நிக்கிக்கு ஹோம்லி லுக்.. அனேகாவுக்கு கிளாமர் லக்!“என்னோட ஹீரோ காலேஜ் பாய். அவர் ஓர் திறமையான இன்டர்நெட் ஹேக்கரும்கூட. எதிர்பாராமல் அவர் சந்திக்க நேர்கிற ஒரு பிரச்சினையை எப்படி தன்னோட தொழில்நுட்ப அறிவால் ஹேண்டில் பண்றாரு என்பதை விறுவிறுப்பா சொல்லியிருக்கேன்” என்று ஆரம்பித்தார் இயக்குநர் காளீஸ். ‘கீ’தான் அவருக்கு முதல் படம்.

“பொதுவா சென்னைக்காரர்கள் சினிமாவில் ஜெயிப்பதில்லைன்னு சொல்றாங்களே?”
“நான் சென்னை பையன்தான். ஜெயிச்சி உங்க சென்டிமென்டை காலி பண்றேன். சினிமாவுக்கு மொழியோ, ஊரோ பொருட்டில்லை. திறமையானவர்கள் யாராக இருந்தாலும் வைத்துக் கொள்ளும். அண்ணா பல்கலையில் எம்சிஏ படிச்சேன். படிக்கிற சமயத்துல புரபசர்கள் பண்ற டார்ச்சரை வச்சு ஃபன்னா ஒரு ப்ளே பண்ணினேன்.

அதுக்கு நல்ல ரெஸ்பான்ஸ். அந்த சமயம்தான், சினிமா ஆசை மனசுக்குள்ள துளிர்விட்டுச்சு. எல்லாத்தையும் விட்டுட்டு, கோடம்பாக்கத்துக்கு வந்துட்டேன். ‘யாரடி நீ மோகினி’யில் மித்ரன் ஜவஹர்கிட்ட உதவி இயக்குனரா சேர்ந்தேன். அதுக்குப் பிறகு ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்துலேருந்து ‘மயக்கம் என்ன’ வரை செல்வராகவன் சார்கிட்ட ஒர்க் பண்ணினேன். 2013ல் ஒரு கதை பண்ணினேன். அதுதான் இப்போ ‘கீ’யா எடுக்கப்படுது...”

“2013ல் உருவாக்கிய கதையை நான்கு ஆண்டுகள் கழித்து இப்போதான் எடுத்துருக்கீங்க. ஏன் இந்த இடைவெளி?”
“கதை எழுதினதுமே ஜீவாதான் ஹீரோன்னு முடிவு பண்ணிட்டேன். உடனே ஜீவாவை சந்திச்சு சொல்லிட்டேன். அவருக்கும் கதை பிடிச்சிப்போச்சு. புரொடியூசர் ஒருத்தர் கிடைச்சு, படத்தை ஆரம்பிக்க இருந்தோம். திடீரென அவர் விலகிட்டார். அதுக்குப் பிறகு நிறைய புரொடியூசர்களிடம் இந்தக் கதை போச்சு.

அவங்க எல்லோரும் கேட்டது, இந்த மாதிரியெல்லாம் நடக்குமா? இதை எப்படி ஜனங்க ஏத்துக்குவாங்க? இதை எப்படி திரையில கொண்டு வரமுடியும்கிறதுதான். அவங்களுக்கு கதை மேல முழுமையா நம்பிக்கை வரல. கிட்டத்தட்ட ரெண்டு வருஷம் இந்தக் கதையோடு அலைஞ்சேன். இதுல இருக்கிற கமர்ஷியல் அம்சங்கள் நல்லா இருக்கு. ஆனா, படத்தோட முக்கியமான அந்தப் பிளாட்டை மாத்திடுங்கன்னு சொன்னாங்க. இந்தப் படமே அதுக்குத்தான். அதை எப்படி மாத்த முடியும்னு மறுத்துட்டேன். யாரும் தயாரிக்க முன்வரல.

முன்வந்தவங்களும் சில காரணங்களால ஷூட்டிங்கை தள்ளிப்போட்டபடி இருந்தாங்க. அப்போ நான் ஒரு முடிவுக்கு வந்தேன். கமர்ஷியல் வேல்யூவைத்தான் தயாரிப்பாளர்கள் எதிர்பார்க்கிறாங்க. அதனால பேசாம ஒரு காமெடி படம் பண்ணலாம்னு முடிவுக்கு வந்தேன். இந்தக் கதையை ஒதுக்கி வச்சிட்டு, காமெடி கதையும் பண்ண ஆரம்பிச்சேன்.

இதை தெரிஞ்சி, ஜீவா ஷாக் ஆனார். ஏன் பாஸ் இப்படி பண்றீங்க. கொஞ்சம் பொறுங்க. கண்டிப்பா அதே கதையை நாம பண்ணலாம்னு தைரியம் கொடுத்தார். இந்தக் கதை மேல எனக்கு எவ்வளவு நம்பிக்கை இருந்துச்சோ அதே அளவு நம்பிக்கையோடு இருந்தவர் ஜீவா. இந்தப் படம் டேக்ஆஃப் ஆக அவரும் முக்கிய காரணம். அதுக்குப் பிறகு தயாரிப்பாளர் கிடைச்சி, போன வருஷமே 80 சதவீத ஷூட்டிங் முடிச்சோம். பிறகு சில காரணங்களால ஷூட்டிங் தொடங்க முடியல. இப்போ முழுமை அடைஞ்சி, டிசம்பர்ல ரிலீசுக்கு தயாராயி–்ட்டோம்.”

