பாக்யராஜ் உருவாக்கிய பாடலாசிரியர்!‘அண்ணாதுரை’ படத்தில் ‘தங்கமா, வைரமா...’ என்ற பாடல் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் பாடலாசிரியர் அருண்பாரதி. ‘அண்ணாதுரை’ படத்தைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி நடித்து இசையமைக்கும் ‘காளி’ படத்திலும் பாடல் எழுதி விஜய் ஆண்டனியின் ஆஸ்தான பாடலாசிரியராக மாறியிருக்கிறார்.

“கவிஞரே, உங்க பின்னணி?”

‘‘தேனி மாவட்டம் உத்தமபாளையம் சொந்த ஊர். பி.ஏ.தமிழ் முடிச்சிருக்கிறேன். ஸ்கூல் படிக்கும்போதே தமிழ் ஆர்வம் இருந்தது. பள்ளியில் நடக்கும் கவிதை, கட்டுரைப் போட்டிகளில்  கலந்து கொள்வேன். அப்பா தமிழ் ஆர்வலர். சுற்றுப்புறங்களில் சாலமன் பாப்பையா, திண்டுக்கல் லியோனி பட்டிமன்றங்கள் எங்கு நடந்தாலும் ஆர்வத்துடன் பார்வையாளராகக் கலந்துகொள்வார்.

சில நேரங்களில் என்னையும் பட்டிமன்றங்களுக்கு அழைத்துச் செல்வார். கவிதை எழுதியதும் எல்லோருக்கும் வரும் ஆர்வம் போல் ஆர்வக் கோளாறில் சினிமாவில் பாட்டெழுத சென்னைக்கு வந்தேன்.சென்னையில் தங்கி வாய்ப்பு தேடுமளவுக்கு நிதி ஆதாரம் இல்லாததால் வாழ்வாதாரத்துக்காக டீக்கடை, டிவி கடை, ஓட்டல் என்று பல இடங்களில் வேலை பார்த்தேன்.

ஒருமுறை நான் எழுதிய கவிதை பாக்யராஜ் சார் நடத்தும் பத்திரிகையில் பிரசுரமானது. அந்தக் கவிதையைப் படித்துவிட்டு பாக்யராஜ் சார் தன் அலுவலகத்துக்கு அழைத்தார். அப்போது தொடர்ந்து கவிதை எழுதும் வாய்ப்பு கேட்டேன். நான் எழுதிய அந்தக் கவிதைத் தொடர் இப்போது ‘புதிய பானையில் பழைய சோறு’ என்று புத்தகமாகவும் வந்துள்ளது.

என் கவிதைகளைப் பாராட்டிய பாக்யராஜ் சார், ‘சினிமாவில் பாடல் எழுத முயற்சி செய்’ என்றார். ‘சினிமாவுக்கு எழுதத் தெரியாது’  என்றேன். ‘சினிமா பாடல் எழுதுவது வேறு, கவிதை எழுதுவது வேறு. என்னிடம் பா.விஜய் சில காலம் பயிற்சி எடுத்துக் கொண்டார். அதுபோல நீ விரும்பினால் என்னிடம் பயிற்சி எடுத்துக்கொள்’ என்றார்.

அவருடைய யோசனைப்படி பகல் நேரங்களில் வேலைக்குப் போவேன். இரவு நேரங்களில் சாங் கம்போஸிங் நடக்கும். ‘துணை முதல்வர்’ படத்தில் என்னை பாடலாசிரியராக அறிமுகப்படுத்தினார். அந்தப் படத்தில் நான் எழுதிய பாடல் பாக்யராஜ் சார் ஸ்பெஷலான முருங்கைக்காய் ஸ்டைல் பாடல். ஆனால் அந்தப் பாடல் ஆல்பத்துல மட்டும்தான் இருக்கும்.

தொடர்ந்து சில படங்களில் பாடல்கள் எழுதினேன். எனக்கு திருப்புமுனை கொடுத்த படம் விஜய் ஆண்டனி சார் நடித்த ‘அண்ணாதுரை’ படம். அந்தப் படத்தில் எல்லா பாடல்களும் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. ‘தங்கமா வைரமா’, ‘ஜி.எஸ்.டியா மாறினேன்’, ‘ஓடாதே ஓடாதே’ போன்ற பாடல்கள் பெரியளவில் ஹிட்டடித்தது. இதுதான் என்னோட வரலாறு.”

“தொடர்ந்து விஜய் ஆண்டனி படங்களில் எழுதி, அவரோட ஆஸ்தான பாடலாசிரியர் ஆயிட்டீங்களே?”

