வாகா ஒளிப்பதிவாளர் சதீஷ்டைட்டில்ஸ் டாக் - 40

பாகிஸ்தான் - இந்தியாவைப் பிரிக்கும் கோடுதான் ‘வாகா’. இப்படிப்பட்ட இடத்தில் பணி செய்யவேண்டும் என்பது இந்திய சினிமாவில் பணிபுரியும் ஒவ்வொரு ஒளிப்பதிவாளருக்குமே கனவு. எனக்கும் இருந்தது. ‘வாகா’ என்று டைட்டில் வைக்கப்பட்ட படத்திலேயே பணிபுரியும் வாய்ப்பு கடவுள் அருளால் கிடைத்தது. நான் பண்ணிய படங்கள் அனைத்தும் வித்தியாசமான லொகேஷன்களில் நடக்கும் கதைகளாகவே அமைந்துவிட்டன.

‘பேராண்மை’, ‘மீகாமன்’, ‘வாகா’ போன்ற படங்கள் அவ்வகை படங்கள்தான். சினிமாவுக்கு வருவதற்கு முன்பே எனக்கு வாகா பரிச்சயமான இடம். ஸ்கூல் படிக்கும்போது என்னுடைய குடும்பத்தோடு வாகாவுக்கு டூர் போயிருக்கிறேன். வாகா எல்லையில் தினந்தோறும் நடைபெறும் பரேட் பிரசித்தமானது.

வாகா என்பது இந்தியா-பாகிஸ்தானின் நுழைவுவாயில். அந்த இடத்தில் தினமும் காலை மாலை என் இருவேளை பரேட் அசெம்பிளிங் பண்ணுவார்கள். ஒரு முறை, மாலையில் நடக்கும் குளோஸிங் பரேடுக்கு சென்றிருந்தேன். நான் ஸ்கூல் படிக்கும் போது என்.சி.சி.யில் இருந்ததால் அந்த யூனிபார்மின் மகிமையும், சல்யூட் அடிப்பதின் நோக்கமும் தெரியும். ஆனால் என்.சி.சி போன்ற மாணவர்கள் பண்ணுவது நார்மல் மார்ச் பாஸ்ட்.

ஆனால் வாகா எல்லையில் இருக்கும் வீரர்கள் பண்ணும் மார்ச் பாஸ்ட் நமக்குள் இருக்கும் தேச பக்தியை வெளியே கொண்டுவருவது மாதிரி அவ்வளவு அற்புதமாக இருக்கும். வேடிக்கை பார்க்கும் மக்களுக்கே தாய் நாடு மீதான தேச பக்தி கொழுந்துவிட்டு எரியக் கூடியதாக இருக்கும். மெய் மட்டுமில்ல, நாடி நரம்பு என உச்சி முதல் உள்ளங்கால் வரை சிலிர்க்கும்.

காலை உயர்த்தி கைகளை அடித்து எழுப்பும் அந்த ஓசை பிரமிப்பாக இருக்கும். நம் இந்தியக் கொடியை கைகளில் ஏந்திப் பிடிக்கும்போது ‘இந்தியன்டா’ என்று தன்னிச்சையாக காலரைத்  தூக்கிவிட்டுக்கொள்ளச் செய்யும். அதே உணர்வு பாகிஸ்தானியருக்கும் இருக்கும் என்று நம்புகிறேன். இயக்குநர் ஜி.என்.ஆர்.குமரவேலன் ‘வாகா’ கதை பற்றி சொன்னதும் கரும்பு தின்னக் கூலியா என்பது மாதிரி உடனே கமிட்டானேன். அவர் கதை சொல்லும்போதே ஏற்கனவே நான் வாகாவில் கண்ட காட்சிகள் கண்முன் விரிந்தது.  வாகா படத்துக்காக எங்கள் டீம் நிறைய களப்பணிகளை செய்தது.

அது மிகவும் சென்சிட்டிவான பகுதி. நம் வீட்டுக்கு எப்படி ஒரு காம்பவுண்ட் சுவர் எழுப்பி எல்லையை வரையறுக்கிறோமோ அதுபோல் இரு தேசங்கள் தங்களுக்கான எல்லையை வாகாவில் வேலியை அமைத்து எல்லைகளை பாதுகாத்து வருகிறார்கள்.  இங்கிருந்து பார்க்கும்போது கம்பி வேலிதான் நமக்கு தெரியும். ஆனால் வாகா எல்லையில் வசிக்கும் இரு நாட்டவருக்கும் அந்த வேலிக்குப் பின் இருக்கும் அரசியலும், வாழ்க்கையும் தெரியும். வேலியைத் தாண்டி இப்படியும் அப்படியும் போக முடியாது.

