மெர்க்குரி



சப்தமாய் ஒரு மெசேஜ்!

சூப்பர்ஸ்டாரையே அடுத்து இயக்கவிருக்கும் இயக்குநரின் படம் என்பதால் ஏகத்துக்கும் எதிர்பார்ப்புகளைக் கிளப்பியிருந்தது ‘மெர்க்குரி’. அதுவுமில்லாமல் கமல்ஹாசனின் ‘பேசும் படம்’ வெளிவந்து 31 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவரும் மவுனப்படம் இது. ஏற்கனவே ‘பீட்சா’ மூலமாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ரசிகர்களுக்கு திரையரங்கில் பீதியைக் கிளப்பியவர் என்பதால், பேய்ப்படமான ‘மெர்க்குரி’யையும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். எதிர்பார்ப்புகளை ‘மெர்க்குரி’ எப்படி எதிர்கொண்டது என்று பார்ப்போம்.

காது கேளாத, வாய் பேச முடியாத நான்கு நண்பர்கள் ஒரு மலைப்பாதையில் கொண்டாட்டமாக செல்கிறார்கள். இவர்களால் எதிர்பாராவிதமாக நடைபெறும் விபத்து ஒன்றில் பிரபுதேவா மரணமடைகிறார். அருகிலிருக்கும் காட்டில் உடலை எரித்து விடுகிறார்கள். தாங்கள் செய்த குற்றம் யாருக்கும் தெரியாது என்று நினைக்கும் நிலையில், இறந்துபோன பிரபுதேவாவே மீண்டும் வந்து இவர்களை பயமுறுத்துகிறார். பிரபுதேவா யார், ஐந்து பேரின் நிலைமை என்ன ஆனது என்பதே மீதிக்கதை.

வில்லத்தனமான பாத்திரமாக இருந்தாலும் பிரபுதேவா தன்னுடைய அனுபவ நடிப்பால் இந்த மவுனப்படத்தை தன் தலையில் தூக்கி சுமக்கிறார். படத்தில் வசனம்தான் இல்லையே தவிர்த்து மற்ற சப்தங்கள் எல்லாம் வழக்கத்தைவிட கூடுதலாகவே கேட்கின்றன. படத்தின் இரண்டாம் பாதி முழுக்கவே ரசிகர்களை சீட்டு நுனிக்கு வரவைக்கும் சிறப்பான சேஸிங் காட்சிகள். இறுதிக் காட்சியில் சுற்றுச்சூழல் குறித்த முக்கியமான செய்தியோடு படம் முடிவடைகிறது.

ஹாலிவுட் படங்களைப் பார்த்து, அதுபோன்ற கதையம் சமும், தொழில்நுட்ப நேர்த்தியும் கொண்ட படங்கள் நம்மூரில் தயாராகவில்லை என்று ஆதங்கப்படும் ரசிகர்களுக்காகவே ‘மெர்க்குரி’ வந்திருக்கிறது. மிகக்குறைவான கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு, அவர்களுக்கும் வசனம் ஏதுமின்றி சொல்ல வந்த கதையை மிகத்தெளிவாகவே சொல்லியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். சந்தோஷ் நாராயணின் இசையும், திருவின் கேமராவும் இயக்குநருக்கு பக்கபலம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஹாலிவுட்டில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற ‘Don’t breathe’ படத்தின் சாயல் தென்பட்டாலும், தமிழ் மண்ணின் சமகால சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினையை தைரியமாகப் பேசியிருக்கும் மவுனப்படமான ‘மெர்க்குரி’க்கு ஓங்கி ஒலித்து ‘ஓ’ போடலாம்.