“முதல் படம் பெரும் போராட்டமா அமைஞ்சிருக்கு. சினிமாவே வேணாம்னு சோர்ந்து போயிருக்கீங்களா?”
“அப்படி நினைச்சிருந்தா, ‘கீ’ படத்தை முடிச்சிருக்க முடியாது. கண்டிப்பா பெரும் போராட்டம்தான். தயாரிப்பாளர்கள் கொஞ்சம் பொறுத்துக்குங்கன்னு சொல்லும்போது, அங்கேயே நான் நின்றுவிடுவேன். நேரம், பணம், வாழ்க்கைன்னு எல்லாமே என்னைக் கடந்து போயிட்டே இருக்கும்.

திரும்ப அசிஸ்டென்ட் டைரக்டரா கூட சேர முடியாத சூழல். படம் பண்றேன்னு போனியே, பண்ணலியான்னு கேட்பாங்க. தயாரிப்பாளர்களும் முடியாதுன்னு சொல்லமாட்டாங்க. அதனால படம் தொடங்குமா, தொடங்காதான்னு தெரியாமலேயே காத்திருப்பேன். இப்படி அஞ்சு வருஷம் ஒரு ரூமுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தேன். ஆனா, எப்போ வந்தாலும் இந்தக் கதை ஜெயிக்கும்கிற நம்பிக்கையை மட்டும் இழக்கலை.”

“புளூ வேல் கேமை பின்னணியா வச்சி கதை பண்ணி இருக்கிறதா தகவல் வந்துச்சே?”
“அந்த மாதிரியான ஒரு விபரீத விஷயம்தான் படத்துல இருக்கு. ஆனா எந்த விளையாட்டையும் இதுல வைக்கல. ஏன்னா, 2013லேயே இந்தக் கதையை உருவாக்கிட்டேன். அப்பவே புளூ வேல் மாதிரியான ஒரு விஷயத்தைத்தான் படத்துல வச்சேன். அப்போ, இதுல எல்லாம் எப்படி சாத்தியம்னு கேட்டவங்க, இப்போ அட்வான்ஸா இந்த விஷயங்களை நான் சொல்லியிருக்கேன்னு ஒத்துக்கிறாங்க. இது ரெண்டு ஹேக்கர்ஸ் பற்றிய கதை. நல்லதுக்காக ஹேக் பண்ற ஒருத்தருக்கும், கெட்டதுக்காக ஹேக் பண்ற ஒருத்தருக்குமான மோதல்.”

“ஜீவாவோடு மோதுற அந்த வில்லன் யார்?”
“மலையாள நடிகர் பத்மசூர்யா. அங்கே ஹீரோவாகவும், கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாகவும் பண்ணிட்டு இருக்கார். இந்தப் படத்துக்குப் பிறகு கவனிக்கப்படுவார். நிக்கி கல்ராணிக்கு காலேஜ் கேர்ள் வேடம். ஹோம்லி லுக்லதான் வருவாங்க. தமிழ் மேல அதிகம் பற்றுள்ள ஒரு பொண்ணு. தூய தமிழ் பேசுற வித்தியாசமான பொண்ணு கேரக்டர். கிளாமர் ஏரியாவுக்காக அனேகா ஸ்ருதி இருக்காங்க. வில்லத்தனம் கலந்த கேரக்டர். ஆர்.ஜே.பாலாஜி, தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத், சுகாசினி நடிச்சிருக்காங்க.”

“2013ல் எழுதிய கதையை, இப்போ மாறியிருக்கிற டெக்னாலஜிக்கு ஏற்ப மாத்தியிருக்கீங்களா?”
“அதுக்கு அவசியம் ஏற்படல. ஏன்னா, நான் அதை எழுதும்போதே அட்வான்ஸாத்தான் யோசி்ச்சு எழுதி இருக்கேன். அதனாலதான் அப்போ பல பேர், இப்படி நடக்குமான்னு யோசிச்சாங்க. இப்போ அதை ஏத்துக்கிறதுக்கு காரணம், அந்த விஷயமெல்லாம் இப்போ சாத்தியம்னு தெரிய வந்திருக்கு. அதனால எந்த மாற்றமும் பண்ணல. இப்போ நடக்கிற மாற்றத்துக்கு என் கதை பொருந்தி வந்திருக்கு.”

“செல்வராகவனோட சிஷ்யன் நீங்க. அவரோட ஸ்டைல் ஆஃப் பிலிம் மேக்கிங்கை உங்களிடம் எதிர்பார்ப்பாங்களே?”
“கண்டிப்பா அவரோட பாணியில என் படம் இருக்காது. அவர் ஒரு லெஜண்ட். அவரைப் போல அவரால் மட்டும்தான் எடுக்க முடியும். அவரைப் போல படம் எடுக்கணும்கிறதுக்காக அவர்கிட்ட நான் ஒர்க் பண்ணல. அவரிடம் நான் தொழிலை கத்துக்கிட்டேன். அந்தத் தொழிலை என்னோட ஸ்டைல்ல கொடுத்தால்தான் நான் யாருங்கிறது ரசிகர்களுக்கு தெரியும். அவரை நான் காப்பி அடிக்க முடியாது.”

- ஜியா