விட்டுக் கொடுத்தவர்கள் கெட்டதில்லை!



இயக்குநர் செல்வராகவனின் உதவியாளரான வாசன் ஷாஜி, ‘வாண்டு’ மூலம் இயக்குநராகிறார்.“விட்டுக் கொடுத்தவர்கள் கெட்டதில்லை என்று பெரியோர் சொல்வார்கள். அதைத்தான் என்னுடைய ‘வாண்டு’ம் சொல்லப் போகிறது” என்று நிதானமாக ஆரம்பித்தார்.

“குழந்தைகள் படமா?”

‘‘இது 1971ல் நடந்த உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படம். அதை பீரியட் பிலிமாக எடுக்காமல் கரண்ட்லதான் சொல்லியிருக்கிறேன். சூதாட்டத்தில் ஜெயித்தவனுக்கும் தோற்றவனுக்குமிடையே நடக்கும் நீயா நானா போட்டியை விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்லியுள்ளேன். வீதிக்கு வீதி சண்டை என்பது நம் சமுதாயத்தில் பார்க்கக்கூடிய அன்றாட நிகழ்வு.

அதுபோன்ற தெருச்சண்டை, குப்பத்து மக்களின் லைஃப் ஸ்டைல், வீரம் பற்றி சினிமாத்தனம் இல்லாமல் இதில்  சொல்லியிருக்கிறேன். ஏக் தம் ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடித்தோம். இப்போது ஃபைனல் ஒர்க் போயிட்டிருக்கு. ‘பசங்க’, ‘கோலிசோடா’ போன்ற ட்ரெண்ட்ல இந்தப் படத்தையும் சொல்லலாம். அதாவது குழந்தைகள் நடித்த பெரியவர்கள் படம்.’’

‘‘யாரெல்லாம் நடிக்கிறாங்க?”

“சீனு, ஆல்வின் என்கிற இரண்டு பசங்கதான் கதையின் நாயகர்கள். இரண்டு பேருமே பதினைந்து வயதைத் தாண்டாதவர்கள். ஆனால் நடிப்புல பிரிச்சி மேய்ஞ்சிருக்காங்க. முக்கியமான கேரக்டர்ல சாய்தீனா பண்ணியிருக்கிறார். இவர்களோடு மகா காந்தி, ‘மெட்ராஸ்’ ரமா, ‘வின்னர்’ ரமாசந்திரன் ஆகியோரும் இருக்கிறார்கள்.

“டெக்னீஷியன்ஸ்?”

“இசை நேசன். இந்தப் படத்துலதான் அறிமுகம். ஸ்டோரி வேல்யூ உள்ள படம் என்பதால் பாடல்கள் கதையையொட்டி அமைந்திருக்கும். அனைத்துப் பாடல்களையும் மோகன் ராஜா எழுதியிருக்கிறார். ‘தொடரி’, ‘கயல்’ போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு பண்ணிய மகேந்திரன்தான் நம்ம படத்துக்கும் ஒளிப்பதிவு பண்ணியிருக்கிறார்.

எடிட்டர் ப்ரியன். ஆக்‌ஷன் காட்சிகள் தெறிக்கிற மாதிரி கம்போஸ் பண்ணியிருக்கிறார் ஓம் பிரகாஷ். பெரிய பட்ஜெட் படம் போல்தான் இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்தது. டத்தோ முனியாண்டியுடன் இணைந்து நானும் எம்.எம்.பவர் சினி கிரியேஷன்ஸ் சார்பாக இணைந்து தயாரித்துள்ளேன்.”

“உங்க டைரக்டர் படத்துல காமம் தூக்கலா இருக்குமே?”

“அவர் ஸ்டைல் வேறு. என் ஸ்டைல் வேறு. இந்தப் படத்துல காமம் என்ற பேச்சுக்கே இடமில்லை. வடசென்னையில் இப்போதும் நடைமுறையில் உள்ள வாழ்க்கையைப்பற்றிச் சொல்லும் படம் என்பதால் எதுவுமே திணிக்கப்பட்ட மாதிரி தெரியாது. குடும்பத்தோடு படம் பார்க்க வரலாம்.”

 - சுரேஷ்ராஜா