“ஆமாம் சார். ‘காளி’ படத்திலும் பாடல் எழுதும் வாய்ப்பு கொடுத்தார். விஜய் ஆண்டனி சார் தன்னுடைய படங்களில் ஒரு பாடலை படத்தின் உயிர் மாதிரி பிரதானமாக பயன்படுத்துவார். ‘பிச்சைக்காரன்’ படத்துல ‘நூறு சாமிகள் இருந்தாலும் அம்மா உன்னைப் போல் ஆகிடுமா’ என்ற பாடலைப் பயன்படுத்தியிருப்பார்.  ‘அண்ணாதுரை’ படத்தில் ‘தங்கமா வைரமா’, ‘எமன்’ படத்துல ‘கை வெச்சா காலி’ என்று ஒவ்வொரு படத்திலும் ஒரு பாடலை அதிகமாக பயன்படுத்துவார்.

‘அண்ணாதுரை’ படத்தில் நான் எழுதிய ‘தங்கமா வைரமா’ பாடல் எப்படி ஹிட்டடித்ததோ அது மாதிரி ‘காளி’யில் ‘அடி வயிற்றில் இடம் கொடுத்து கண்ணுக்குள் காத்தவளே, நான் ருசியாய் சாப்பிடவே தினம் பசியினில் படுத்தவளே, தொப்புள் கொடி வழியே உன் உயிரைக் குடித்தேன் நான் அம்மா, நான் தான் ஜெயித்திடவே அனுதினமும் தோற்றாய் நீயம்மா...’ என்ற சென்டிமென்ட் பாடல் முக்கியமான பாடலாக இருக்கும். விஜய் ஆண்டனி சாரை நான் வாழ்க்கையில் மறக்கவே முடியாது.”

“பாட்டெழுத ஏதாவது கொள்கை வெச்சிருக்கீங்களா?”

“தரமான பாடல் வரிகள் மட்டுமே என் கொள்கை. பாடலில் ஆங்கில வார்த்தைகள் வந்தாலும் தமிழ் வார்த்தைகள் வந்தாலும் தரம்தான் முக்கியம். என் சுதந்திரத்துக்குள் வரும்போது ஆங்கில வார்த்தைகளைக் கலக்கமாட்டேன். மற்றபடி இயக்குநர் ஆங்கிலக் கலப்போடு பாடலைக் கேட்கும்போது ஆங்கிலத்தில் எழுதித் தருவேன்.”

“நிறைய போட்டி நிலவும் துறை ஆச்சே?”

“எல்லாத் துறைகளிலும்தான் போட்டி இருக்கிறது. பாடலாசிரியர்கள் ஒவ்வொருத்தருக்கும் ஒரு நடை இருக்கிறதால் ஜெயிக்கிறார்கள். மறைந்த நா.முத்துக்குமார் பாடல்களில் ஹைக்கூ மாதிரி கவிதைகள் இருக்கும். தாமரை பாடல்களில் புதுப் புது வார்த்தைகள் இருக்கும். கபிலன் பாடல்களில் அழகியல் இருக்கும். மதன் கார்க்கி பாடல்களில் நவீனம் இருக்கும்.

பா.விஜய் சார் மெட்டுக்கு அதிகம் மெனக்கெடல் போடுவார். சினிமாவில் தனித்திறமை இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும். அதில் மாற்றுக் கருத்து இல்லவே இல்லை. திறமைசாலிகள் ஜெயிக்காமல் இருக்கலாம். ஆனால் இங்கு ஜெயித்தவர்கள் அனைவரும் திறமைசாலிகள். எழுத்தாற்றல், இசை ஆற்றல், வேலையை எப்படி உருவாக்கிக் கொள்வது என்று ஏதோ ஒரு ஆற்றல் படைத்தவர்களாக இருக்கிறார்கள்.

சினிமா எனும் களம் பெரிது. மீனவர்கள் எவ்வளவு ஆழமாக மீன் பிடிக்கப் போகிறார்களோ அந்தளவுக்கு அதிகமாக மீன்களைப் பிடிக்கலாம். பாடலாசிரியர்கள் மீனவர்கள் மாதிரி. சினிமா எனும் கடலுக்குள் எவ்வளவு காலம் தாக்குப் பிடிக்கிறார்களோ அந்தளவுக்கு அதிகமாக பெயரையும் புகழையும் சம்பாதிக்கிறார்கள். நானும் நீண்டகாலம் தாக்குப்பிடிப்பேன் என்கிற நம்பிக்கை இருக்கிறது.”

“அடுத்து?”

“முகவரி இல்லாத எனக்கு முகவரி கொடுத்தது பாக்யராஜ் சார் என்றால், முன் வரிசையில் உட்கார வைத்ததது விஜய் ஆண்டனி சார். இவ்விருவருக்கும் என் நன்றி எப்போதும் இருக்கும். இப்போது மற்றவர்களும் என்னை பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். ‘சண்டக்கோழி-2’, ‘களவாணி-2’, பரத் நடிக்கும் ‘8’, ‘மரகத காடு’, ‘யாகன்’ உட்பட நிறைய படத்துக்கு எழுதுகிறேன்.”

- சுரேஷ்ராஜா