எப்பவோ ஒருமுறை இதெல்லாம் அமையும்!‘ஜெமினி’ துல்கர் ஹேப்பி



“ஜெமினி சாரா நடிக்க நான் மெனக்கெடவே இல்லை. அவரை அப்படியே அச்சு அசலா ஃபாலோ பண்ணியிருந்தா இமிடேட் பண்ணமாதிரி தெரிஞ்சுடும். எனவேதான், டைரக்டர் சொன்னதை உள்வாங்கிட்டு அந்தக் கேரக்டருக்கு என்ன தேவையோ அதை மட்டும்தான் கொடுத்தேன்” - சுற்றி கேமரா க்ளிக்குகள், கைகுலுக்கல்கள், பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கும் துல்கரை சந்தித்து ‘ஹாய்’ சொன்னோம்.

“என்னோட அப்பாவே மனசு விட்டு பாராட்டுற மாதிரி நடிச்சிருக்கேன்; அதுதான் ரொம்ப சந்தோஷம்” என்று பேச ஆரம்பித்தார்.“கொஞ்சம் நெகட்டிவ் ஷேடு இருக்கிற ரோல். எப்படி தைரியமா ஏத்துக்கிட்டீங்க?”

“சாவித்திரி மேடமுடைய கதை சொல்லும் படம், அவங்களுடைய முழுமையான வாழ்க்கையைச் சொல்லுகிற படம். ஜெமினிகணேசனா நான். இது ஒண்ணே போதாதா? படத்துக்கு ஓக்கே சொல்ல... கலர்ஃபுல், ஸ்டைலிஷ், அதே சமயம் கொஞ்சம் கிரே ஷேட் கேரக்டர். ஒரு நடிகனா யோசிக்கும்போது எனக்கான முக்கியத்துவம் அதிகமாவே இருந்துச்சு. இதுமாதிரி கேரக்டர் லைஃப்லே எப்பவோ ஒருமுறைதான் அமையும். மத்த விஷயங்களை யோசிச்சி இந்த மாதிரி அருமையான வாய்ப்பை இழந்துடக் கூடாது.”

“ரொம்ப கஷ்டப்பட்டு நடிச்சதா சொல்லியிருக்கீங்க. என்னென்ன மாதிரியான சிக்கல்கள்?”

“பேசிக்கா இது தெலுங்குப்படம். தமிழில்கூட டப்பிங்தான். தமிழ்னா நம்ம மொழி. சமாளிச்சிடுவேன். எனக்கு தெலுங்கு தெரியாது என்பதுதான் படப்பிடிப்பில் நான் எதிர்கொண்ட மிகப்பெரிய சிக்கல். அப்புறம், ஜெமினியா நடிக்கிறப்போ அவரை இமிடேட் பண்றமாதிரி இருந்தா தனிப்பட்ட துல்கருக்கு என்ன சவால்?

எனவே அந்தக் காலத்து ஒரு ஹீரோ எப்படி இருந்திருப்பார், அவரோட பாடி லேங்குவேஜ் எப்படி இருந்திருக்கும்னு நிறைய யோசிச்சி, ஏகத்துக்கும் ரெஃபரென்ஸ் எடுத்து ஹோம் வொர்க் பண்ணி நடிச்சேன். படப்பிடிப்பு நடந்த நாட்களில் தவம் மாதிரி ஷாட்டுக்கு ஷாட் என்னை மோல்ட் பண்ணிக்கிட்டே இருந்தேன்.

ஜெமினி சார் ஃபேமிலி நிறைய ஹெல்ப் பண்ணாங்க. என்னோட முகத்தோற்றத்தைப் பார்த்தீங்கன்னா, ஜெமினி சாரோட சாயல் கொஞ்சம் கூட இருக்காது. தோற்றம் உதவாதுன்னு தெரிஞ்சபிறகு, அவரோட துறதுறு இயல்பை உள்வாங்கி அந்த மைனஸ் பாயிண்டை பிளஸ் பாயிண்ட்டாக ஆக்கினேன். ஆன் ஸ்க்ரீன்லே அவர் எப்படி தெரிஞ்சாரோ அதுக்கு முக்கியத்துவம் கொடுக்கலை. பர்சனலா ஜெமினி சாரோட நடை, உடை, பாவனைகளை விசாரிச்சி அதை என் நடிப்புலே கொண்டு வந்தேன்.”

“சாவித்திரியா நடிச்ச கீர்த்தி சுரேஷ்?”

“கீர்த்தி எனக்கு நல்ல ஃப்ரெண்ட். இந்தச் சின்னப் பொண்ணுக்கு இவ்வளவு திறமையான்னு ஷூட்டிங்கிலேயே ஆச்சரியப்பட்டேன். சீன் பை சீன் நம்ம கீர்த்தி அப்படியே சாவித்திரி அம்மாவை கண் முன்னாலே கொண்டு வந்தாங்க. அப்போ நாங்க பட்ட ஆச்சரியத்தை அப்படியே ரசிகர்களும் இப்போ படறாங்க. இந்தப் பொண்ணு ஃபியூச்சர்லே எங்கேயோ போகப்போவுது.”

“நீங்க மலையாளத்தில் முன்னணி ஹீரோ. ஆனா, தமிழுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கறீங்க?”

