சந்தானம் சும்மாவே இருக்க மாட்டார்!வைபவி சந்தாலியா நடித்த முதல் படமே ரிலீஸ் ஆகவில்லை. அதற்குள்ளாகவே நான்கைந்து படங்களில் கமிட் ஆகிவிட்டார். அவர் அறிமுகமாகும் ‘சர்வர் சுந்தரம்’ படத்தின் டீஸரும், ட்ரைலரும் கிளப்பியிருக்கும் எதிர்பார்ப்பு அப்படி. இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக கொஞ்சு தமிழ் பேச ஆரம்பித்திருக்கிறார். வைபவியுடன் பேசும் யாருமே ஐந்து நிமிடத்திலேயே வசியமாகி விடுவார்கள்.

“கேரளாவிலிருந்து தமிழுக்கு நடிகைகள் இறக்குமதி ஆவார்கள். உங்களை மராத்தியத்திலிருந்து அழைத்து வந்திருக்கிறார்களே?”
“மராத்தியில் ஏற்கனவே நடித்துக் கொண்டிருக்கிறேன். இருந்தாலும் எனக்கு தமிழ் மீதுதான் கண். ஏனெனில் இங்கிருந்துதான் இளையராஜாவும், ஏ.ஆர்.ரகுமானும் வந்தார்கள். ‘சர்வர் சுந்தரம்’ படத்தில் இயக்குநர் பால்கி மிகவும் பிரமாதமான கேரக்டர் கொடுத்திருக்கிறார்.

க்யூட் கேர்ளா வருவேன். ரொம்பவும் போல்டான கேரக்டர். எனக்கு சுந்தரத்தின் காதலி வேடம். ஓட்டல் மேனேஜ்மென்ட் ஸ்டூடண்ட்டான என்னுடைய கேரக்டர் பெயர் சஞ்சனா. ஒரு முதல் பட நாயகிக்கு இதை விட சிறப்பான படம் கிடைத்துவிடாது. எனக்கு மட்டுமில்ல, சந்தானம் சாருக்கும் அந்தப் படம் திருப்புமுனையாக இருக்கும். இதுக்கு அப்புறம் சந்தானம் சாரோட ரேஞ்சே வேறயா இருக்கப் போவுது.

தென்னிந்திய சினிமா மீது எனக்கு ரொம்ப மரியாதை உண்டு. இங்கே நல்ல கதைகளை படங்களாக்குகிறார்கள். படப்பிடிப்புத் தளங்களிலும் தமிழர்கள் மிகவும் கண்ணியமாக நடந்துகொள்கிறார்கள். தொழில்நுட்பரீதியாக ஹாலிவுட்டுக்கே சவால்விடக்கூடிய நல்ல கலைஞர்களை இங்கே காணமுடிகிறது.” “ரொம்ப ஐஸ் வைக்காதீங்க. ஏற்கனவே மழையில் சென்னை நனைஞ்ச கோழி மாதிரி வெடவெடத்துப் போயிருக்கு.

உங்க ஃபேமிலி பெரிய பிசினஸ் ஃபேமிலியாமே?”
“யெஸ். என்னுடைய அப்பா பிசினஸ்மேன். அவருடைய நிறுவனத்தின் மூலம் ஏராளமான பெண்கள் கைத்தொழில் கற்றுக் கொண்டுள்ளார்கள். மகளிர் சுய உதவிக் குழு டைப்புலே பெண்களுக்கு தன்னம்பிக்கை கொடுத்து தொழில் முனைவோர்களாக மாற்றியிருக்கிறார். அப்பாவின் வெற்றியில் அம்மாவுக்கும் பங்கு உண்டு. அதே சமயம் அம்மா மிகச் சிறந்த ஹோம் மேக்கர். என்னையும், என் அண்ணனையும் மிகச் சிறந்தவர்களாக வளர்த்தெடுத்திருக்கிறார்.

