பெண் இயக்குநரின் படத்தில் உதட்டோடு உதடு முத்தக் காட்சிகள்!



ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான பி.ஆர்.விஜயலட்சுமிக்கு அறிமுகம் தேவையில்லை. ஆசியாவின் முதல் பெண் ஒளிப்பதிவாளர். சிவாஜி நடித்த ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’, எம்.ஜி.ஆர் நடித்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ போன்ற படங்களை இயக்கிய பி.ஆர்.பந்துலுவின் மகள் என்று பல பெருமைகளுக்கு சொந்தக்காரரான இவர் ‘பாட்டுப்பாடவா’ படத்துக்குப் பிறகு சினிமாவில் தன் செயல்பாடுகளை நிறுத்திக் கொண்டார். இருபத்தி இரண்டு வருடங்களுக்குப் பிறகு இப்போது ‘அபியும் அனுவும்’ படத்தின் மூலம் இயக்குநராக களமிறங்கியிருக்கிறார். அவருடன் ஒரு சந்திப்பு.

“ஏன் இவ்வளவு பெரிய இடைவெளி?”

“சிம்பிள் காரணம் குடும்பம், கணவர், குழந்தை என்று பொறுப்புகள் அதிகமாகிவிட்டதால் முன்பு போல் என்னால் சினிமாவில் தீவிரமாக இயங்க முடியவில்லை. சொல்லப்போனால் ‘பாட்டுப்பாடவா’ படம் ரிலீஸ் சமயத்தில் தான் எனக்கு குழந்தை பிறந்தது. அந்த சமயத்தில் குழந்தையுடன் அதிகமாக இருக்க வேண்டி யிருந்ததால் ஒளிப்பதிவு, டைரக்‌ஷன் பண்ணுவதை நிறுத்திக் கொண்டேன்.

தனுஷ் நடித்த முதல் படமான ‘துள்ளுவதோ இளமை’ படத்துக்கு ஒளிப்பதிவு பண்ணும் வாய்ப்பு முதலில் எனக்குத்தான் வந்தது. அப்போது என்னுடைய மகன் கைக்குழந்தை. குழந்தையுடன் அதிக நேரம் செலவு செய்ய வேண்டியிருந்ததால் சினிமாவில் கவனம் செலுத்த முடியவில்லை. குழந்தை வளர்ந்து பெரியவனான பிறகு ‘சரிகம’ இசை கம்பெனியில் சீனியர் துணைத் தலைவர் என்று மிகப்பெரிய பொறுப்பில் இருந்ததாலும் சினிமா பண்ண முடியவில்லை.

இப்போது என்னுடைய கம்பெனி தயாரிக்கும் ‘அபியும் அனுவும்’ படத்தில் மீண்டும் டைரக்டராக அதே விஜயலட்சுமியாக திரும்பி வந்துள்ளேன். நான் தீவிர சினிமாவை விட்டு வெளியே வந்தபோது ஒளிப்பதிவாளராக இருபத்தி இரண்டு படங்களில் வேலை பார்த்தேன்.”

“இந்தப் படம் என்ன மாதிரியான கதை?”

“ஐடி கம்பெனியில் வேலை பார்க்கும் ஹீரோ, ஹீரோயின் ஃபேஸ்புக்கில் நட்பாகப் பழகுகிறார்கள். ஒரு கட்டத்தில் நட்பு காதலாக மலர்ந்து திருமணத்தில் முடிகிறது. திருமணத்துக்குப் பிறகு அவர்கள் வாழ்வில் ஒரு சம்பவம் நடக்கிறது. அது என்ன சம்பவம்? அந்த சம்பவத்தால் திருமணத் தம்பதி என்னவிதமான பாதிப்பை சந்திக்கிறார்கள்? அந்த சம்பவத்தின் இழப்பு, வலி என்ன என்பதை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறேன். தமிழ் சினிமாவில் இது ஒரு பெஞ்ச் மார்க் படமாக இருக்கும்.”

