தமிழுக்கு பெருமை சேர்த்த டூ லெட்!



மத்திய அரசு அறிவித்துள்ள 65-வது தேசிய விருது பட்டியல் தமிழ் திரையுலகுக்கும் ரசிகர்களுக்கும் கொண்டாட்டமாக அமைந்துள்ளது. இந்திய அளவில்  சிறந்த  படத்துக்கான விருதை  ‘டூ-லெட்’ பெற்றுள்ளது. ‘பரதேசி’, ‘தாரை தப்பட்டை’, ‘ஜோக்கர்’ படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்த செழியன் இயக்கியிருக்கும் முதல் படம் இது.

“ஏற்கெனவே நிறைய ஃபிலிம் பெஸ்டிவல்களில் இந்தப் படம் விருது வாங்கியிருக்கு. சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த சவுண்ட் என நிறைய  விருதுகள்.... இந்தியாவில் தேசிய விருது வாங்கியிருப்பது கூடுதல் சந்தோஷம்.  இந்தப் படத்தை தேசிய விருதுக்காக அனுப்பியிருந்தேன். நம்ம படம் தரமானதா இருந்தா, விருதுக்கு முன்னிலை பெறும் என்கிற  நம்பிக்கை இருந்தது.

இந்தப் படத்துக்கான கருவை சாதாரண மக்களோட வாழ்க்கையில்  இருந்துதான் எடுத்தேன். என் வாழ்க்கை, என் நண்பர்களின் வாழ்க்கை என  எல்லாமே  இருக்கு. ‘உங்க வாழ்க்கைக்கு நீங்களே பெரிய சாட்சி’ங்கிற அழகான கருத்தை புத்தர் சொல்லியிருக்கார். நம்ம வாழ்க்கையிலே நாமளே பெரிய சூழ்நிலையில மாட்டிக்கிட்டு இருக்கும்போது, நாமளே அதுக்கு சாட்சியா இருப்போம்னு தோணுச்சு. அதனாலதான் வாழ்க்கையில நடந்த சம்பவங்களையே படமாக்கிட்டேன்.  

இந்தப் படத்தை 2016 டிசம்பர்ல எடுக்க ஆரம்பிச்சேன். டீமானிடைசேஷன் அறிவிப்பு வந்திருந்த நேரம் அது. அதனால ரொம்ப சிரமப்பட்டேன். படத்துல ஒரு சின்னப் பையன் நடிச்சிருக்கான். அவனை வைத்து  நாள் முழுக்க ஷூட் பண்றது  கஷ்டமா இருந்தது. ஏன்னா, அவன் ரொம்ப சோர்வு அடைஞ்சிருவான்.

சென்னையிலதான் படத்துக்கான ஷூட்டிங் நடந்தது. படத்துக்காக எந்த செட்டும் போடலை. எல்லாமே லைவ் லொகேஷன்ல எடுத்ததுதான். முப்பது நாளில் முழுப் படத்தையும் எடுத்து முடித்தோம்.  நடிச்ச யாரும் மேக்கப் போடலை. இந்தப் படத்தை தயாரிக்கச் சொல்லி  சில தயாரிப்பாளர்களை அணுகினேன்.

எல்லோருமே சில பாடல் காட்சிகளை வைக்கச் சொன்னாங்க. ஹீரோயினா நடிக்க, பெரிய நடிகை யாரையாவது ஒப்பந்தம் பண்ணுங்கனு சொன்னாங்க. எனக்கு அதில் உடன்பாடில்லை. ஏன்னா, இது யதார்த்தமான படம். படத்துல பாடல் மட்டுமல்ல, இசையே கிடையாது.

இப்படி ஒரு முயற்சியை எடுக்க யாரும் முன்வராதபோதுதான் என் மனைவி பிரேமா  இந்தப் படத்தை நாமே தயாரிக்கலாம்னு சொன்னாங்க. அவங்க கொடுத்த ஊக்கத்தில் தயாரிக்க ஆரம்பிச்சேன். இந்தப் படம் நிறைய விருதுகள் வாங்கினது அவங்களுக்கும் சந்தோஷம். முக்கியமா, தேசிய விருது வாங்குனது ரொம்பவே சந்தோஷம்!’’  என்கிறார் இயக்குநர் செழியன்.

