கூட்டத்தில் ஒருவன் இயக்குநர் த.செ.ஞானவேல்



டைட்டில் ஸ்டாக் 66

‘இந்த உலகத்துல வாழுற எழுநூறு கோடி மனிதர்களும், வெற்றியைத்தான் தேடி ஓடிக்கிட்டே இருக்கோம்.  கூட்டத்தோட கூட்டமா ஓடுற எல்லாருக்கும் தான் யாரு, தன்னோட அடையாளம் என்னங்கிற கேள்வி இருந்துக்கிட்டே இருக்கு. அதுக்குப் பதில் கிடைச்சவங்க ஆயிரத்துல ஒருத்தரா மாறிடறாங்க.  பதில் கிடைக்காதவங்க கூட்டத்துலே ஒருத்தராவே இருந்துடுறாங்க.

“வாழ்க்கை ஒரு ஓட்டப் பந்தயம்னா, மிடில்பெஞ்ச் பசங்க அதுல ஜெயிக்கவும் மாட்டோம்,  தோற்கவும் மாட்டோம். ஏன்னா, போட்டியில கலந்துக்கவே மாட்டோம். கைதட்டி வேடிக்கைப் பார்க்கிற கூட்டத்துல ஒருத்தராதான் இருப்போம்” என்னோட படத்துலே இந்த வசனம்தான் கதாநாயகனோட அறிமுகம். ‘கூட்டத்தில் ஒருத்தன்’ என்பது யாரென்ற கேள்விக்கு விடை சொல்வதா இது அமைஞ்சிருக்கும்.

 கூட்டத்தில் ஒருத்தராக இருந்துகொண்டு, ஆயிரத்தில் ஒருத்தனா மாறிவிட வேண்டும் என்கிற ஏக்கத்தோடும், கனவோடும், இயலாமையோடும் இருக்கிற மனிதர்களைப் பற்றி கதை செய்யவேண்டும் என்று உந்துதல் ஏற்பட சில காரணங்கள் உண்டு. சில வருடங்களுக்கு முன்பு ஒரு பொது இடத்தில், எனக்கு அறிமுகம் இல்லாத ஒருத்தர், என்னுடைய பெயரைச் சொல்லி அழைத்தார்.

அன்புடன் என் குடும்பத்தைப்பற்றி, மற்ற நண்பர்களைப் பற்றி விசாரித்தார். எனக்கு அவர் யாரென்று தெரியவில்லை. எவ்வளவோ முயற்சி செய்தும், அவரை எங்கு பார்த்திருக்கிறேன் என்பதை நினைவுகூர முடியவில்லை. அவர் யாரென்று தெரியவில்லை என்று வெளிப்படையாகவே கேட்டேன். அன்புடன் என்னை விசாரித்துக் கொண்டிருந்த அவருடைய முகம் வாடிப்போனது. அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு, ‘எங்கு சந்தித்தோம்?’ என்பதை நினைவுபடுத்தச் சொன்னேன்.

மிகுந்த வருத்தத்துடன், அவர் சொன்னார், ‘‘நாம் மூன்றாண்டுகள் ஒன்றாக கல்லூரியில் படித்தோம்.” அவர் சொன்னதும் லேசாக நினைவுக்கு வந்தது. அப்போதும் அவருடைய பெயர் நினைவுக்கு வரவில்லை. கல்லூரியில் படிக்கும்போது வகுப்பில் மொத்தம் ஐம்பதுக்கும் குறைவானவர்களே படித்தனர். பல வருடங்கள் கழிந்த நிலையிலும் அவர் என்னை நன்றாக நினைவு வைத்திருந்தார்.

அவருடைய பெயரைக்கூட நான் நினைவில் வைத்துக் கொள்ளவில்லை என்கிற உண்மை அவரைக் காயப்படுத்தியது. அவரிடம் மன்னிப்புக் கேட்டு கொண்டாலும், என் மனதை அந்த நிகழ்வு ஆழமாகப் பாதித்தது.  நம்மோடு படித்தவர்களில் எத்தனை பேருடைய பெயரும், முகமும் நினைவு இருக்கிறது என்று யோசித்துப் பார்க்கும்போது, நன்றாகப் படித்த முதல் பெஞ்ச் மாணவர்கள் நினைவில் வந்தனர்.

எப்போதும் வம்பிழுத்து பிரச்சினைகள் செய்கிற கடைசி பெஞ்ச் மாணவர்கள் பெயரும் முகமும் நினைவில் வந்து போனது. அமைதியாக ‘தான் உண்டு, தன் வேலை உண்டு’ என்று இருந்த எந்த மாணவரின் பெயரும் முகமும் நினைவுக்கு வரவில்லை. படிக்கிற காலத்திலேயே, ‘இவர் நம்முடைய வகுப்பில் படிக்கிற மாணவர்’ என்று தெரியுமே தவிர, மொத்த மாணவர்களின் பெயரும் யாருக்கும் நினைவில் இருக்காது.

‘நம்மை யாரும் கண்டுகொள்வதில்லை என்பதும், நாம் யாருக்கும் முக்கியமில்லை’ என்பதும் அந்த மிடில் பெஞ்ச் மாணவர்கள் மனதில் ஆறாத காயமாக எப்போதும் இருக்கிறது என்பதையும் உணரமுடிந்தது.  இது ஏதோ கூட்டமாக இருக்கிற இடத்தில் மட்டும் அல்ல, இரண்டு மூன்று பிள்ளைகள் இருக்கிற வீடுகளில் கூட ஆவரேஜ் குழந்தைகளுக்கு எவ்விதமான முக்கியத்துவமும் இருக்காது.

