சின்ன பட்ஜெட்டில் பெரிய முயற்சி!



இரண்டு மணிநேரம் ஓடுகின்ற ‘தொரட்டி’ படத்தை பிரத்யேகமாக நமக்கு காண்பித்தார் அதன்  இயக்குநர் மாரிமுத்து. சின்ன பட்ஜெட் படத்துக்கு பெரிய படத்துக்கான உழைப்பைப் போட்டு இருக்கிறார்கள். அதுவும் மாதக்கணக்கில் அல்ல, வருடக்கணக்கில். படத்தைப்பார்த்துவிட்டு படக்குழுவினரிடம்  பேசினோம்.

‘‘பெரிய படங்களில் சில விஷயங்கள் ஏனோதானோ என இருந்தாலும் அவர்களுக்கு பிரியமான நட்சத்திரங்கள் திரையில் இருப்பதால் ரசிகர்கள் பெரிதாக எதுவும் கண்டுகொள்ளமாட்டார்கள்.

அவர்களது ரசனைக்கான வேறு பல விஷயங்கள் படத்தில் நிறைய இருக்கும். ஆனால் புதுமுகங்கள் நடிக்கின்ற படங்களுக்கு நாம் அந்த மாதிரி பண்ணமுடியாது.ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்து கொஞ்சம் கவனமாகவும், நிறைய ரசனையாகவும்  பண்ணவேண்டியது இருக்கிறது’’ என்கிறார் தயாரிப்பாளரும் நாயகனுமான ஷமன்மித்ரூ.

“இவ்வளவு அழகான கிராமத்தை எங்கு போய் கண்டுபிடித்தீர்கள்?” என ஒளிப்பதிவாளரிடம் கேட்டோம்.‘‘வசனம் எழுத ஆரம்பிக்கும் நிலையிலேயே லொகேஷன் தேடி கிராமம் கிராமமாக அலைய ஆரம்பித்தோம்.

இப்படி தேடித் தேடி அலைந்ததில் ஓரிடம் சரியாக அமைந்தால், இன்னோர் இடம் சரியாக அமையாது. எல்லாம் அமைந்த ஓரிடம் எங்குமே கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் எல்லாருமே சோர்ந்துபோயிட்டோம்னுதான் சொல்லணும். இருந்தாலும் எந்த சமரசமும் செஞ்சுக்காம அலைஞ்சு திரிஞ்சதுல புதுக்கோட்டை, தேனி, சிவகங்கை, திண்டுக்கல், ராமநாதபுரம்னு ஐந்து மாவட்டங்களில் கதைக்கான லொகேஷன் கிடைத்தது.

படப்பிடிப்புக்கான இடங்கள் முடிவானதும் அந்த இடங்களில் தங்கி படப்பிடிப்பு இடங்களோட சூழ்நிலை, பருவநிலைன்னு படப்பிடிப்புக்கு தேவையான பல விஷயங்களை உள்வாங்கி வந்து படப்பிடிப்புக்கு போனோம். நாங்கள் செலக்ட் பண்ணின லொகேஷன்ஸ் சுலபமா போய் நடத்தற மாதிரியான இடங்கள் இல்ல. வண்டிகள் போறது சிரமம். அப்படியும் முடிஞ்ச வரைக்கும் வண்டியை  ஓட்டிட்டுபோய் நிறுத்துன பின்னால குறைந்தது ஒரு கிலோமீட்டர் தூரமாவது நடந்துபோனாதான் படப்பிடிப்பு நடத்தற இடமே வரும்.

நாங்க படப்பிடிப்பு நடத்துன ஐம்பது நாளும் இதே கதைதான். போதாக்குறைக்கு படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருந்த இடங்களில் ஒண்ணு புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள பிரான்மலை. இந்த மலையில் மொத்தம் ஐந்து நிலைகள் இருக்கின்றது. 

இரண்டாம் நிலைவரை வந்து பார்த்துவிட்டு இதில் படப்பிடிப்பு நடத்துவது சிரமம் என ‘நான்கடவுள்’ படத்துக்காக பாலா சாரே வேண்டாம் என்று சொல்லிவிட்டார் என இங்கு உள்ளவர்கள் கூறினார்கள். ஆனால் நாங்கள் அதற்குப் பிறகும் மூன்று நிலைகளைக் கடந்து அதன் உச்சிக்கே சென்று படப்பிடிப்பு நடத்தியிருக்கின்றோம் என்றால் படம் பார்க்கும்போது நீங்களே எங்கள் உழைப்பை புரிந்துகொள்வீர்கள்’’  என்கிறார் ஒளிப்பதிவாளர் குமார் ஸ்ரீதர்.