“நான் கவிஞர் விக்கிரமாதித்தனோட மகன். அப்பாவை வெச்சுத்தான் செழியன் சார்கிட்ட கேமரா உதவியாளரா வேலைக்குச் சேர்ந்தேன். மனைவி, குழந்தைகள் எல்லாரும் சிங்கப்பூர்ல செட்டில் ஆயிட்டாங்க. அம்மா, அப்பா சென்னையில இருக்காங்க. சென்னைக்கும் சிங்கப்பூருக்கும் அடிக்கடி பயணம் பண்ணவேண்டிய சூழ்நிலை’’ என்கிற அறிமுகத்தோடு துவங்குகிறார் கதை நாயகன் சந்தோஷ் நம்பிராஜன்.

“2007-ல்  மென்பொருள் துறை தாக்கத்தில்  சென்னையில ஏற்பட்ட மாற்றங்களை மையமாகக் கொண்டு படம் எடுக்கப்பட்டிருக்கு. அதாவது,ஐ.டி துறையினால்  சென்னையில ஏகப்பட்ட மாற்றங்கள்.... மக்கள் சென்னையைச் சுற்றியுள்ள இடங்களுக்குக் குடியேறினார்கள். பொருளாதாரக் காரணமாக சென்னைக்குள்அவங்களால குடியிருக்க முடியாத சூழ்நிலை உருவாச்சு.

வேலை சென்னைக்குள் இருக்கும், வீடு சென்னைக்கு வெளிப்புறத்துல இருக்கும். அந்தமாதிரி நானும், இந்தப் படத்துல என் மனைவியா நடித்த ஷீலா ராஜ்குமாரும் வீடு தேடிப் போவோம். எங்களுக்கு ஒரு மகனும் இருப்பான். இந்தச் சவாலை எப்படி சமாளிக்கிறோம், எங்களோட வாழ்க்கைத் தரம் என்ன என்பதுதான் கதை.

2003-ல இருந்தே செழியன் சாரை எனக்குத் தெரியும். கிட்டத்தட்ட 13 வருட நட்பு. 2005-ல நான் அவர்கிட்ட உதவியாளரா சேர்ந்தேன். ‘கல்லூரி’, ‘ரெட்டை சுழி’, ‘மகிழ்ச்சி’, ‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘பரதேசி’ ஆகிய படங்கள்ல சாரோட சேர்ந்து வேலை பார்த்திருக்கேன். இந்தப் படங்கள்ல வேலை பார்க்கும்போது, ஹீரோவோட காட்சிகளின் ஷாட் டெஸ்டுக்காக நான்தான் கேமரா முன்னாடி போய் நிற்பேன். அதுக்காகவே இந்தப் படத்துல என்னை ஹீரோவாக்கிட்டார்.

இந்தப் படத்தை முதல்ல ஆன்லைன்ல ரிலீஸ் பண்ற ஐடியாவுலதான் இருந்தோம். இப்போ ரெஸ்பான்ஸைப் பார்த்தபிறகு, ஸ்டிரைக் முடிந்ததும் தியேட்டர்ல ரிலீஸ் பண்ணலாம்னு முடிவுக்கு வந்துருக்கோம். என்னைப் பொறுத்தவரை, கதையும் கதை சொல்ற விதமும்தான் முக்கியம். ஹீரோ முக்கியமே இல்லை.

இந்தப் படத்துல வேலை பார்த்தவங்க எல்லாருமே புது ஆட்கள்தான். உலகளவுல அங்கீகரிக்கப்பட்ட முதல் தமிழ் சினிமா இது. எங்கள் படம் கொல்கத்தா இன்டர்நேஷனல் ஃபிலிம் பெஸ்டிவல், ஹ்யூமன் ரைட்ஸ் அவார்ட்ஸ், கொலம்பியா இன்டர்நேஷனல் காம்படீஷன், நியூயார்க் இந்தியன் ஃபிலிம் பெஸ்டிவல், இந்திய தேசிய விருது உட்பட இதுவரை 12 விருதுகள் வாங்கியிருக்கு’’ என்று பெருமை பொங்க சொல்லும் சந்தோஷ் நம்பிராஜன் ‘கத்துக்குட்டி, ‘கருப்பம்பட்டி’ படங்களின் ஒளிப்பதிவாளர்.

- நெல்பா