“படிச்சது, வளர்ந்ததெல்லாம் தமிழ்நாட்டுலேதானே? எனக்கும் சரி, என் அப்பாவுக்கும் சரி, தமிழ் மேலே அவ்வளவு மரியாதை, மயக்கம். தமிழ் சினிமா எப்பவுமே எங்களுக்கு ரொம்பவே நெருக்கமாதான் இருக்கு. அப்பா மலையாளத்தில் அவ்வளவு பிஸியா நடிச்சிக்கிட்டு இருந்தப்போகூட தமிழில் ஒரு கேரக்டர்னா, கால்ஷீட்டையெல்லாம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு வந்துடுவாரு. நானும் அப்பாவை ஃபாலோ பண்றேன்.”

“நெக்ஸ்ட்?”

“தமிழில் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’னு யூத்ஃபுல் டைட்டிலில் நடிக்கிறேன். மலையாளத்தில் பெரிய பிராஜக்டுகள் போகுது. இப்போ பாலிவுட்டிலும் என்ட்ரி ஆகியிருக்கேன். ஆகாஷ் குரானா இயக்கத்துலே ‘கர்வான்’. பக்கா காமெடிப் படமான இதில் இன்டர்நேஷனல் லெவலில் புகழ்பெற்ற நடிகரான இர்ஃபான் கானோடு சேர்ந்து நடிக்கிறேன். துறுதுறுப்பான பெங்களூர் தமிழ்ப்பையன் கேரக்டர்.”
“ஒரே வீட்டுலே ரெண்டு மாஸ் ஹீரோ...”

“அப்பாவை மாஸ் ஹீரோன்னு சொல்லுங்க. ஒப்புக்கறேன். நான் ஒரு படத்துலேயாவது மாஸ் காட்டியிருக்கேனா? வீட்டுலே நாங்க அப்பா, பையன்தான். சினிமாவைப் பொறுத்தவரைக்கும் வளர்ந்து வரும் நடிகனான எனக்கு டஃப் பைட் கொடுத்துக்கிட்டு இருக்காரு மெகாஸ்டார். சினிமாவுலகைப் பொறுத்தவரை நாங்க நண்பர்கள்தான். கேரியரைப் பொறுத்தவரை ஒருத்தரோட ஸ்பேஸ்லே இன்னொருத்தர் தலையிடறது கிடையாது.”

“கேரக்டர்களை எந்த அடிப்படையில் தேர்வு செய்யுறீங்க?”

“கதையைக் கேட்குறப்பவே இந்தக் கேரக்டர், என்னோட கேரியருக்குத் தேவையான்னு யோசிப்பேன். ஏற்கனவே நான் கேரக்டர் செலக்‌ஷனில் ரொம்ப கவனம்தான். இனிமே ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கப் போறேன். ஹீரோவா, வில்லனா, காமெடியனாங்கிறதெல்லாம் முக்கியம் கிடையாது. எனக்கு நடிக்க சவாலா இருக்கணும். அதில் நான் நடிச்சப்புறம் நாலு பேர், இவன் வேறன்னு சொல்லணும். அப்படித்தான் யோசிச்சி நடிச்சிக்கிட்டிருக்கேன். சும்மா பட எண்ணிக்கையில் ஒண்ணு, ரெண்டு கூட்டுறதுக்காக ஒப்புக்கறது கிடையாது.”

“தமிழ், தெலுங்கில் எல்லாம் ஹீரோக்கள் அரசியலுக்கு போயிடறாங்க. மலையாளத்துலே...”“அங்கேயும் நடிகர்களுக்கு அரசியல் ஈடுபாடு உண்டு. ஆனா, எடுத்தவுடனேயே ‘அடுத்த முதல்வர்’னு கோதாவில் இறங்க முடியாது. சினிமாவையும், அரசியலையும் மலையாள ரசிகர்கள் தனித்தனியா பார்க்குறாங்க. ஒரு நடிகன்னு சொல்லிட்டுப் போயி ஓட்டு கேட்டாலும், வாக்காளர்கள் அதுக்குன்னு தனியா சலுகை தர்றதில்லை.”

“தமிழ் - மலையாளம்னு இரட்டை மாட்டு வண்டி ஓட்டுறீங்க. என்ன வித்தியாசம் பார்க்கறீங்க?”

“வித்தியாசம்னு சொல்ல முடியாது. தமிழில் இப்போ படங்கள் ரிலீஸ் ஆகுற முறை மீது எனக்கு அதிருப்தி இருக்கு. இந்தச் சிக்கல்கள் தீரணும். மலையாளத்துலே இன்னும் நிறைய வித்தியாசமான கதைகளை முயற்சிக்கலாம். அதுக்கான ஸ்பேஸ் அங்கே எப்பவுமே இருக்கு.”

“உங்க பொண்ணு?”

“என்னோட மொத்த உலகமும் அவங்கதான். மர்யம் அமீரா. ஒரு வயசுதான் ஆகுது. படப்பிடிப்புலே சின்ன கேப் கிடைச்சாகூட மர்யமை பார்க்க ஓடோடி வந்துடுவேன்.”

- ஷாலினி நியூட்டன்