கடைசியாக இயக்குநர் மாரிமுத்துவிடம் பேசினோம்...“இது ‘பருத்திவீரன்’, ‘சுப்ரமணியபுரம்’, ‘வாகை சூடவா’ மாதிரி யதார்த்தமான படம். 80களில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட படம் இது. விவசாய நிலத்தில் கிடை போட்டு வெள்ளந்தியாக வாழும் ஒரு குரூப்புக்கும், சுட்டகறி, வெந்தசோறு, பட்ட சாராயம் என்று வாழும் ஒரு குரூப்புக்கும் இடையே நடக்கும் போராட்டத்தை வாழ்வியலோடு சொல்லியிருக்கிறேன்.

நாயகன் ஷமன் மித்ரூ மிகச் சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறார். பிலிம் இன்ஸ்டிடியூட் கோல்ட் மெடலிஸ்ட். கே.வி.ஆனந்த் சாரின் சீடரான அவர் ஏராளமான தென்னிந்திய மொழி படங்களில் கேமராமேனாக வேலை செய்துள்ளார். கதை பிடித்திருந்ததால் அவரே தயாரிக்க முன்வந்தார். நாயகி சத்யகலாவின் கேரக்டர் எல்லோராலும் பேசப்படும்விதமாக இருக்கும். படத்தின் உச்சகட்ட காட்சியில் நடித்தபோது வெளியே சொல்லமுடியாத பல இன்னல்களுக்கு ஆளானார். உயிரையே பணயம் வைத்து நடித்துக் கொடுத்தார் என்று சொன்னால் அது உண்மையிலேயே அவரது கடும் உழைப்பை குறைத்து மதிப்பிட்டதாகவேதான் தோன்றும்.

படப்பிடிப்பில் நடிப்பவர்கள் யாவரும் காலில் செருப்பு அணியாமல் நடித்துள்ளார்கள். உடைகள் விஷயத்திலும் அப்படித்தான். கண்ணுக்கு கவர்ச்சியாக, விலையுயர்ந்த உடைகள் என்று எதுவுமே யாருக்குமே இல்லை. கல்யாணக்காட்சி ஒன்றில்தான் நாயகிக்கு பட்டுச்சேலை மாதிரி ஒரு சேலையைக் கொடுத்தோம்.

மற்றபடி கதாபாத்திரங்கள் அணிந்திருந்த உடைகள் எல்லாம் முடிந்தவரை ஓரளவுக்கு நல்ல பழையவேட்டி, சட்டை, கண்டாங்கி சேலை போன்ற பழைய உடைகளை எல்லாம் சொந்த பந்தங்களிடம் சேகரித்துவைத்தோம். அதேமாதிரி படத்தில் வரும் பொருட்கள் எல்லாமே 80களில் கிராமத்து வீடுகளில் பயன்படுத்தியவைகளாக இருக்கும். அந்தப் பொருட்கள் பல கிராமங்களுக்கு சென்று பல வீடுகளில் சேகரித்தவை ஆகும்.

வேத் சங்கர் இசையமைத்திருக்கிறார். படத்தில் ஆறு பாடல்கள் இருக்கிறது. இசை என்றாலே இப்போது எல்லாம் கம்ப்யூட்டர் மயமாகிவிட்ட நேரத்தில் நாங்கள் வாத்தியக் கருவிகளை வாசிப்பவர்களை நேரில் வரவழைத்து வாசித்து பாடலை பதிவு செய்தோம். 

குறிப்பாக இப்போது பாடல் பதிவில் புழக்கத்தில் இல்லாமல் போன சந்தூர் இசைக் கருவியையும், அவ்து என்கிற அரேபிய கிராமத்து இசைக் கருவியையும் பயன்படுத்தினோம். பின்னணி இசையில் ஜித்தின் ரோஷன் பிரமாதமான இசையைக் கொடுத்திருக்கிறார். உவமை கூறும் வார்த்தைகள் கூட எளிமையாகவும், புதுசாகவும் இருக்கும்படி சினேகன் எழுதிக் கொடுத்துள்ளார்.

இந்த மாதிரி பெரிய பட்ஜெட் படங்களுக்குத்தான் நிறைய மெனக்கெடுவார்கள். ஆனால் இந்த மாதிரி புதுமுகங்கள் நடிக்கும் படத்துக்கு இந்த மாதிரி சிரமங்களும், சிரத்தையும் எடுத்திருக்கிறோம் என்பதை சொல்லும் போது உணர்வார்களா என தெரியாது. ஆனால் படம் பார்த்த பின் நிச்சயம் இது உண்மைதான் என உணர்வார்கள்” என்கிறார் இயக்குநர் மாரிமுத்து.

- சுரேஷ்ராஜா