இரவுக்கு ஆயிரம் கண்கள்



திருப்தியான திரில்லர்!

கனமழை பொழியும் ஓர் இரவில் நடக்கிறது ஒரு கொலை. அந்தக் கொலையில் சம்பந்தப்படாத ஒரு இளைஞன் போலீசில் சிக்குகிறான். பிரச்னையில் இருந்து மீண்டு வர, களத்தில் இறங்கி தேடுதல் வேட்டை நடத்துகிறான்.

ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் சம்பந்தப்பட்ட கொலைக்களத்தில் இருந்ததற்கான ஆதாரங்கள் சிக்குகின்றன. யார் கொலையாளி என்பதை ஹீரோ எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதை விறுவிறு திரைக்கதையில் திரில்லிங்காக கொடுத்திருக்கிறார் இயக்குநர் மு.மாறன்.

சாம்.சி.எஸ் இசையில் தேவையான இடங்களில் வரும் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசையில் கூடுதல் அக்கறை செலுத்தி கவனம் ஈர்க்கிறார். அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவில் இரவுக்காட்சிகள்  வெளிச்சம் போட்டுக்  காட்டப்படுகின்றன.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் அருள்நிதிக்கு அவரது உடற்கட்டும் முரட்டுப்பார்வையும் வெகுவாக உதவுகின்றன. காதல், ஆக்ரோஷம் என கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மஹிமா நம்பியாருடன் காதல் காட்சிகளில் அருள்நிதி யதார்த்தமாக, அழகாக நடித்திருக்கிறார். மஹிமா நம்பியார் அழகான நடமாட்டத்தில் இயல்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். அஜ்மல் இரண்டாவது ஹீரோ லெவலுக்கு இறங்கி அடித்திருக்கிறார். சிரித்த முகத்துடன் அவர் செய்யும் வில்லத்தனத்தை ரசிக்கலாம்.

சைக்கோ கதாபாத்திரத்துக்கு பொருத்தமானவர் ஜான் விஜய்தான் என்று முடிவுசெய்துவிட்டார்கள். சபலபுத்தி கொண்ட பணக்கார கதாபாத்திரத்தில் ஆனந்த்ராஜ் செய்யும் காமெடியும் ரசிக்கும் ரகம். ஆடுகளம் நரேன் கதாபாத்திரமும் கவனம் ஈர்க்கிறது. இந்தப்பூனையும் பால் குடிக்குமா ரீதியில் சாயாசிங் அதிரடி ஆட்டத்தில் இறங்குகிறார். சுஜாவாருணி, வித்யா பிரதீப், சாயா சிங்,  ஆடுகளம் முருகதாஸ், அச்யுதா குமார் என அத்தனை பேரும் தங்களது பொறுப்புணர்ந்து அபிநயம் செய்திருக்கிறார்கள்.

வசந்த், கணேஷ், பரத் என படத்தில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்களில்கூட க்ரைம் நாவல்களின் நினைவூட்டலைத் தருகிறார் இயக்குநர். ஆசையே  அழிவுக்கு  அடிப்படை என்பதை ஆங்காங்கே புத்தர் சிலைகளோடு தொடர்புபடுத்திக் குறியீடாய்க் காட்டியிருப்பது இயக்குநரின் டச்.  ஒரு திரில்லிங் கதையில் சமூக அக்கறையைக் கலந்து சொல்லியிருக்கும் இயக்குநர் மாறன் பாராட்டுக்குரியவர்.