இரும்புத்திரை



டிஜிட்டல் உலகத்து விபரீதம்!

நேர்மையான, சமூக அக்கறையுள்ள ராணுவ அதிகாரிக்கு வரும் சோதனைகளும் அவற்றை அவர் எதிர்கொள்வதும்தான் கதை. கிடைத்த இடத்திலெல்லாம் கடன் வாங்கி, அவமானப்படும் அப்பா டெல்லி கணேஷ், கடன் பட்ட அவமானத்தால் மரணத்தை ஏற்றுக்கொள்ளும் அம்மா, கல்யாணம் ஆவதில்  பிரச்னைகளை சந்திக்கும் தங்கை  என தன்னைச் சுற்றிய குடும்ப வட்டத்துடன் சமுதாயத்துக்கான தொண்டிலும் இறங்கவேண்டிய வேலை விஷாலுக்கு. அதை நேர்த்தியுடன் செய்து நெஞ்சை நிமிர்த்தி நடக்கிறார். ‘கடன்பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்கிற கம்பனின் வார்த்தைகளை வாழ்க்கையாக வாழ்ந்து காண்பித்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் சமந்தாவின் நடிப்பு அருமை. ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பால் ரசிகர்களைக் கவர்கிறார். மனநல மருத்துவர், விஷால் மீது அக்கறைகொண்ட காதலி என தனது பங்களிப்பை பக்குவமாக செய்திருக்கிறார்.

வில்லனாக நடித்திருக்கும் அர்ஜுனின் நடிப்பு அசர  வைக்கிறது. மாடர்ன் வில்லனாக  அமைதியாக நடித்து ஆர்ப்பாட்டம் செய்கிறார். அனைவரையும் ரசிக்க வைக்கிறார். விஷாலின் அப்பாவாக வரும் டெல்லி கணேஷ், வெகுளித்தனமாக நடித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மனதில் நிற்கும் கதாபாத்திரம் அவருக்குக் கிடைத்திருக்கிறது. ரோபோ சங்கர் கொஞ்சூண்டு கலகலப்புக்கு உதவுகிறார். ஆனால், சீரியஸான இந்தப் படத்திலும் அவரது இரட்டை வசனங்கள் குடும்பத்தோடு படம் பார்ப்பவர்களை முகம் சுழிக்க வைக்கின்றன.

டிஜிட்டல் இந்தியாவில் ஏற்படும் விளைவுகளை அழகாகப் பதிவு செய்திருக்கும் இயக்குநர் மித்ரன், நம்முடைய  தகவல்களை இன்டர்நெட்டில் பதிவு செய்து வைத்தால், என்னென்ன விளைவுகள் வரும் என்பதை அக்கறையோடு பாடம் நடத்துகிறார். நமக்கு வில்லன், நம் கையில் வீற்றிருக்கும் கைப்பேசிதான் என்பதை உணரும்போது பகீரென்கிறது.

யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்களைவிட பின்னணி இசை சிறப்பாக இருக்கிறது.  ஜார்ஜ் சி வில்லியம்ஸின் ஒளிப்பதிவு படத்திற்கு  மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. நம் ஒவ்வொருவரின் பெர்சனல் தகவல்களும் ஸ்மார்ட்போன்கள் மூலம் டேட்டாவாக ஒயிட் டெவில், பிளாக் ஏஞ்சல் போன்ற டிஜிட்டல் திருடர்கள் கையில் சென்றுகொண்டிருக்கிறது. அவர்களிடமிருந்து ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது என டிஜிட்டல் உலகின் ஆபத்தை எந்த மிகைப்படுத்தலும் இல்லாமல் உண்மையாகப் பதிவு செய்திருக்கிறார் மித்ரன்.