கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை!இந்துஜா நாணம்

வேலூர் பெண்ணான இந்துஜா படிப்பைத் துறந்து, ‘மேயாத மான்’ மூலம் சினிமாவுக்குள் ஐக்கியமாகிவிட்டார். வைபவ்வின் தங்கையாக வந்து, தங்கச்சி சென்டிமென்ட் சாங்குக்கு இவர் போட்ட குத்துதான் இப்போது கோலிவுட்டின் வைரல் டாக். ‘பில்லா பாண்டி’, ‘மெர்க்குரி’ என்று  கைவசம் படங்களை வைத்திருக்கிறார். முதல் சந்திப்பிலேயே ஃப்ரெண்ட்லியாக பேசுவதுதான் இந்துஜாவின் ஸ்பெஷாலிட்டி. மழை விட்டிருந்த ஒரு மாலைவேளையில் அவருடனான சந்திப்பு நிகழ்ந்தது.

“சினிமாவுக்கு எப்படி வந்தீங்க?”
“சொந்த ஊர் வேலூர். பிறந்தது வளர்ந்தது எல்லாமே அங்குதான். அப்பா ரவிச்சந்திரன் பிசினஸ்மேன். அம்மா கீதா அரசாங்க அதிகாரி. இரண்டு தங்கைகள். ஒரு அண்ணன். படிப்பைப் பொறுத்தவரை நான் க்ளவர் ஸ்டூடண்ட். ஆனால் ப்ளஸ் ஒன் வந்த பிறகு கொஞ்சம் டல் அடிக்க ஆரம்பித்துவிட்டேன்.

வேலூரில் உள்ள பிரபல கல்லூரியில் எம்.எஸ். என்ஜினியரிங் சேர்ந்தேன். சினிமா மீது இருந்த தீவிர காதலால் மூன்றாம் ஆண்டிலேயே காலேஜ் டிராப் அவுட்டாயிட்டேன். அந்த சமயத்தில் காலேஜ் சேரவே எனக்கு விருப்பமில்லை. ஆனால் பெற்றோர் மனதை நோகடித்துவிட்டு சினிமாவுக்கு போக வேண்டுமா என்று யோசித்தேன். ஏன்னா, எங்கள் வீட்ல பிள்ளைகளை கெடுபிடியாக வளர்த்ததில்லை. எங்களுக்கான சுதந்திரத்தை பெற்றோர் அனுமதித்தார்கள். இரண்டு வருடம் கழித்து வீட்டிலேயே நடிக்க பர்மிஷன் கொடுத்தாங்க.

இப்போது நடிகையாக நல்ல பேர் வாங்கியிருந்தாலும் அம்மா அப்பாவுக்கு நான் டிகிரி வாங்கவில்லையே என்று ஆதங்கம் இப்போதும் இருக்கு. சினிமா எனக்கு ரொம்பப் பிடிக்கும். டான்ஸ், கல்லூரி ஆண்டு விழா எதுவாக இருந்தாலும் இந்துஜா இல்லாமல் இருக்காது. உண்மையைச் சொல்லப் போனால் எங்கள் வீட்டில் நான் பத்தாம் வகுப்பு படிக்கும் வரை டி.வி பார்க்கவே அனுமதிக்கவில்லை.

ரொம்ப லேட்டாகத் தான் டி.வி., சினிமாபார்க்க ஆரம்பித்தேன். உலகத்தில் அரசியல், அறிவியல் என்று புகழ்பெற பல துறைகள் இருக்கு. ஆனால் சினிமாவோட ரீச் அதுக்கும் மேல. ஒரே சமயத்துல பல லட்சம் மக்களை என்டர்டெயின் பண்ணலாம். சினிமாவைப் பற்றி யாராவது தவறாகப் பேசினால் எனக்கு கோபம் வந்துவிடும். ஐ லவ் சினிமா.”

“முதல் படமே தங்கச்சி ரோலா?”
“நோ... நோ... முதன் முதலாக ‘பில்லா பாண்டி’ படத்துக்காகத்தான் கேமரா முன்னாடி நின்றேன். ‘மேயாதமான்’ துள்ளிக்கொண்டு வெளிவந்துவிட்டது. சென்னை வந்ததும் தீவிரமாக சினிமா வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு நாள் கார்த்திக் சுப்புராஜ் சாரின் புரொடக்‌ஷன் ஹவுஸிலிருந்து ஆடிஷனுக்கான அழைப்பு வந்தது.

இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் என்னைப் பிடித்திருந்தது. ஆனால் கடைசியில் ‘நீங்கள் ஹீரோவுக்கு தங்கச்சி ரோல் பண்றீங்க’ என்றார்கள். ஆரம்பத்தில் அந்தப் பதிலைக் கேட்டு அப்படியே ஷாக் ஆயிட்டேன்.  ஒரு கட்டத்தில் அந்த வாய்ப்பை வேண்டாம் என்று சொன்னேன். ஆனால் இயக்குநர் ரத்னகுமார் கதையைக் கேட்டுவிட்டு முடிவு பண்ணச் சொன்னார். கதையில் எனக்கான ஸ்கோப் இருந்ததால் துணிச்சலாக ஏற்றுக்கொண்டேன்.”