எங்கள் வீட்டில் இரண்டு அட்வகேட்ஸ் இருக்கிறார்கள். அது வேரு யாருமல்ல, நானும், அண்ணனும் பி.எல். முடித்துள்ளோம். என் குடும்பத்தை நினைக்கும் போதெல்லாம் இறைவனுக்கு நன்றி சொல்கிறேன். எங்கள் குடும்பத்தில் நான் தான் முதல் ஆளாக சினிமாவில் நடிக்க வந்துள்ளேன். என்னுடைய விருப்பத்துக்கு பெற்றோர் எப்போதும் தடையாக இருந்ததில்லை. இந்தக் குமாரி குமரி வரை வந்து நடிக்கிறேன் என்றால் அது என் பெற்றோர் கொடுக்கும் சப்போர்ட்டால் மட்டுமே சாத்தியம்.”

“முதல் படம் சந்தானத்தோடு ஜோடி சேர்ந்தீர்கள், ஓக்கே. அவருடைய அடுத்த படமான ‘சக்கப் போடு போடு ராஜா’விலும் நீங்களே நடிக்கறீங்களே?”
“ஹலோ. இப்போதான் ஃபீல்டுக்கு வந்திருக்கேன். அதுக்குள்ளே கிசுகிசுவெல்லாம் ஆரம்பிச்சிடாதீங்க. மீண்டும் சந்தானம் சார் ஜோடியாக இணைந்திருப்பதை பெருமையாகக் கருதுகிறேன். இயக்குநர் சேதுராமன் என் திறமை மீது நம்பிக்கை கொண்டு இந்த வாய்ப்பைக் கொடுத்திருக்கிறார்.

இது ரொமான்ஸ் மூவி. சிச்சுவேஷன் காமெடி பிரமாதமா வந்திருக்கு. சந்தானம் சார் கேரக்டர் பேர் பேண்டா. என்னுடைய கேரக்டர்  யாழினி. படத்துல பெரிய தாதாவின் தங்கையாக வர்றேன். என்னுடைய கேரக்டருக்கு பில்டப் எக்கச்சக்கமாக இருக்கும். பேண்டாவின் காதல் வலையில் மாட்டிக் கொள்ளும் காட்சிகள் சுவாரஸ்யமாக இருக்கும். இந்தப் படத்தில் விவேக் சாரோடு பணியாற்றியிருப்பது எனக்கு கிடைச்ச கவுரவம்.

காமெடியில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக்கொண்டிருக்கும் அவருடன் நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது. படத்துல மொத்தம் ஐந்து பாடல்கள். முதன் முறையாக சிம்பு சார் இசையமைத்திருக்கிறார். யுவன், அனிருத் போன்ற முன்னணி இசையமைப்பாளர்கள் பாடியுள்ளார்கள். ‘காதல் தேவதை’  என்ற பாடலை வைரமுத்து எழுதியுள்ளார். இப்படியொரு பலம் வாய்ந்த டெக்னிக்கல் டீம் நான் நடிக்கும் படத்தில் இணைந்திருப்பதை ஆசீர்வாதமாக நினைக்கிறேன்.”

“அடிக்கடி சந்தானம் சார், சந்தானம் சார்னு அவர் புகழ் பாடுறீங்க... அவரைப்பற்றி என்ன நினைக்கறீங்க?”
“ரொம்ப ஜாலியான மனிதர். காமெடி, சென்டிமென்ட், ரொமான்ஸ் என்று எந்தக் காட்சியாக இருந்தாலும் உடனே நவரசத்தை கொட்டி நடிக்க ஆரம்பித்துவிடுவார். அந்த மாதிரி எல்லாருக்கும் வராது. அது கடவுள் கொடுத்த வரம். சந்தானம் சார் செட்ல கொஞ்ச நேரம் சும்மாவே இருக்கமாட்டார். கேரவன் பக்கமே போகமாட்டார். தன் காட்சிகள் முடிந்தாலும் அடுத்த காட்சிக்காக தன்னை தயார் படுத்திக் கொள்வார்.