“படத்துல முத்தக் காட்சிகள் தாறுமாறா இருப்பதாக பேச்சு அடிபடுகிறதே?”

“படத்துல முத்தக் காட்சிகள் இல்லை என்று சொல்லவில்லை. மொத்தம் மூன்று லிப்லாக் காட்சிகள் இருக்கிறது. அந்த முத்தக் காட்சிகள் கதைக்கு முக்கியத்துவம் தரும் விதத்தில் இருக்கும். சென்ஸாரில் ‘யூ/ஏ’ சான்றிதழ் கொடுத்ததே கதையோட கன்டென்ட்டுக்காகத்தான். மற்றபடி முத்தக் காட்சிக்காக அல்ல.”

“உங்க ஹீரோ டொவினோ தாமஸ் என்ன சொல்கிறார்?”

“டொவினோவுக்கு கேரளத்தில் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. மலையாளத்தில் பெரிய நடிகர். பிஸியாகவும் இருக்கிறார். ‘என்னு நிண்டே மொய்தீன்’ படத்துக்குப் பிறகு தமிழ்ப் படங்கள் நிறைய வந்ததாகச் சொன்னார். இந்திக் கதையை மிஸ் பண்ண விரும்பாததால் நடிக்க சம்மதித்தார். இந்தப் படத்தில் ஜாயின் பண்ணும் போது தமிழ் அவ்வளவாகத் தெரியாது. இப்போது தமிழில் நிறைய பேசுகிறார்.”

“ஹீரோயின் பியா?”

“இந்தப் படத்தில் பியா ஏன் மொட்டை அடித்திருக்கிறார் என்று கேட்கிறார்கள். இது கேன்சர் கதை கிடையாது. கதையில் லவ் எலிமென்ட்ஸ் அதிகம். ஏன் மொட்டை என்பதை படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். பியாவுக்கு இந்தப் படம் லேண்ட்மார்க் படமாக அமையும். மீண்டும் தமிழில் ரவுண்ட் கட்டி அடிப்பார்.”

“இசை?”

“நான் டைரக்‌ட் பண்ணின முதல் படத்துக்கு இளையராஜா சார்தான் மியூசிக். அதுமட்டுமில்ல, நான் ஒளிப்பதிவாளராக வேலை பார்த்த அனைத்து படங்களுக்கும் இளையராஜாசார்தான் மியூசிக் பண்ணியிருந்தார். இந்தப் படத்துக்கு அவரிடம் போகவில்லை. அதுக்காக என்னை ராஜா சார் திட்டக்கூடாது. இந்தப் படத்தில் ‘போடா போடி’ தரண் மியூசிக் பண்ணியிருக்கிறார். மிகச் சிறப்பான இசை கொடுத்திருக்கிறார்.

படத்துல இரண்டு பாடல்கள் வருகிறது. பாடல்களை மதன் கார்க்கி எழுதியிருக்கிறார். அகிலன் ஒளிப்பதிவு பண்ணியிருக்கிறார். அற்புதமான கேமராமேன். ‘பாட்டுப்பாடவா’ படத்துக்கு நானே ஒளிப்பதிவாளராகவும் வேலை பார்த்தேன். ஒரே நேரத்தில் இரண்டு பொறுப்புகள் இருக்கும்போது நடிகர்களிடம் பேசுவதற்கான நேரம் கிடைப்பதில்லை. இதில் அகிலன் சார் கலக்கியிருக்கிறார். என்னுடைய கணவர் சுனில் எடிட்டிங் பண்ணியிருக்கிறார்.”

“உங்கள் தந்தையைப் போல் வரலாற்றுப் படங்கள் எடுக்கும் ஐடியா இருக்கா?”

“வரலாற்றுப் படங்களின் பட்ஜெட் மிக அதிகம். எனக்கும் அப்படியொரு வாய்ப்பு வந்தால் என் அப்பா மாதிரி வரலாற்றுப் படங்கள் பண்ணுவேன்.”

- சுரேஷ்ராஜா