தில் வசனகர்த்தா - இயக்குநர் பரதன்டைட்டில்ஸ் டாக் 62

தெரிந்தும் தெரியாமல் நான் வேலை பார்த்த அனைத்து படங்களின் டைட்டிலிலும் தில்லான வார்த்தைகள் இடம்பிடித்திருக்கும். நான் வசனம் எழுதிய ‘தில்’, ‘தூள்’, ‘கில்லி’, ‘வீரம்’ போன்ற படங்களும் சரி, நான் இயக்கிய ‘பைரவா’ போன்ற படங்களும் சரி, ‘தில்’ ரகத்தைச் சேர்ந்தவை.

அவ்வகையில் நான் வசனம் எழுதிய ‘தில்’ படத்திலிருந்தே ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன். படம் துவங்கியபோது அந்தப் படத்துக்கு ‘காக்க காக்க கனகவேல்’, ‘கனகவேல்’, ‘வேலு’, ‘தில்’ என்று நான்கு டைட்டில்கள் பரிசீலனையில் இருந்தது. படப்பிடிப்பு துவங்கி இருபது முப்பது நாட்கள் கடந்துவிட்டன. ஆனாலும் டைட்டில் கன்பார்ம் ஆகாமல் இருந்தது.

‘‘என்னை இங்கேயே கொன்னுடு. வெளியே விட்டேன்னா, ஏண்டா வெளியே விட்டோம்னு வருத்தப்படுவே’’ என்று விக்ரம் டயலாக் பேசும் காட்சி உள்பட முக்கியமான காட்சிகள் எடுத்திருந்தோம். ஒரு நாள் தயாரிப்பாளர் பூர்ண சந்திரராவ் படப்பிடிப்பு லொகேஷனுக்கு வந்தார்.“பத்து நிமிடம் எனக்காக படப்பிடிப்பை நிறுத்த முடியுமா?” என்று இயக்குநரிடம் கேட்டு படப்பிடிப்பை நிறுத்தினார்.

“இப்போ நீங்க எடுக்கிற படத்துக்கு என்ன டைட்டில் என்று எனக்குத் தெரியவேண்டும். அப்போதுதான் மீடியாகாரர்கள், பிசினஸ்காரர்களுக்கு என்னால் பதில் சொல்ல முடியும்” என்று தயாரிப்பாளரே அவரது படத்துக்கு எதிராக ஸ்ட்ரைக் செய்தார்.

அப்போது படப்பிடிப்புத் தளத்தில் நூற்றைம்பது பேருக்கு மேல் இருந்தோம். தயாரிப்பாளரிடம் பரிசீலனையில் இருந்த டைட்டில்களை சொன்னோம். உடனே அவர், இந்த நான்கு டைட்டில்களில் எந்த டைட்டிலுக்கு அதிகமாக ஓட்டு விழுதோ அதுதான் படத்தின் பைனல் டைட்டில் என்று அறிவித்து, அங்கேயே ஒரு தேர்தலை நடத்தினார்.

அதிக ஓட்டுகள் வாங்கியது ‘தில்’.‘‘ஏன் அந்த டைட்டிலை தேர்ந்தெடுத்தீங்க?’’ என்று படப்பிடிப்புக் குழுவினரைப் பார்த்துக் கேட்டார்.
உடனே ஒரு லைட்மேன், ‘‘சார், இதுவரை எடுத்த காட்சிகளும் சரி, ஹீரோ பேசும் வசனங்களும் சரி செம தில்லாக இருந்தது. அதனால் இந்தப் படத்துக்கு ‘தில்’ என்ற டைட்டில் வைப்பது பொருத்தமாக இருக்கும்’’ என்றார்.

