கூடி வாழ்ந்தால் கோடி நன்மை வீ.சேகர்



டைட்டில்ஸ் டாக் 12

(சென்ற இதழ் தொடர்ச்சி)


நான் டைரக்‌ஷன் பண்ண வந்த போது என்னைச் சுற்றி இருந்தவர்களுக்கு ஆச்சர்யமாக இருக்கும். ஏன்னா, படப்பிடிப்புத் தளத்தில் குடும்பஸ்தனாகிய நான் பேச்சுலர் போல் குடும்பத்தைக் குறித்து எந்தவித டென்ஷனும் இல்லாமல் இருப்பேன்.

அதற்குக் காரணம், என்னுடைய குடும்பத்தில் அம்மா வீடு, மாமனார் வீடு, உடன் பிறந்தவர்கள் எல்லாரும் நான் சினிமாவில் ஜெயிப்பதற்காக தோள் கொடுத்தார்கள். கூட்டுக் குடும்பத்தின் ஆதரவு இருந்ததால்தான் குடும்பப் படங்களை எடுக்கக்கூடிய இயக்குநர் என்று பெயர் எடுக்க முடிந்தது.

ஒரு கட்டத்தில் இயக்குநர் அந்தஸ்திலிருந்து தயாரிப்பாளராக வரவேண்டும் என்று நினைத்தபோது அப்போதும் எனக்கு கூட்டுக் குடும்ப வாழ்க்கைதான் உதவியாக இருந்தது. நான் முதன்முறையாக படம் தயாரிக்க வேண்டும் என்று நினைத்தபோது என் கையில் ஒரு லட்ச ரூபாய் மட்டுமே இருந்தது.

இந்தப் பணத்தை வைத்துக்கொண்டு சினிமா எடுக்க வாய்ப்பே இல்லை. அப்போது என்னுடைய உறவுகளும் நண்பர்களும் கை கொடுத்தார்கள். ஆறு பேர் ஆளுக்கு ஒரு லட்சம் முதலீடு செய்து திருவள்ளுவர் கலைக்கூடம் என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்தோம்.

அந்த நிறுவனத்தின் மூலம் ‘பொறந்த வீடா புகுந்த வீடா’, ‘காலம் மாறிப் போச்சு’, ‘விரலுக்கேத்த வீக்கம்’, ‘நம்ம வீட்டு கல்யாணம்’ உள்பட சுமார் இருபது வெற்றிப் படங்களைத் தயாரித்தோம். அதுதான் கூட்டுக் குடும்பத்தின் வெற்றி. வீட்டிலும் சரி, தொழிலிலும் சரி, கூட்டுக் குடும்ப வாழ்க்கைதான் எனக்கு கை கொடுத்தது.

நான் இயக்குநர் ஆவதற்கு மாமனார், என் உடன்பிறப்புகள் பக்கபலமாக இருந்தார்கள். தயாரிப்பாளராக வருவதற்கு என் நண்பர்கள் தோள் கொடுத்தார்கள். எனக்கு குடும்பப் பட இயக்குநர் என்ற அடையாளம் கிடைத்தவுடன் சினிமாவையும் தாண்டி சமுதாயத்தில் நல்ல வரவேற்பைக் கொடுத்தது. முன் பின் தெரியாத குடும்பங்களில் இருந்து கூட என்னைத் தொடர்பு கொண்டு தங்கள் வீட்டில் இருக்கும் பிரச்சனைகளைச் சொல்லி பஞ்சாயத்து பண்ண அழைத்திருக்கிறார்கள்.

நானும் என்னுடைய அனுபவத்திலிருந்து கூடி வாழ்வதால் உள்ள நன்மைகளை அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி சமாதானம் செய்து வைப்பேன். அது போல் ஏராளமான குடும்பங்கள் என்னுடைய திரைப்படங்கள் மூலம் நன்மை அடைந்திருப்பதை நினைத்துப் பார்க்கும்போது சினிமாவில் சாதித்த திருப்தி ஏற்பட்டிருக்கிறது.

இப்போதுள்ள இளம் தலைமுறையினர் சொந்தத்திலும் இல்லாமல் தூரத்திலும் இல்லாமல் திருமணம் செய்துகொள்கிறார்கள். எதற்கு எடுத்தாலும் அவர்களுக்குள் ஈகோ எட்டிப் பார்க்கிறது. அவர்களிடையே சமாதானம் செய்து வைக்க வீட்ல பெரியவங்க இல்லை. கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் சில சமயம் கணவனுக்கும் மனைவிக்குமிடையே மனக்கசப்பு ஏற்பட்டால் கணவனோ, மனைவியோ கோபத்தில் அம்மா வீட்டுக்குப் போய்விடுவார்கள்.

அந்த மாதிரி சமயங்களில் பெரியவங்க அவர்களை சமாதானம் செய்து வைப்பார்கள். பெரியவங்க இல்லாத வீட்ல இது சாத்தியமில்லை. ஈகோ கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாக வளர ஆரம்பித்து ஒரு கட்டத்தில் விவாகரத்து அளவுக்கு விவகாரம் முற்றிப் போய்விடுகிறது. அப்படி என் வாழ்க்கையில் நான் சந்தித்த அனுபவங்கள்தான் நான் ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ என்ற படத்தை எடுக்க உந்துதலாக இருந்தது. படமும் மிகப் பெரிய வெற்றி அடைந்தது. அந்த டைட்டிலும் மக்கள் மத்தியில் பேசப்பட்டது.