ஆவரேஜ் மனிதர்களின் வாழ்க்கையை அப்படியே கவனிக்க ஆரம்பித்தேன். எங்கும் எதிலும் முக்கியத்துவமற்ற மனிதர்களாக அவர்கள் இருந்தனர். வீடு இருக்கும் தெருவில், சுட்டியான குழந்தைகளையும், வால்தனம் செய்கிற குழந்தைகளையும் அனைவரும் அறிந்து வைத்திருப்பார்கள்.

சொன்ன பேச்சைக் கேட்டுக்கொண்டு, அமைதியாக இருக்கிற குழந்தைகளை யாரும் கண்டு கொள்ளாததுடன், அதிக வேலை வாங்குவது, மற்ற குழந்தைகள் ‘தேவையில்லை, நிறம் பிடிக்கவில்லை’ என்று தூக்கி எறிவதை அமைதியாக இருக்கும் ஆவரேஜ் குழந்தைகளுக்கு வழங்குவது சாதாரண நிகழ்வாக இருந்தது. பெற்றோர்களே இதை கவனமின்றி செய்வது ஒவ்வொரு வீட்டிலும் நடக்கிறது. முதல் குழந்தைக்கு எல்லா விளையாட்டுப் பொருட்களும், உடைகளும், புதிதாகக் கிடைக்கும்.

அந்தக் குழந்தை வளர்ந்த பிறகு, அந்தப் பொருட்களை தூக்கி எறியாமல் அப்படியே பாதுகாத்து வைப்பார்கள். அடுத்த குழந்தை பிறந்தவுடன், எல்லா பழைய பொருட்களும் அடுத்து பிறந்த குழந்தைகளுக்குக் கிடைக்கும். மனதளவில் இது பாதிப்பை ஏற்படுத்தி அவர்களை ‘ஆவரேஜ்’ குழந்தைகளாக மாற்றுகிறது என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.

அண்ணனுக்கு புது சைக்கிள் என்றால், தம்பிக்கு பழைய சைக்கிள்தான் கிடைக்கும். அக்கா படித்த புத்தகம்தான், அடுத்த குழந்தைக்கு புதிய புத்தகம். ஆனால், இந்த ஆவரேஜ் மனிதர்களின் ஆகப்பெரிய சொத்து, கடும் உழைப்புதான். எதுவும் தங்களுக்கு சுலபமாகக் கிடைக்காது என்பதை உணர்ந்து கடுமையாக உழைப்பார்கள்.

பெரிய வெற்றியை அவர்கள் ருசிக்காமல் போனாலும், அவர்கள் வாழ்வில் தோல்வியடையாமல் அவர்களின் உழைப்பு காப்பாற்றிவிடும். சின்னச் சின்ன விஷயங்களுக்கும் சந்தோஷப்படத் தெரிந்து வைத்திருப்பார்கள். வாழ்வில் பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல் இருப்பதால், ஏமாற்றங்களும் அவர்களுக்கு இருப்பதில்லை. வேலை, குடும்பம் என்று தனிப்பட்ட வாழ்வில் நல்ல நிறைவுடனே வாழ்கிறார்கள்.

சின்ன வயதில் முக்கியத்துவமற்று வாழ்கிற ‘சாதாரண ஆவரேஜ் மனிதர்களுக்கு’ முக்கியத்துவம் கொடுத்து கதை செய்ய முடிவு செய்தேன். படத்தின் ட்ரைலர் வந்தவுடன், ‘இது என்னுடைய கதை, இது அப்படியே என்னுடைய வாழ்க்கை’ என்று நல்ல வரவேற்பு கிடைத்தது. ‘கூட்டத்தில் ஒருத்தன்’ என்கிற டைட்டில் வடிவமைப்பே தனி போஸ்டராக அடிக்கும் அளவு சிறப்பாக அமைந்தது. பொதுவாக ஒரு படத்தின் தலைப்பை எழுத்தால் எழுதுவார்கள்.

‘கூட்டம் கூட்டமாக இருக்கும் மனிதர்களை’ வைத்து டைட்டிலை வடிவமைத்தோம். அந்தக் கூட்டத்தை ‘ஜூம்’ செய்து பார்த்தால், சாதாரண மனிதர்களே நிரம்பி வழிவார்கள். மனிதக் கூட்டத்தை வைத்தே வடிவமைக்கப்பட்ட அந்த டைட்டிலுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
‘சாதிப்பதுதான் வாழ்க்கை’ என்று அனைவரும் மூச்சிரைக்க ஓடிக்கொண்டிருக்கும்போது, ‘மகிழ்ச்சியாக இருப்பதே சிறந்த வாழ்க்கை’ என்பதை கூட்டத்தில் ஒருத்தராக இருக்கிற மனிதர்கள்தான் நமக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

முதல் திரைப்படம் எடுக்கும்போது ஒவ்வொரு இயக்குனருக்கும் அந்தப் படத்தைப் பற்றிய ஒரு கனவு இருக்கும். முதல் படம்தான் அந்த இயக்குனரின் ‘சிக்னேச்சர்’ என்றுகூட சொல்லலாம். முக்கியத்துவமற்ற மனிதர் களின் வாழ்க்கையை முக்கியத்துவப்படுத்தி கதை சொல்வதே என்னுடைய விருப்பம். இனியும் தொடர்ந்து, ‘பேசா மனிதர்களைப் பற்றி தொடர்ந்து படம் இயக்குவதே என்னுடைய விருப்பம்.

தொகுப்பு : சுரேஷ்ராஜா
(தொடரும்)