இந்த விளக்கம் தயாரிப்பாளருக்கு திருப்தி அளித்ததால் மகிழ்ச்சியாக ‘தில்’லை உறுதி செய்தார். இதுதான் ‘தில்’ என்ற டைட்டில் பிறந்த கதை.
இப்போது நான் பிறந்த ஊருக்குப் போவோம்.பொள்ளாச்சி. என்னுடைய அப்பா நேர்மை, கண்டிப்பு மிக்க ஆசிரியர். ‘‘தப்பு பண்றவங்கதான் பயப்படுவாங்க; தப்பு பண்ணாதபோது தில்லா கேள்வி கேட்கலாம்’’ என்று சொல்லித்தான் என்னை வளர்த்தார்.

ஒரு முறை எங்கள் ஊரில் இருக்கும் பெரிய கிணற்றில் நானும் நண்பர்களும் குளிக்கச் சென்றோம். அப்போது யார் அதிக உயரத்தில் இருந்து குதிப்பது என்று போட்டி. நான் போட்டியில் ஜெயிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பம்ப் செட் குழாய் மீது இருந்து குதித்தேன். பைப் மீது ஏறிக் குதிக்க தனி தில் வேண்டும். ஏன்னா, கொஞ்சம் மிஸ்ஸானாலும் உலகத்தைவிட்டு யெஸ் ஆக வேண்டியதுதான். நான் குதித்த வேகத்தில் பைப் உடைந்து பைப்போடு சேர்ந்து நானும் கிணற்றில் வீழ்ந்தேன்.  பிறகு சுதாரித்துக்கொண்டு மேலே வந்தேன். நடந்த சம்பவத்தை மறைக்க வீட்டுக்குப் போகாமல் அங்கிருந்து குறுக்கு வழியில் ஸ்கூலுக்குச் சென்றுவிட்டேன்.

பல மணி நேரம் கடந்தும் நான் வீட்டுக்குத் திரும்பாததால் வீட்டிலிருந்த என் பெற்றோர் என்னைத் தேடி கிணற்றுப் பகுதிக்கு வந்திருக்கிறார்கள். அப்போது பம்பு செட் பைப் உடைந்திருப்பது, கிணற்றருகில் நான் எடுத்துச் சென்ற சோப், டவல் அப்படியே இருந்ததைப் பார்த்துவிட்டு வீட்டில் உள்ளவர்கள் நான் தண்ணீரில் மூழ்கிவிட்டதாகக் கருதியிருக்கிறார்கள். பிறகு பள்ளிக்கூடத்துக்கு வந்து பார்த்தபோதுதான் நான் உயிரோடு இருக்கிற விஷயமே தெரிந்தது.

சாம்பிளுக்கு இந்த ஒரு சம்பவம்தான் உங்களிடம் பகிர்ந்து கொண்டேன். என்னுடைய பள்ளி நாட்களில் நான் பண்ணிய தில்லான காரியங்கள் நிறைய இருக்கு.எனக்குள் இருக்கும் தில்லுக்கு காரணம் அப்பாதான். எனக்கு மட்டுமல்ல, எல்லா பிள்ளைகளுக்கும் அவர்களுடைய அப்பாதான் ரோல் மாடல். என் அப்பாவுக்கு இப்போது 90 வயது. இந்த வயதிலும் அவரிடம் அதே தில் அப்படியே இருக்கிறது.

அப்பாவுக்கு அடுத்து என்னுடைய ஹீரோ எம்.ஜி.ஆர். சின்ன வயதில் எம்.ஜி.ஆர் படங்களை மட்டுமே பார்ப்பேன். படம் பார்த்துவிட்டு வெளியே வரும் போது என்னை அறியாமலே தில் வரும். எம்.ஜி.ஆர் படம் பார்க்கப் போகிறவர்கள் அனைவரும் தங்களை எம்.ஜி.ஆர் போல் நினைத்துக் கொள்வதுதான் ஸ்பெஷல். நிஜ வாழ்க்கையில் வில்லத்தனமாக இருப்பவர்கள் கூட தியேட்டரில் எம்.ஜி.ஆரின் நடிப்பைப் பார்த்ததும் தில் காட்டுவார்கள்.