மிகவும் கவனமாக இருக்கவேண்டும். தப்பித்தவறி வேலியைத் தாண்டினால் அதற்கான விளைவுகளை அனுபவிக்க வேண்டிய சூழலை தவிர்க்க முடியாது. வாகாவுக்கு போனபோது நடந்த ஒரு சம்பவத்தை சொல்ல விரும்புகிறேன். லொகேஷன் பார்ப்பதற்காக குதிரையில் சவாரி செய்தேன். சவாரி முடிந்ததும் குதிரைக்காரரிடம் சவாரிக்கான பணத்துடன் டிப்ஸும் சேர்த்து கொடுத்தேன். ஆனால் அந்தக் குதிரைக்காரர் தனக்கான பணத்தை மட்டும் எடுத்துக்கொண்டு டிப்ஸை என்னிடமே திருப்பிக் கொடுத்ததோடு, ஒரு வார்த்தை சொன்னார். அது என்னை திகைப்பில் ஆழ்த்தியது.

டிப்ஸ் வாங்குவதற்கு இது இந்தியா அல்ல என்று அவர் சொன்ன பதிலைக் கேட்டு ஆடிப்போயிட்டேன். இத்தனைக்கும் நான் இருந்தது இந்திய எல்லைக்குள்ளான பகுதிதான்.  டிப்ஸ் வாங்காமல் இருப்பது நல்ல செயல் என்பது வேறு விஷயம். ஆனால் அங்கிருப்பவர்களின் அந்த மனநிலைதான் என்னை யோசிக்க வைத்தது. நான் கவனித்த வரை காஷ்மீரில் இருக்கும் பெரும்பாலான மக்கள் இன்றளவும் தாங்கள் இந்தியரா அல்லது வேறு நாட்டவரா என்கிற குழப்பத்துடன்தான் இருக்கிறார்கள்.

இந்தியாவிலேயே காஷ்மீர் மிகவும் அழகான இடம். ஆருவேலி, பெல்காம் இரண்டு ஊர்களும் காஷ்மீரில் பார்க்க வேண்டிய மிகவும் முக்கியமான டூரிஸ்ட் பகுதி. அந்த மாநிலத்துக்கு வருமானத்தை ஈட்டித்தருவதும் அந்த இரண்டு ஊர்கள்தான். காஷ்மீரில் இருநாடுகளுக்கு இடையேயான பதட்டம் இல்லையென்றால், அதைவிட அழகான பகுதி உலகில் வேறெங்குமே இல்லை என்று சொல்லக்கூடிய அளவுக்கு இயற்கை எழில் கொழிக்கிறது.

வாகா எல்லையான காஷ்மீரில் வசிக்கும் மக்கள் அனைவரும் பழகுவதற்கு இனிமையான வர்கள். ஆறுமாதம் சம்பாதித்து சேமித்து வைக்கிறார்கள். அடுத்த ஆறுமாத குளிர்காலத்தில் சேமிப்பை வைத்து வண்டி ஓட்டுகிறார்கள். ஆருவேலி என்ற இடம். பெல்காமிலிருந்து முப்பது கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. சுற்றிலும் பனி படந்த மலைகள் பரவசத்தில் ஆழ்த்தும்.

குளிர்காலத்தில் அங்கிருக்கும் வீடுகள் மீது பனிப் போர்வை போர்த்தப்பட்டிருக்கும். பனி படர்ந்த அந்த நாட்களில் அவ்வூர் மக்கள் நான்கு மாதங்கள் தங்கள் சொந்த இடத்தில் இருக்கமாட்டார்கள். அடிவாரமாகிய பெல்காமுக்கு ஷிப்ட்டாகிவிடுகிறார்கள். அங்கு ஸ்நோஃபால்ஸ் குறைவாக இருக்கும்.

டூரிஸ்டுகள் மட்டுமே அவர்கள் வாழ்வாதாரம். வேறு வருமானம் இல்லாதது கொடுமை. ஆனால் அவர்கள் நல்லவர்கள். அடுத்தவர்களின் உடமைகளுக்கு ஆசைப்படுவதில்லை. கிவ் அண்ட் டேக் பாலிஸியோடு வாழ்கிறார்கள். அங்கிருப்பவர்களின் மிகப் பெரிய கேள்வியே நாம் யார் கையில் இருக்கிறோம் என்பதுதான். அங்கிருப்பவர்களில் சிலர் ராணுவத்துக்கு ஸ்பையாகவும் இருக்கிறார்கள். சிலர் தீவிரவாதிகளுக்கு ஸ்பையாக இருக்கிறார்கள். அப்படிப்பட்ட கருப்பு ஆடுகளை அடையாளம் கண்டு வாழ்வதே பெரும் சவால்.

என்னுடைய குடும்பத்தை காஷ்மீருக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பது என் விருப்பம். ஆனால் அதைப் பற்றி பேசினாலேயே, ஐயோ காஷ்மீரா வேண்டாம் என்கிறார்கள். ஆனால் அங்கு இருக்கும் மனிதர்கள், அவர்களின் வாழ்வியலைப் பார்க்கும்போது அப்படிச் சொல்ல மனம் வராது. கேரளாவை கடவுளின் சொந்த தேசம் என்பார்கள். காஷ்மீரை கடவுளின் சொர்க்கம் எனலாம்.  

தொகுப்பு:சுரேஷ்ராஜா
(தொடரும்)