நடிகரான மேஜிக் கலைஞர்!



‘மெர்சல்’ படத்தோடு ரிலீஸானாலும் ரசிகர்களிடம் பரவலாக ரீச் ஆன படம் ‘மேயாத மான்’. அந்தப் படத்தில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற காட்சி என்றால், மருத்துவமனையில் ஹீரோவும், அவரது நண்பரும் சண்டைபோடும்போது, கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் இடையே வந்து சமரசம் செய்யும் காட்சிதான். ஒட்டுமொத்த திரையரங்கையே சிரிப்பு சத்தத்தால் அதிரவைத்த அந்தக் காட்சியில் கிறிஸ்தவ பாதிரியாக நடித்தவர் டாக்டர் மேஜிக் சரவணகுமார்.

மேஜிக் கலைஞரும், பேச்சாளருமாக இருக்கும் டாக்டர் மேஜிக் சரவணகுமார், தனது பேச்சாற்றலுக்காக டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். மேஜிக் ஷோ, சினிமா நிகழ்ச்சி தொகுப்பாளர் என்று இருந்த இவர், தற்போது பிஸியான நடிகராக மாறியுள்ளார். ‘‘மேஜிக் மேனாக எனக்கு ஓரளவுக்கு புகழ் கிடைத்திருக்கிறது. ஆனால் சினிமா மீது எல்லோரும் போல் எனக்கும் காதல் உண்டு.

‘ஜாக்சன் துரை’, ‘வெள்ளிக்கிழமை 13ம் தேதி’ உள்பட நாலைந்து படங்களில் ஏற்கனவே நடித்துள்ளேன். இப்போது ‘மேயாத மான்’ படத்தில் பாதிரியார் கேரக்டருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. ‘மேயாத மான்’ எனக்கு திருப்புமுனை கொடுத்த படம். வாய்ப்பளித்த தயாரிப்பாளர் கார்த்திக் சுப்புராஜ், இயக்குநர் ரத்னகுமாருக்கு நன்றி.

‘மேயாத மான்’ படத்துக்குப் பிறகு நிறைய அழைப்புகள் வருகிறது. இப்போது கருணாகரன் ஹீரோவாக நடிக்கும் ‘பொதுநலன் கருதி’ படத்தில் கருணாகரனுக்கு தந்தையாக நடித்துள்ளேன். இந்தப் படத்தின் ரஷ் காட்சிகளைப் பார்த்துவிட்டு இயக்குநர் தினேஷ் தான் இயக்கும் ‘மெழுகு’ படத்தில் மிகவும் முக்கியமான வேடத்தை கொடுத்துள்ளார். விஷாலின் ‘சண்டக்கோழி 2’, ‘மீண்டும் ‘வா அருகில் வா’ உள்ளிட்ட பல படங்களில் வித்தியாசமான வேடங்கள் கிடைத்துள்ளது’’ என்று உற்சாகமாகப் பேசும் சரவணகுமார், தன்னுடைய சம்பளத்தின் ஒரு பகுதியை கடவுளுக்கு காணிக்கையாகக் கொடுத்துவிடுகிறாராம்.

- எஸ்