ஆர்.கே.நகரில் மாற்றம் நிச்சயம்!



நம்பிக்கையோடு சொல்கிறார் இனிகோ பிரபாகரன்

‘பிச்சுவா கத்தி’க்கு கிடைத்த பாராட்டுகளால் உற்சாகமாக ‘வீரய்யன்’ ரிலீஸுக்கு ரெடி ஆகியிருக்கிறார் இனிகோ பிரபாகரன். “எப்பவும் ஏன் சார் கிராமத்து லுக்கு?” என்று கேட்டால், “எனக்கு அப்படிதான் அமையுது. என்ன செய்ய, விரைவில் ஒரு மாற்றம் நிகழும்” என்று நம்பிக்கையோடு ஆரம்பிக்கிறார்.

“டைட்டிலே ‘வீரய்யன்’னு வீரமா இருக்கே? அரிவாளும் கையுமா படம் முழுக்க அலைவீங்களோ?”

“தஞ்சாவூர் பக்கம் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். அங்க வாழ்ந்த ஒரு மனிதரைப் பத்தின கதைதான். இந்தப் பேர் கூட, குலசாமி பெயரை வைப்பாங்களே அந்த ஒரு எண்ணம் கொடுக்கும். இந்தப் பேருக்கான காரணமும் படத்துல இருக்கும்.”

“படத்துலே உங்க கேரக்டர் பத்தி சொல்லுங்களேன்?”

“மனம் போன போக்குல போற இளைஞன். அவனுக்குன்னு ஒரு அங்கீகாரம் கிடையாது. எதைப்பத்தியும் கவலைப்படாதவன். ஆனால் அவனுக்கு ஒரு அங்கீகாரம் திடீர்னு கிடைச்சா அதை எப்படி பயன்படுத்துவான்.”

 “ஹீரோயின்?”

“புதுமுக நடிகை ஷைனி. பெங்களூர் பொண்ணு. ரொம்ப ஆர்வமான, டெடிகேஷனான பொண்ணு. ஒவ்வொரு சீன் முடிச்சுட்டும் கூட நான் கரெக்டா நடிச்சேனான்னு கேட்டுக்கிட்டே இருப்பாங்க.”

“எப்படி ‘வீரய்யன்’ உங்களை இம்ப்ரஸ் பண்ணுச்சு?”

“இயக்குநர் ஃபரீக். அவருக்கு இது முதல் படம்னு சொன்னாத்தான் தெரியும். அவ்வளவு நேர்த்தியா, முதிர்ச்சியா ஒவ்வொரு காட்சியையும் எடுத்திருக்கார். எனக்கு அவருடைய ஸ்க்ரிப்ட் படிச்ச உடனே ரொம்பப் பிடிச்சுப் போயிடுச்சு. எங்கயுமே க்ளிஷேக்கள் இல்லாமல், காமெடிக் காட்சிகள் கூட எதார்த்தமா இருக்கும். இதை என்னால ஸ்க்ரிப்ட் படிக்கும் போதே உணர முடிஞ்சது. அதுதான் முதல் காரணம்.”

“ஆடியன்ஸ்க்கு ‘வீரய்யன்’ என்னகொடுக்கப் போகுது?”

“எல்லாரும்  குடும்பத்துடன் பார்க்கலாம். நல்ல கதையா, எதார்த்தமான படமா இருக்கும்.  யாரையும் முகம் சுழிக்க வைக்காது. ஒரு நல்ல படம் பார்த்த உணர்வு  கொடுக்கும்.”“அப்பாடா இந்தப் படத்துலயாவது சிங்கிள் ஹீரோங்கிற ஃபீல் வந்துச்சா?”

“நான் ரெண்டு ஹீரோக்கள் கதைன்னாலும் ரொம்ப யோசிச்சு எனக்கான கேரக்டர் முக்கியத்துவம் இருந்தா மட்டுமே படத்தை ஏத்துப்பேன். இதுவரைக்கும் அப்படிதான் செய்திருக்கேன்னு நம்புறேன். சிங்கிளோ, டபுளோ அல்லது பல ஹீரோக்களோ நமக்கான ரோல் என்னங்கிறதுல நான் தெளிவா இருக்கேன். ஆனால் ‘வீரய்யன்’ சிங்கிள் ஹீரோ படம். அதிலும் கதை இன்னொரு நாயகனா நிற்கும்.”

