நடிகையர் திலகம்



வரலாற்றுப் பெட்டகம்!

நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கையை எழுதும் அசைன்மென்ட் பத்திரிகையாளர் சமந்தாவுக்குக்  கிடைக்கிறது. அவருக்கு உதவி செய்கிறார் ஒளிப்படக்கலைஞர் விஜய் தேவரகொண்டா. இருவருக்குமிடையேயான காதல் ஒருபக்கம் கிளைக்கதையாக விரிகிறது. 1980களில் சாவித்திரியின் கோமா ஸ்டேஜில் ஆரம்பிக்கும் கதை, சாவித்திரியின் அத்தை  பானுப்ரியாவின் கதை சொல்லலில் வளர்கிறது.

வெகுளித்தனமாக விஜயாவாஹினி ஸ்டுடியோவில் உலா வருவது, வளர்ந்த நிலையில் பலருக்கும்  உதவுவது, மருத்துவமனைக் காட்சிகள், மதுக்கோப்பைகளுடன் வாழ்வது, முதன்முறை கேமராவைப் பார்க்கும் போது கூச்சம், ஜெமினியுடன் இன்னொரு பெண் இருப்பதைக் கண்டு கோபம், தன்னை ஏமாற்றியவர்களைச் சகித்துக்கொள்வது  என சாவித்திரியின் நடவடிக்கைகளை அற்புதமாக நகலெடுத்து நல்ல பெயர் வாங்குகிறார் கீர்த்தி சுரேஷ்.

14 வயது முதல் 43 வயதில் மரணப் படுக்கையில் தள்ளப்படும் வரை உள்ள சாவித்திரியின் வாழ்க்கையை, உடல்மொழியாலும் உணர்வாலும் அபாரமாக வெளிப்படுத்தியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். உடல் எடை அதிகமாகத் தோன்றும் காட்சிகளில், அப்படியே சாவித்திரியைப்  பார்ப்பது போன்ற உணர்வை ரசிகர்கள் பெறுகிறார்கள்.

ஜெமினி கணேசனின் கதாபாத்திரத்தில்  சிறப்பாக நடித்திருக்கிறார் துல்கர் சல்மான். ``என்னோட எல்லா கிரெடிட்டையும் நீயே எடுத்துக்கற... தோல்விக்கான கிரெடிட்டையாவது எனக்குக் கொடு”, “பெண்களோட அழுகை பாருக்கே தெரியுது. ஆண்களோட அழுகை Barக்கு மட்டும்தான் தெரியுது” என போதையில் இயலாமையின் உச்சத்தில் உதாசீனப்படுத்தப்பட்ட ஒரு மனிதராக அசத்துகிறார் துல்கர்.

சாவித்திரிக்கும் ஜெமினிக்குமான வாழ்க்கையை `உனக்கு வெட்கம் இல்ல... எனக்கு புத்தி இல்ல’ என ஒற்றை வரியில்  பளிச்சென படம் பிடித்துக் காட்டுகிறார் வசனகர்த்தா மதன் கார்க்கி. ‘மழையே’ பாடலில் படலாசிரியராகவும் மிளிர்கிறார். டானி சா லோவின் ஒளிப்பதிவு அருமையாக அமைந்துள்ளது.

ஜெமினி - சாவித்திரி காதல் காட்சிகள், மெட்ராஸ் சென்ட்ரலின் முகப்பு,  சாலையில் நகரும் கார்கள், விஜயா வாஹினி ஸ்டுடியோஸ், சந்திரலேகா போஸ்டர், டிராம், பழைய கால கேமரா, மைக், மாயாபஜார் காட்சியின் மறுஉருவாக்கம் என ஆர்ட்  பிரிவு அக்கறையோடு உழைத்திருக்கிறது.   

சினிமாவைத் தெரிந்த எல்லோருக்கும் சாவித்திரியின் கதை தெரியும். மூன்று மணி நேரம் உட்காரவைத்து அதே கதையைக் கேட்க வைப்பதற்கு  அசாத்திய திறமை வேண்டும். அதை நம்பிக்கையோடு ஓவர் மேல்பூச்சு இல்லாமல்  நிரூபித்திருக்கிறார் இயக்குநர் நாக் அஸ்வின்.