“மெர்க்குரி?”
“நான் ‘மேயாத மான்’ படத்தில் நடிக்கும்போதே கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ‘மெர்க்குரி’ படத்தில் ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தது. கார்த்திக் சுப்புராஜ் டைரக்‌ஷனில் பணி புரிந்தது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. சென்சிபிள் டைரக்டர். அவர் செட்ல இருந்தால் செட் அமைதியாக இருக்கும். எல்லாமே சிஸ்டமெட்டிக்காக இருக்கும். மொத்தமே மூணு படம்தான் பண்ணியிருக்கிறார். அதிலேயே அவருக்கு இண்டஸ்ட்ரியில் நல்ல பெயர் இருக்கு. என்ன எடுக்கப் போகிறோம் என்பதில் தெளிவாக இருப்பார். எந்தக் காட்சி ஸ்கிரீன்ல வரப்போகுது, எந்தக் காட்சியை ரசிகர்கள் பாராட்டுவார்கள் என்பது அவருடன் வேலை பார்க்கும்போது எளிதாகத் தெரிந்துவிடும்.

ஹீரோ பிரபுதேவா. பெரிய நடிகர் மட்டுமில்ல, நல்ல இயக்குநராகவும் பெயர் எடுத்தவர். டைரக்டர் சொல்வதை அப்படியே செய்வார். அவரிடம் பெரிய மெனக்கெடல் இருக்காது. ஆனால் எல்லா சீனையும் சிங்கிள் டேக்கில் ஓ.கே பண்ணிவிடுவார். ஆரம்பத்தில் சக நடிகர், நடிகையாகத்தான் பழக ஆரம்பித்தோம். இப்போது எனக்கு நல்ல நண்பராகவும் மாறிவிட்டார். எப்போதும் ஜாலியாகப் பேசுவார். சீனியரான அவருடைய அட்வைஸ் வளரும் நடிகையான எனக்கு யூஸ்ஃபுல்லாக இருந்தது.

கேமராமேன் திரு சார் ஒர்க் பற்றி நான் சொல்லித் தெரியவேண்டுவதில்லை. அவருடைய கேமரா ஒர்க் பிரில்லியன்ட்டா இருக்கும். அவர் ஒர்க் பண்ணிய படங்களை ஒண்ணு விடாம பார்த்திருக்கிறேன். படத்தில் எனக்கு சேலஞ்சிங்கான ரோல். எனக்கு டயலாக் கிடையாது. எக்ஸ்பிரஷன், பாடிலேங்வேஜ் மட்டும்தான். ஒரு ஆர்ட்டிஸ்ட்டா இது மாதிரி ரோல் கிடைக்கணும்னா கொடுத்து வைத்திருக்க வேண்டும். பேசி நடித்து பெயர் வாங்குவதற்கும் பேசாமலேயே எக்ஸ்பிரஷன் மூலம் க்ளாப் வாங்குவதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. இந்தப் படத்தில் மூன்று தேசிய விருது பெற்ற கலைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களுடன் இணைந்து பணியாற்றியது உண்மையிலேயே மறக்க முடியாத அனுபவமாக இருந்தது.”

“பிடித்த நடிகர்?”
“சூப்பர் ஸ்டார்.”

“கனவு வேடம்?”
“குறிப்பிட்ட வேடத்தில் நடிக்க வேண்டும் என்ற விஷ் லிஸ்ட் எதுவும் இல்லை. எனக்கு ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது மாதிரி. அந்த வகையில் ரிஸ்க்கான எந்த ரோல் கிடைத்தாலும் அதை ஏற்று நடிக்க நான் ரெடி. ஒரு சீன்ல வந்தாலும் இந்துஜா கலக்கிட்டான்னு சொல்லணும். அந்த மாதிரி ரோல்களில் நடித்து பெயர் வாங்கணும்னு ஆசை.”

“உங்களுடைய ப்ளஸ், மைனஸ்?”
“நிஜ வாழ்க்கையில் செம ஜாலி டைப். வெரி ஃப்ரெண்ட்லி. அட்வென்ச்சர் பிடிக்கும். டான்ஸ், இசையில் ஆர்வம் அதிகம்.  எவ்வளவு புகழ் கிடைத்தாலும் நான் என்னுடைய இயல்பு நிலையிலிருந்து மாறவே மாட்டேன். ‘நீ நீயாக இரு’ என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. பணம், புகழ் என்னை எப்போதும் மாற்றாது. மைனஸ்னு சொல்வதற்கு பெரிதாக எதுவும் இல்லை.”

“டைரக்‌ஷன் பண்ணும் ஐடியா இருக்கா?”
 “எனக்கு நல்லா கதை எழுத வரும். ஆனால் டைரக்‌ஷன் பண்ணுமளவுக்கு அறிவு இல்லை.”

“கிளாமர்?”
“தியேட்டருக்கு வரும் ஆடியன்ஸை என்டர்டெயின் பண்ணவேண்டியது நடிகர், நடிகையோட பொறுப்பு. சினிமாவுக்கு நான் புதுசு. கிளாமர் ரோல் பண்ணுமளவுக்கு நான் இன்னும் பக்குவப்படவில்லை. கதைக்கு கிளாமர் அவசியமாக தேவைப்படும்போது அதைப் பற்றி யோசிப்பேன். மற்றபடி இந்தக் கேள்விக்கு கிளாமர் பண்ணுவேன் என்று ஒப்பனா பதில் சொன்னால், வீட்ல வெச்சி செஞ்சிடுவாங்க.”

“சினிமாவில் உங்களுக்கான அடையாளம் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?”
“நெம்பர் ஒன், நெம்பர் டூ போன்ற எண்களில் எனக்கு நம்பிக்கை இல்லை. சினிமாவில் பிஸியாக இருக்க வேண்டும். படிப்பைத் துறந்து நடிக்க வந்திருக்கிறேன். நடிகையாக ஜெயித்துக் காண்பிக்க வேண்டும். அந்த வகையில் என்னைச் சார்ந்தவர்கள் என்னுடைய வளர்ச்சியைப் பார்த்து பெருமிதம் அடையுமளவுக்கு உயர வேண்டும்.”

- சுரேஷ்ராஜா