கூட்டுக் குடும்ப முறை இன்று சிதைந்துபோனதால்தான் விவாகரத்து வழக்குகள் அதிகமாகிவிட்டது என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்கிற கான்செப்ட் நாட்டை ஆள்கிறவர்களிடம் அவசியம் தேவைப்படுகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில்தான் அரசியல் கட்சிகள் அதிகம். சமுதாயத்துக்கு ஒரு கட்சி என்ற முறையில் ஏராளமான கட்சிகள் இருக்கிறது.
ஏராளமான கட்சிகள் இருந்தாலும் ஒற்றுமை உணர்வு இல்லாததால் தமிழ்நாட்டின் உரிமையை ஒருமித்த குரலில் கேட்க முடியாத சூழல் ஏற்பட்டுவிடுகிறது.

அந்த மாதிரி சமயங்களில் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற உணர்வு வீட்டை விட நாட்டுக்குத்தான் முதலில் தேவைப்படுகிறது என்று சிந்திக்க வைக்கிறது.அடுத்து... வீடு, நாடு கடந்து கூடிவாழ்ந்தால் கோடி நன்மை என்ற உணர்வு உலகத்துக்கே தேவைப்படுகிறது.

உலக நாடுகளிடையே ஒற்றுமை உணர்வு தேவை என்ற அடிப்படையில் முன்னாள் பாரதப் பிரமதர் நேரு அத்தகைய முயற்சியில் இறங்கினார். ஆசியாவில் உள்ள வளரும் நாடுகளை ஒரே அணியில் திரட்டினார். அதனாலேயே அவர் ஆசிய ஜோதி என்று அழைக்கப்பட்டார்.
ஆனால் ஆசிய நாடுகள் இப்போது முரண்பாடுகளால் பல்வேறு பொருளாதார இழப்புகளைச் சந்தித்து வருகிறது.

ஐரோப்பிய நாடுகள் ஆசியாவில் உள்ள நாடுகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக பல வகையில் சூழ்ச்சி செய்து இந்தியா போன்ற நாடுகளுக்கு குந்தகத்தை ஏற்படுத்தி வருகிறது.புராண காலத்தில் பாகிஸ்தான் இந்திய நிலப்பரப்பில் இருந்தது.

பங்காளி நாடாக இருந்த பாகிஸ்தான் இன்று பகையாளியாக நமக்கு எதிராக வந்து நிற்கிறது. வன்முறையைத் தூண்டிவிடுகிறது. எதிரிகளிடமிருந்து நம் நாட்டைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ராணுவத்துக்கு ஆயிரம் ஆயிரம் கோடிகள் பட்ஜெட்டில் பணம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

நாட்டின் கட்டமைப்பு வசதிகளுக்கு போய்ச் சேர வேண்டிய நிதி வேறு வகையில் பயன்படுத்தப்படுகிறது.நமக்கு எதிரியாக நிற்கும் நாடு நம்முடன் சமாதானத்தைக் கடைப்பிடித்தால் அந்த நாட்டின் அபிவிருத்திக்காக நாம் நிதி உதவி செய்யலாம். நேபாளம், பூடான் போன்ற நேச நாடுகளில் இந்தியா பல கட்டமைப்பு வசதிகளைச் செய்துகொடுத்துள்ளது.

இயற்கைச் சீற்றங்கள் சமயத்தில் இரு நாடுகளும் உதவிக்கரமாக இருக்க வேண்டிய சூழ்நிலை மாறி தீவிரவாதத்தால் பேரிழப்பை ஏற்படுத்திவிடுகிறது.தமிழ்நாட்டில் ஜாதி அடிப்படையில் ஒற்றுமை குலைந்துவிட்டது. உலக அளவில் மத ரீதியாக நாடுகள் பிளவுபட்டுக் கிடக்கிறது.உலகத்தில் உள்ள அனைத்து மதங்களும் அன்பை மட்டுமே போதிக்கிறது.

கூடிவாழ்ந்தால் கோடி நன்மை என்ற கான்செப்ட்டைத்தான் இயேசுவும் சொன்னார், அல்லாவும் சொன்னார், சிவனும் சொன்னார். ஆனால் இறைவன் சொன்னதை மனதில் பதியவைக்காமல் காற்றில் பறக்கவிட்டுவிட்டு ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்கிறார்கள்.

அன்பே சிவம் என்று சொன்ன இந்தியாவில்தான் மதத்தின் பெயரால் ஏராளமான கலவரங்கள் ஏற்படுகிறது. அன்பே சிவம் என்று சொன்ன சிவ பக்தர்களிடத்தில் அன்பு இல்லை.இப்போதுள்ள சூழ்நிலையில், கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற சிந்தனை வீட்டுக்கும் தேவை, நாட்டுக்கும் தேவை, உலகத்துக்கும் தேவை. வாழ்க வையகம்!

தொகுப்பு: சுரேஷ்ராஜா

(தொடரும்)