தீரனுக்கு சல்யூட்!



தீரன்

நேர்மையான இளம் டி.எஸ்.பி. தீரன் திருமகன், தனிப்படையுடன் சென்று, காவல்துறைக்கே சவால்விடும் வட இந்தியக்  கொள்ளையர்களைக் கைது செய்யும் கதை.அடுத்தடுத்து நடக்கும் கொடூரக் கொலைகள் மற்றும் கொள்ளைகளால் மக்கள் பீதியில்  இருக்கிறார்கள். அரசும் காவல்துறையும் மெத்தனமாக இருக்கிறது. இந்த நிலையில், சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கொள்ளையர்களால் கொலையாகிறார்.

இப்போதுதான் அரசும் காவல்துறையும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கையில் இறங்குகிறது. கொள்ளையர்களைப்பற்றி கிடைத்த சின்ன க்ளூவை வைத்துக்கொண்டு  வடமாநிலங்களில் தேடுதல் வேட்டை நடத்தும் டி.எஸ்.பி தீரன் தலைமையிலான போலீஸ் குழு, தங்களது பணியை வெற்றிகரமாக முடிப்பதற்கு படும் பாடுகளை விவரிக்கிறது படம்.

டி.எஸ்.பி தீரன் கதாபாத்திரத்தில் அர்ப்பணிப்பு உணர்வுடன் கடுமையாக உழைத்து நடித்திருக்கிறார் கார்த்தி.  நேர்மையான போலீஸ் அதிகாரியாக நிமிர்ந்து நிற்கிறார். இதுவும் ஒரு படம் என்கிற அளவோடு நின்றுவிடாமல், உண்மையான போலீஸ் அதிகாரியாக வாழ்ந்திருக்கிறார். ரகுல் ப்ரீத் சிங்குடன் செய்யும் ரொமான்ஸ் காட்சிகள் முகம் சலிக்காத அளவுக்கு படமாக்கப்பட்ட கவிதைகள். கோமாவில் இருக்கும் மனைவியின் அருகிருந்து கண்கலங்கும்போது நம்மையும் உடன் இணைத்துக் கொள்கிறார்.

ரகுல் ப்ரீத் சிங் கொள்ளை அழகை கொடிகட்டிப் பறக்கவிடுகிறார். “நான் உனக்குள்ளே நுழைந்து போகிற அளவுக்கு கட்டிப்பிடி’’ என்று கார்த்தியிடம் காதல் உத்தரவு போடும்போது, பல காதலர்களைப் பொறாமைப்பட வைக்கிறார்.

போலீஸ் கதாபாத்திரத்துக்கு புத்துயிர் கொடுத்திருக்கிறார் போஸ் வெங்கட். மனைவியின் கொடூர மரணத்துக்குப் பின்னும் தேடுதல் வேட்டையில் தீவிரமாக இறங்கும் கேரக்டருக்கு பெருமை சேர்த்திருக்கிறார்.அபிமன்யு சிங், கொடூர வட இந்திய கொள்ளைக் கூட்டத் தலைவனாக  மிரட்டுகிறார். அமைச்சராக வரும் ஜி.என்.ஆர் கவனம் ஈர்க்கிறார். பீரோ புல்லிங் திருடனாக வரும் அருள் எழிலன், விவரம் தெரியாத திருடன்களுக்கு டிப்ஸ் கொடுத்து அப்ளாஸ் அள்ளுகிறார். “பொலிடீஷியன்களைவிட மோசமானவங்க போலீஸ்காரங்க....

கொள்ளைக்காரனுகள உங்க வீட்டுக்கே திருப்பிவிட்டாலும் விட்ருவாங்க’’ என்று வசனம் பேசி கைதட்டல் வாங்குகிறார் மை.பா. நாராயணன். மனோபாலா,  வர்கீஸ் மேத்யூ, ரோஹித் பதக், நாரா ஸ்ரீனிவாஸ், சுரேந்தர் தாக்கூர், பிரயா ஸ்மன், கிஷோர் கன்டம், ஜமில் கான், ஸ்கார்லெட் மெல்லிஷ் வில்சன், கல்யாணி நட்ராஜன், சோனியா, பிரவீணா, அபிராமி  என அத்தனை கதாபாத்திரங்களும் உயிரோட்டம் நிறைந்த நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

“கடக்கடக் கங்கணா....”, ஹிந்தி குத்துப் பாடலுக்கு ஸ்கார்லெட்  மெல்லிஷ் வில்சன்  யூத்துகளுக்கு செம விருந்து தருகிறார்.
திலீப் சுப்பராயன் வடிவமைப்பில் சண்டைக்காட்சிகளில்  அதிரடி அட்டகாசம். இரண்டு பேருந்துகளுக்கு இடையே நடக்கும் சேஸிங் சண்டை, பாலைவன  சண்டை, ஊர்மக்களுடன் மோதும் சண்டை மற்றும் கிளைமாக்ஸ் சண்டை என அத்தனையிலும் அக்கறையோடு உழைத்திருக்கிறார்கள்.  டி. சிவனாண்டேஸ்வரனின் படத்தொகுப்பு விறுவிறுப்புக்கு வேகம் சேர்க்கிறது.

சத்தியன் சூரியன் கையாண்டிருக்கும், கண்ணாண்டிருக்கும் ஒளிப்பதிவு வெகு வெகு நேர்த்தி.  அடர்ந்த வனம், இருண்ட  பகுதிகள், புழுதி பறக்கும் பாலைவனம் என அசத்தியிருக்கிறார்.  ஜிப்ரான்  அமைத்திருக்கும் பின்னணி இசை த்ரில்லருக்கான நேர்மையை நிலைநாட்டுகிறது.

“லாலி , லாலி”, “செவத்த புள்ள... புள்ள...’’, “கடக்கடக் கங்கணா....”, “ஓ சாத்தியே..”  பாடல்கள்  ரசனையைத் தூண்டுகின்றன.பக்காவாக ஹோம் ஒர்க் செய்து, காவல்துறையில் பணியாற்றிய அனுபவம் உள்ளவரைப்போல, சமூக அக்கறையுடன் நேர்த்தியான காட்சியமைப்புகளுடன் நேர்மையான படத்தை இயக்கியிருக்கிறார் எச்.வினோத்.