என் ஆளோட செருப்பு காணோம்...



காதலுக்கும் செருப்புக்கும் என்ன சம்பந்தம்?

ஆனந்தியை ஒருதலையாக காதலிக்கும்  யோகி பாபு, ஆனந்தியை லுக் விடுவதற்கு  கல்லூரியில் படிக்கும் நாயகன் தமிழை துணைக்கு அழைத்துச் செல்கிறார்.  ஆனந்தியைப் பார்த்த வுடன் காதலிக்க ஆரம்பிக்கிறார் தமிழ். ஆனந்திக்கு தெரியாமலேயே அவரைப் பின்தொடர்ந்து  காதலித்து வருகிறார்.

ஒருநாள் பேருந்தில் ஏறும்போது ஆனந்தியின் செருப்பு ஒன்று கீழே விழுந்துவிடுகிறது. பேருந்தை நிறுத்த முடியாததால் ஆனந்தி, மற்றொரு செருப்பையும் அந்தப் பேருந்திலேயே விட்டுச் செல்கிறார்.வெளிநாட்டில் வேலை பார்க்கும் ஆனந்தியின் அப்பா ஜெயப்பிரகாஷ் தீவிரவாதிகள் பிடியில் சிக்கித்தவிக்கிறார். 

இதனால் கடும் சோகத்துக்கு ஆளாகும் ஆனந்தியும், அம்மா ரேகாவும் குறி சொல்லும் பெண்ணான தமிழின் அம்மாவிடம்  வருகிறார்கள். தவறவிட்ட செருப்பை மறுபடியும்  ஆனந்தி எப்போது பார்க்கிறாரோ, அப்போது தான்  அப்பா திரும்பி வருவார் என்று குறி வருகிறது. ஆனந்தி  செருப்பைத்தேடி அலைகிறார். தமிழும் அதே வேலையாக அலைகிறார். செருப்பு கிடைத்ததா? ஜெயப்பிரகாஷ் திரும்பி வந்தாரா? தமிழ் - ஆனந்தி காதல் கைகூடியதா? என்பதை காமெடி கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

பக்கோடா பாண்டி என்ற பெயரில் ‘பசங்க’ படத்தில் சிறுவனாக நடித்தவர், இந்தப் படத்தின் மூலம் பெயரை தமிழ் என மாற்றிக் கொண்டு நாயகனாக அறிமுகமாகி இருக்கிறார். நாயகனாக நடித்திருக்கும் முதல் படம் என்றாலும் அந்த கதாபாத்திரத்திற்கு  கச்சிதமாக பொருந்துகிறார். யோகி பாபுவுடன் வரும் இவரது காட்சிகளில் காமெடி களை கட்டுகிறது.

‘கயல்’ ஆனந்தி பாத்திரமறிந்து பண்பட்ட நடிப்பை வழங்கியிருக் கிறார். யோகி பாபு, ஆனந்தி சம்பந்தப்பட்ட காட்சிகள் ரகளையாக இருக்கின்றன. செருப்படி வாங்கியதற்கு சந்தோஷப்படும் வித்தியாசமான அரசியல்வாதியாக காமெடி செய்திருக்கிறார் கே.எஸ்.ரவிக்குமார். யோகி பாபுவின் முகபாவமும் அவரது வசன வெளிப்பாடும் ரசிக்கவைக்கின்றன.

மூன்று சக்கர சைக்கிளில் பிச்சையெடுக்கும் ‘கயல்’ தேவராஜ் பேசும் பிச்சைக்கார நியாயவாதம் ரசிக்க வைக்கிறது.சுகா செல்வனின் ஒளிப்பதிவு சுகமாக இருக்கிறது.  மெல்லிய இசையை துல்லியமாக வழங்கியிருக்கிறார் இஷான் தேவ். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஒரு காதல் படத்தை கலகலப்பாக இயக்கியிருக்கிறார் ஜெகன்நாத்.