இரவு, பகல் பார்க்காத கடுமையான உழைப்பாளி. முதன் முதலாக தமிழில் நடிக்கும் போது எனக்கு தமிழ் சுத்தமாகத் தெரியாது. தமிழில் பேசும்போது புரிந்தும் புரியாத மாதிரி இங்கிலீஷில் அடிச்சிவிடுவேன். இப்போது மற்றவர்கள் பேசுவதை புரிந்து கொள்ள முடிகிறது. இப்போ உங்ககிட்ட பேசுற லெவலுக்கு தமிழ் கத்துக்கிட்டிருக்கேன். நான் தமிழ் பேசுவதற்கு சந்தானம் சார் உதவியாக இருந்தார். நடிப்பைக் குறித்தும் அவரிடமிருந்து நிறையக் கற்றுக்கொண்டேன்.”

“தமிழ்நாட்டைப் பிடிச்சிருக்கா?”
“என்னோட தாய்மொழி மராத்தி. அந்த மொழிக்கான, அங்கு வாழும் மனிதர்களின் பண்புகளை இங்கே தமிழிலும், தமிழர்களிடமும் பார்க்கிறேன். நான் படப்பிடிப்புக்கு வந்த முதல் நாளிலிருந்தே நல்ல வரவேற்பு கிடைச்சது. ஒட்டுமொத்த டீமும் என்னை பூ மாதிரி பார்த்துக் கொண்டார்கள். சாப்பாடு, தங்கும் வசதி என்று எதிலும் குறை வைக்கவில்லை. லாஸ்ட் டெக்னீஷியனிலிருந்து சீஃப் டெக்னீஷியன் வரை எல்லோரும் என்னை நேசித்தார்கள். படப்பிடிப்பில் இருக்கிறோம் என்ற ஃபீலிங் இல்லாமல் இருந்தது. எல்லோரும் தங்கள் குடும்ப உறுப்பினர் போல் பழகினார்கள்.

நான் கலந்துகொண்ட படங்களின் படப்பிடிப்பு குற்றாலம், தென்காசி போன்ற இடங்களில் நடந்ததால் பெரும்பாலான உணவு வகைகளில் தேங்காய் கலந்திருந்தது. அந்த டேஸ்ட் எனக்கு பிடித்திருந்தது. குற்றாலத்தில் படம் பிடிக்கும் போது தினமும் பிச்சு பரோட்டா, சிக்கன் சால்னாவை ஒரு வெட்டு வெட்டினேன். புளி சாதம், எலுமிச்சை சாதமும் பிடிக்கும்.”

“யாருடன் நடிக்க ஆசை?”
“நான் விக்ரம் சாரின் தீவிர ரசிகை. அவருடன் நடிக்கும் போது பிலிம் இன்ஸ்டிடியூட் போகாமலேயே நடிப்பை கற்றுக் கொள்ளலாம் என்று கருதுகிறேன். ‘அந்நியன்’ படத்தில் விக்ரம் சார் பின்னியெடுத்திருப்பார். அந்தப் படத்தைப் பார்த்த பிறகு ஷங்கர் சாரும் என் விஷ் லிஸ்ட்டில் இருக்கிறார். அப்புறம், மணிரத்னம் சார் டைரக்‌ஷனில் ஒரு படத்திலாவது நடிக்கணும்.”

“பிடிச்ச காமெடியன்?”
“சந்தானம். என்னுடைய ஹீரோ என்பதால் சொல்லவில்லை. அவர்தான் என்னுடைய ஆல் டைம் ஃபேவரைட்.”

“இந்த பதிலுக்காகத்தான் கேட்டோம். நெக்ஸ்ட்?”
“க்யூட் ஹீரோ கெளதம் கார்த்திக்கோடு ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் நடிக்கிறேன். ஒரு ஷெட்யூல் முடிஞ்சிருக்கு. அடுத்த ஷெட்யூலுக்கு பாங்காக் போறோம். இதில் அல்ட்ரா மாடர்ன் ரோல். இது தவிர தெலுங்கில் நடிகர் சாய்குமார் மகன் ஆதி ஹீரோவா நடிக்கிற படத்தில் நடிக்கறேன். இன்னும் ரெண்டு மூணு கமிட்மென்ட் இருக்கு. அதிருக்கட்டும், ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ன்னு டைட்டிலை சொல்லுறப்பவே எல்லாரும் இங்கே சிரிக்கிறாங்க. அதுக்கு என்ன அர்த்தம்?” “யம்மா தாயீ. ஆளை வுடு”

- சுரேஷ்ராஜா