உணர்ச்சிகளை தூண்டிய ராசலீலா!



பிலிமாயணம் 15

கமல்ஹாசனும், ஆர்.சி.சக்தியும் பரமக்குடிகாரர்கள். கமல் நடன இயக்குநராகும் ஆசையிலும், ஆர்.சி.சக்தி இயக்குநர் ஆகும் ஆசையிலும் சென்னையில் சுற்றிக் கொண்டிருந்தார்கள். இருவரும் ‘அன்னை வேளாங்கண்ணி’ படத்தில் இணைந்து பணியாற்றினார்கள்.

அப்போது ஒரு நாள் “நான் இயக்குநராகி படம் எடுத்தால் என் முதல் பட ஹீரோ நீ தான்” என்றார் சக்தி. கமலுக்கு அப்போது நடிக்கும் ஆர்வம் இல்லை. டெக்னீஷியனாக வேண்டும் என்றுதான் நினைத்திருந்தார். “அடப்போங்கண்ணே! நமக்கு நடிப்பு சரிப்பட்டு வராதுண்ணே” என்று கூறிவிட்டார்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு ஆர்.சி.சக்தி ‘உணர்ச்சிகள்’ என்ற படத்தின் மூலம் இயக்குநரானார். சொன்ன மாதிரியே கமலை அதில் ஹீேராவாக்கினார். ஆனால் அது ஒரு வில்லங்கமான படம். அழகான இளைஞன் பெண்களிடம் மாட்டிக் கொண்டு எப்படி தவிக்கிறான் என்பதுதான் கதை. முக்கால்வாசி படம் முடிந்த நிலையில் பணம் இல்லாமல் படம் நின்று விட்டது.

அதற்குப் பிறகு கமல் ‘அரங்கேற்றம்’ படத்தில் நடித்தார். அது ஹிட்டானது. அதன் பிறகு மலையாளப் படங்களில் நடித்தார். அங்குதான் முதலில் ஹீரோவாக வெற்றி பெற்றார். ஒரு மலையாளத் தயாரிப்பாளரிடம் கமல் உணர்ச்சிகள் படம் பற்றிக் கூற “அட இது நம்ம மலையாளத்துக்கு ஏற்ற கதையாக இருக்கே” என்று கணிசமான தொகை கொடுத்து ‘உணர்ச்சிகள்’ கதை உரிமத்தை வாங்கி அதை கமலை வைத்தே ‘ராசலீலா’ என்கிற பெயரில் எடுத்தார்.

அந்த ரீமேக் உரிமத்தால் கிடைத்த பணத்தைக் கொண்டு தமிழில் ‘உணர்ச்சிகள்’ படத்தை முடித்தார் ஆர்.சி.சக்தி. ஆனால் மலையாளப் படமான ‘ராசலீலா’ முந்திக் கொண்டது. கேரளாவில் சக்கைப் போடு போட்ட படம் தமிழ் நாட்டில் வெளியாகி 100 நாள் ஓடியது. ராசலீலாவின் 100வது நாளில்தான் தமிழி–்ல் ‘உணர்ச்சிகள்’ வெளிவந்தது.

பெண்கள் மது அருந்துகிற காட்சி, பெண்கள் ஆணை கையைப் பிடித்து படுக்கைக்கு இழுக்கும் காட்சி, பால்வினை நோய் என எனக்குத் தெரிந்து தமிழில் வெளிவந்த முதல் செக்ஸ் படம் இதுதான். இந்தக் காட்சிகளுக்காக ரசிகர்கள் தியேட்டருக்கு படை எடுத்தார்கள். மலையாளத்தில் இருந்த அளவிற்கு தமிழில் காட்சிகள் சூடாக இல்லாததால் தமிழ் ‘உணர்ச்சிகள்’ தோல்வி அடைந்தது.

காலைக் காட்சி மலையாளப் படங்களில் செக்ஸ் தூக்கலாக இருந்தது. இதன் அடுத்த கட்டமாக நேரடியான ஆபாசக் காட்சிகள் படத்திற்குள் நுழைந்தன. சரியான இடத்தில் படத்திற்கு சம்பந்தம் இல்லாத காட்சியைப் புகுத்தி விடுவார்கள்.

குறிப்பாக ஒரு புதுமணத் தம்பதிகள் முதலிரவு கொண்டாடுவது ேபான்ற காட்சி படத்தின் கதையில் இருக்கும். ஆனால் முதலிரவு கொண்டாடுவது கதைக்கு தொடர்பில்லாத நடிகர், நடிகை. காலைக் காட்சி தியேட்டர்களுக்கென்று சில சங்கேத மொழிகள் இருந்தன.