“ஒரு ஹீரோ - பல ஹீரோக்கள் படம்; ப்ளஸ் - மைனஸ் என்ன?”

“ப்ளஸ் - மைனஸ் அப்படி சொல்லத் தெரியாது. ஆனால் சிங்கிள் ஹீரோக்களுடைய கதை நம்மள மட்டுமே சுத்தி நடக்கும். வெற்றியோ தோல்வியோ நமக்கு மட்டும்தான்.

அதே ஒரு ஹீரோவுக்கு மேல போகும்போது ஒவ்வொருத்தரும் அவங்கவங்க போர்ஷனை சரியா செய்தாகணும். இன்னொருத்தர் சரியா நடிச்சு நாம நடிக்கலைன்னாலும், இல்லை நாம நடிச்சு அவங்க சரியா செய்யலைன்னாலும் முழுப் படத்தையும் பாதிக்கும்.”
 “உங்க அடுத்த படங்கள் பத்தி நிச்சயம் ஒரு மாற்றமா இருக்கும்னு ஆரம்பத்துல சொன்னீங்களே?”

“ஆமாம். ‘ஆர்.கே.நகர்’னு அதிரடி டைட்டிலில் ஒரு படம். அரசியல் படமான்னு கேட்டுறாதீங்க. வெங்கட்பிரபு சார் மற்றும் பத்ரி தயாரிப்புல ‘வடகறி’ சரவணராஜ் இயக்கம். என்னுடைய மொத்த கெட்டப்பும் சேஞ்ச் பண்ணி நடிச்சிருக்கேன். பக்கா சிட்டி பையன். எனக்கு நடிக்க நிறைய வாய்ப்பு கொடுத்த படம்.

என்னுடைய கேரியர்ல நல்ல படமா இருக்கும்.  புது இனிகோவைப் பார்க்கலாம். டபுள் ஹீரோ படம். வைபவ் இன்னொரு ஹீரோ. அடுத்து ஒரு படம் ஒப்பந்தம் ஆகியிருக்கேன். இன்னும் சில படங்கள் கதைகள் கேட்டிருக்கேன். இவ்வளவு சீக்கிரம் அந்தப் படங்கள் பத்தி பேசினா இண்ட்ரஸ்டிங்கா இருக்காது!”

“இந்தக் காதல், கல்யாணம்.. இதெல்லாம் எப்போ?”

“காதலா, நீங்க வேற. எங்க நேரம் இருக்கு. கல்யாணம் நடக்கும்போது நடக்கட்டும். என்னைப் பிடிச்ச பொண்ணு, எனக்குப் பிடிச்ச பொண்ணு வந்த உடனே கல்யாணம்தான். ஆனால் இன்னும் கிடைக்கலை.”

“இப்போ திடீர் திடீர்னு யார் யாரோ வந்து படத்தையெல்லாம் தடை செய்யணும்னு கூப்பாடு போடுறாங்களே?”

“ஆஹா! மாட்டிவிடுறீங்களே? என்னைக் கேட்டா சினிமா கனவுப்பட்டறை. இதுல ஒரு இயக்குநர் எந்த அளவுக்கு வேணும்னாலும் சிந்திக்கலாம், கருத்து சொல்லலாம். இப்படிப்பட்ட கற்பனை சினிமாவுக்கே இவ்வளவு தடைகள் போட்டா சாதாரண மனுஷன் எப்படி வாய் திறப்பான். அப்புறம் என்ன நாம கருத்து சுதந்திரமான நாட்ல இருக்கோம். என்ன, ஒரு நல்ல ராகுல் காந்தியையே தமிழ்ல ட்வீட் போட வெச்சுட்டாங்க சந்தோஷமா இருக்கு.”

 “மாஸ் ஹீரோக்கள் ஆனாலே ஒவ்வொரு படமும் ரிலீஸ் ஆகும்போது கொஞ்சம் பயம் வருமே?”

 “ஒரு இலக்கை அடைய பல தடைகள், இலக்கை அடைஞ்சிட்டா இன்னொரு விதமான தடைகள். அவ்வளவுதான். பிரச்னை எல்லா கட்டத்துலயும் இருக்கு. நாம அதுக்கு ரெடியாங்கறதுதான் என்னுடைய நோக்கம்!”

- ஷாலினி நியூட்டன்