தடையை மீறினோமா?



தமிழ் சினிமா உலகமே வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் நிலையில் கடந்த வாரம் திடீரென நூறுக்கும் மேற்பட்ட அரங்குகளில் ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ படத்தை ரிலீஸ் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்கள். ‘ஊரோடு ஒத்து வாழாமல் நீங்கள் மட்டும் தனி ரூட்டில் போகிறீர்களே?’ என்கிற கேள்வியோடு படத்தின் ஹீரோ ரிஜன் சுரேஷ் முன்பாக நின்றோம்.

“நல்ல வேளை சார், நீங்களாவது எங்ககிட்டே பேசி எங்க விளக்கத்தை வெளியிட முன்வந்திருக்கீங்களே? அதுக்கு பெரிய நன்றி” என்று ஆரம்பித்தார்.
“ஒரு படத்தை எடுத்து வெளியிடறது என்பது நூறு கல்யாணத்தை செஞ்சு பார்க்கிறதுக்கு இணையான செயல் சார். படத்தை எடுத்துட்டு வெளியிட முடியாம இருக்கிற தயாரிப்பாளர்களோட ரத்தக் கண்ணீர் யாருக்குமே தெரியாது.

எங்களோட படத்தை நாங்க இப்போ புதுசா ரிலீஸ் செய்யலை. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே ரிலீஸ் பண்ணிட்டோம்.
ஏகப்பட்ட சிரமங்களுக்கு மத்தியிலே ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ படத்தை எங்க டைரக்டர் நாகராஜும், தயாரிப்பாளர் ரபேல் சல்தானாவும் சிறப்பாக ரெடி பண்ணாங்க.

பத்திரிகையாளர் காட்சியிலே படத்தைப் பார்த்தவங்க எல்லாருமே நல்ல பொழுதுபோக்கான நகைச்சுவைப் படம், நல்லா ஓடும்னு சொன்னாங்க.
கடந்த 2016, டிசம்பர் 2ஆம் தேதி படம் ரிலீஸ் ஆச்சு. நல்ல பாசிட்டிவ் டாக் ரசிகர்களிடமிருந்து கிடைச்சுது. படம் பிக்கப் ஆகிக் கொண்டிருக்கும்போது திடீர்னு 5-ஆம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமாகிட்டாங்க.

அந்த துக்கத்துலே யாரும் தியேட்டர் பக்கமே வரலை. அதுக்கு அடுத்தடுத்த வாரங்களில் வேற வேற படங்களை தியேட்டர்கள் புக் செய்திருந்ததால், எங்க படம் ரிலீஸ் ஆகியும் யாருக்கும் பிரயோசனமில்லாம போயிடிச்சி. நல்ல படம்னு ரசிகர்கள் ஏத்துக்கிட்டும் வெறும் மூணு நாள்தான் தியேட்டர்களில் ஓட்டினோம்.

சரி. மறுபடியும் ரிலீஸ் பண்ணலாம்னு நெனைச்சா ஜல்லிக்கட்டு போராட்டம், பெரிய படங்களோட அடுத்தடுத்த ரிலீஸ்னு எங்களுக்கு தேதியே அமையாம போயிடிச்சி. இந்தப் படத்தோட வெற்றிதான் எங்க குழுவுக்கு பெரிய எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்னு நம்பிக்கிட்டிருந்தவங்க மனசு வெதும்பிப் போயிட்டோம்.

இப்போ புதிய படங்களை ரிலீஸ் செய்வதில்லை என்று தயாரிப்பாளர் சங்கம் போராடிக்கிட்டிருக்கு. அந்த நியாயமான போராட்டம் வெற்றி அடையணும்னு வேண்டிக்கிறோம்.அதே நேரத்தில் எங்களோட படம் ஏற்கனவே வெளியானதுதான் என்பதால், அதை மீண்டும் ரிலீஸ் செய்வது நிச்சயமாகப் போராட்டத்துக்கு எதிரான விஷயமல்ல.

காலச்சூழலால் வஞ்சிக்கப்பட்ட ஒரு படம், மீண்டும் வெளியாகி தயாரிப்பாளருக்கு ஒரு நிவாரணம் ஏற்படுத்தும்னு நம்பித்தான் வெளியிட்டிருக்கோம். அதுக்கேற்ப தியேட்டர்களில் நல்ல கூட்டம் கூடுது. கோடை விடுமுறை ஆரம்பிச்சிருக்கிறதாலே மக்கள் குடும்பம் குடும்பமா வந்து ரசிக்கிறாங்க” என்று முடித்துக் கொண்டார் படத்தின் நாயகன் ரிஜன் சுரேஷ்.

இந்தப் படத்தில் ஆர்ஷிதா, பட்டிமன்றம் ராஜா, போராளி திலீபன், வளவன், தாட்சாயணி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். வடசென்னை பின்னணியில் அமைந்திருக்கும் இப்படத்துக்கு ரஜின் மகாதேவ் இசையமைத்திருக்கிறார். ஜே.கே.கல்யாண்ராம் ஒளிப்பதிவு. கோபிகிருஷ்ணா படத்தொகுப்பு பணியைச் செய்திருக்கிறார்.

- யுவா