ஒரே படம் ஒரு மாதம் தாண்டியும் ஓடும். அப்படிப்பட்ட நல்ல படமா என்றெல்லாம் கேட்காதீர்கள். அதில் ஒரு சூட்சுமம் இருந்தது. படம் ஒரு வாரம் ஓடியதும். அந்தப் படத்தின் போஸ்டரில், ‘புதுப்பொலிவுடன் மீண்டும்’ என்று சின்னதாக ஒரு ஸ்டிக்கர் ஒட்டுவார்கள். படம் அதே படம்தான், கதை அதே கதைதான்.

ஆனால், காட்சிகள் புதுசு என்று அதற்கு பொருள். சில தியேட்டர்களில் அந்த மாதிரி காட்சி முடிந்ததும் இனி அவ்வளவுதான் என்பதற்கு அடையாளமாக திரையின் ஓரத்தில் சிவப்பு விளக்கை மினுக் மினுக்கென்று எரிய விடுவார்கள். புரிந்து கொண்டு எழுந்து போய்விடுவார்கள். ரசிகனுக்கு நேரம் மிச்சம், தியேட்டர்காரர்களுக்கு மின்சார செலவு மிச்சம்.

எல்லா ஊர்களிலும் இதுபோன்ற படங்களுக்கென்று ஸ்பெஷல் தியேட்டர்கள் இருந்தன. சென்னையில், ஒரு காலத்தில் பரங்கிமலை ஜோதி, போரூர் பானு மாதிரி. இந்த மாதிரி படம் ஓடும் தியேட்டர்களுக்கு கிராமங்களில், சிறிய நகரங்களில் பம்மி பம்மித்தான் படத்துக்கு வருவார்கள்.

படம் முடிந்ததும் தெரிந்தவர்கள் யாராவது பார்த்து விடுவார்களோ என்று பயந்து தலையில் துண்டை போட்டு மூடிக் கொண்டுதான் தியேட்டரை விட்டு வெளியில் வருவார்கள். மது போதைக்கு, புகையிலை பழக்கத்துக்கு அடிமையாவது போல பலர் இதுபோன்ற படங்களுக்கு அடிமையாகிக் கிடந்தார்கள்.

இதுபோன்ற படங்களின் மூலம் பிரபலமானவர் ஷகிலா. இவருக்கு போட்டியாக வந்தவர் ரேஷ்மா. இருவருக்குமே தனித்தனி ரசிகர் வட்டாரம் இருந்தது. இவர்கள் நடித்த ஒரே படம் பலவிதமான தலைப்புகளில் திரும்பத் திரும்ப வரும்.

ஒரு கட்டத்தில் ஷகிலா படங்களின் வசூல் கேரள சூப்பர் ஸ்டார்களையே திகைக்க வைத்தது. இதனால் திட்டம்போட்டு ஷகிலா மலையாளப் படங்களிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டது வரலாறு.

பிற்காலத்தில் திரைப்படங்களில் முத்தக் காட்சிகளும், படுக்கையறைக் காட்சிகளும் வந்த பிறகு இதற்கென தனிப்படம் பார்க்கிற வழக்கம் குறைந்தது.

ஜேம்்ஸ் பாண்ட் படங்களில் பார்த்து பிரமித்த லிப்லாக் முத்தக்காட்சி ஆண்ட்ரியா காலத்தில் சர்வசாதாரணமாகிவிட்டது. ஷகிலா காமெடி நடிகையாக மாறிவிட்டார். ‘கபாலி’யில் ரஜினிக்கு மனைவியாக நடித்த ராதிகா ஆப்தே இந்தியில் நிர்வாணமாக நடிக்கிறார்.

உலகப் புகழ்பெற்ற நீலப்பட நடிகை சன்னி லியோன், இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத சக்தியாகிவிட்டார். லட்சக்கணக்கான நீலப் படங்கள் இப்போது ரசிகனின் உள்ளங்கைக்குள் ஆண்ட்ராய்ட் போன் வழியாக வந்து சேர்ந்து விட்டது. அவற்றை அவன் பார்த்து முடிக்கவே மூன்று ஆயுள் வேண்டும்.

(பிலிம் ஓட்டுவோம்)

பைம்பொழில் மீரான்