுமதிப்பாரு. முதல் படத்திலேயே என்னோட மொத்தத் திறமையையும் வெளிக்கொண்டு வந்திருக்காரு.”

“நெக்ஸ்ட் பிராஜக்ட்?”

“என்னோட அப்பா சி.ஆர்.ராஜன், படத்தைப் பார்த்துட்டு ‘நல்லா வந்திருக்கு’ன்னு சொன்னாரு. சொன்னதோட இல்லாம உடனே அடுத்த படத்தையும் தொடங்கிட்டாரு. சமுத்திரக்கனி சாரோட உதவியாளர் சாய் சங்கர் இயக்குறாரு. ‘குமாரு வேலைக்கு போறான்’னு வித்தியாசமான டைட்டிலோட களமிறங்குறேன். டைட்டிலைப் பார்த்ததுமே தெரிஞ்சிருக்கும். இதுவும் ஜனரஞ்சகமான படம்தான். தேனி பேக்டிராப்பில் பக்கா நேட்டிவிட்டி ஸ்டோரி. அடுத்து பூபதி பாண்டியன் சாரோட உதவியாளர் சுதாகர் இயக்குற படத்திலும் நடிக்கிறேன்.”

“சினிமா தவிர என்னவெல்லாம் பிடிக்கும்?”

“கிரிக்கெட். நிஜமாவே நான் ஒரு கிரிக்கெட் பிளேயர். டிவிஷன் போட்டிகளில் எல்லாம் விளையாடி இருக்கேன். அடுத்து ரஞ்சி கோப்பையில் விளையாடுற ஸ்டேஜில் சினிமாவுக்கு வந்துட்டேன். ஒருவேளை சினிமாவுக்கு வரலைன்னா அப்பாவோட கன்ஸ்ட்ரக்‌ஷன் தொழிலில் அவருக்கு உதவியா இருந்திருப்பேன்.”

“பிடித்த நடிகர்?”

“தனுஷ் சார். அவரோட படம் ஒண்ணு விடாம பார்த்திருக்கேன். சினிமா பின்புலம் இருந்தாலும், அதை தன்னோட முதலீடா நினைக்காம தன்னோட உழைப்பை மட்டுமே முன்னிறுத்தி இந்தப் பெரிய இடத்துக்கு வந்திருக்காரு. அவர் எனக்கு லைஃப்லேயும் இன்ஸ்பிரேஷன்.”

- சுரேஷ்ராஜா