நான் சினிமாவுக்கு வருவதற்கு எனக்குள் இருந்த இலக்கிய ஆர்வம் காரணமாக இருந்தாலும் அந்த சமயத்தில் என் மனதில் தோன்றிய விஷயங்களை தில்லாக பத்திரிகைகளுக்கு எழுதி அனுப்புவேன். அந்தக் காலகட்டங்களில் நான் எழுதிய துணுக்குகள், கவிதைகள்  பிரபல வார, நாளிதழ்களில் பிரசுரமாகியுள்ளன. அந்த  சமயத்தில் என்னுடைய ஆசிரியர் சமதர்மம் என்னை ‘‘சினிமாவுல ட்ரை பண்ணு’’ என்று என்கரேஜ் பண்ணினார். அவர் கொடுத்த உற்சாகத்தால் தில்லாக சென்னைக்கு வந்தேன்.

கையில் டிகிரி இல்லாத காரணத்தால்  பிலிம் இன்ஸ்டிடியூட்ல நடிப்புத் துறையில் வாய்ப்பு கிடைத்தது. அப்போது பிலிம் இன்ஸ்டிடியூட்ல சீட் கிடைப்பது கடினமான காரியம். ஏன்னா தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா என்று நான்கு மாநிலத்துக்கு சேர்த்து இருபது சீட்கள்தான் இருக்கும்.
சின்ன வயதில் தில்லாக அரசியல் கட்சிகளுக்கு சுவர் விளம்பரம் வரைந்து கொடுப்பேன்.  அந்த லிங்க்ல நெகமம் கந்தசாமி என்ற எம்.எல்.ஏ மூலம் சீட் கிடைத்தது. அவரும் என்னைப் பொறுத்தவரை தில் மனிதர்தான். எங்கள் ஊரில் அவரை நெகமம் நெப்போலியன் என்றுதான் அழைப்போம். அவரிடம் ஒரு பிரச்சனையைக் கொண்டு போனால் தில் மனதுடன் போராடி பிரச்சனையைத் தீர்த்து வைப்பார்.

‘அதர்மம்’ படத்தில் உதவி இயக்குநராக என்னுடைய சினிமா வாழ்க்கையை ஆரம்பித்த நான் இப்போது விஜய், அஜித், விக்ரம் போன்ற முன்னணி ஹீரோக்கள் படங்களில் வேலை பார்க்குமளவுக்கு வளர்ந்திருக்கிறேன் என்றால் எனக்குள் இருக்கும் தில் மனதுதான் காரணம்.

சினிமாவைப் பொறுத்தவரை தில் ரொம்ப முக்கியம். இங்கு தில் உள்ளவர்கள்தான் ஜெயிக்க முடியும். சினிமா உலகத்தில் நிறைய போராட்டங்கள் இருக்கும். ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். மாஸ் ஹீரோ படம் பண்ணிய டைரக்டர் திடீர்னு புதுமுகம் நடிக்கும் படத்தை இயக்க வேண்டிய நிலைமை ஏற்படும். அதுபோன்ற சூழ்நிலைகளைக் கடந்து செல்வதற்கு தில் அவசியம்.

கடைசியாக, ஒரு மகான் சொன்னது ஞாபகத்துக்கு வருகிறது. ‘‘நண்பர்களே, தகுதியை வளர்த்துக்கொண்டே இருங்கள். வாய்ப்பு எப்போது வேண்டுமானாலும் உங்களைத் தேடி வரும். வாய்ப்பு வரும்போது நீங்கள் ஆயத்தமாக இல்லை என்றால் வாழ்க்கையில் ஜெயிக்க முடியாது’’ என்றார்.  தில் மனதுடன் நமக்கான தகுதிகளை வளர்த்துக் கொண்டோமானால் வெற்றி நிச்சயம்.

தொகுப்பு: சுரேஷ்ராஜா

(தொடரும்)