வித்தியாசமான படங்களை தொடர்ந்து கொடுப்பேன்!



தயாரிப்பாளர் ஜேஎஸ்கே உறுதி

அர்த்தமுள்ள சமூக பார்வையுடன் கூடிய படங்களையே தயாரித்து வருகிறார் ஜே.எஸ்.கே. சதீஷ்குமார். ‘தரமணி’க்காக விமர்சகர்களின் பாராட்டுமழையில் நனைந்து கொண்டிருப்பவரை மழைபெய்து ஓய்ந்த ஒரு மாலைவேளையில் சந்தித்தோம்.“தரமணி?”

“எல்லாரும் பாராட்டித் தள்ளுறாங்க. உருப்படியா இந்தத் துறையிலே ஏதோ செஞ்சிக்கிட்டிருக்கோம் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கு. இன்னிக்கு அமெரிக்கால கூட தரமணின்னா பிரபலம். காரணம், ஐடி கம்பெனிகள்தான். கண்டிப்பா இந்த பேக்டிராப்ல தான் இந்த படக் கதை சொல்லப்படுது. ஆனா, நாம சொல்ல வர்ற யதார்த்தம் வேற. அது ஆண் - பெண் உறவு பற்றியது.

இன்னிக்கு இருக்கிற இளைஞர், இளைஞிகளோட வாழ்க்கை முறையை இதுல காட்டியிருக்கோம். ‘அவள் அப்படித்தான்’ படம் வந்தப்போ ஒருவித பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த படம் தற்போதைய வாழ்க்கை முறை, தற்போதைய டெக்னாலஜியில் வந்திருந்தால் எப்படி இருக்கும்? அதுதான் தரமணி.”“நா.முத்துக்குமாருடைய கடைசி படம் இல்லையா?”

“நான் தயாரித்த ‘தங்க மீன்கள்’ படத்திலும் அவர் பாடல்கள் எழுதியிருந்தார். ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ பாடலுக்காக தேசிய விருதும் அவருக்கு கிடைத்தது. ராம் - யுவன் சங்கர் ராஜா - நா.முத்துக்குமார் காம்பினேஷனில் இது மூன்றாவது படம். அவரது வரிகள் இதிலும் வாழ்க்கையின் வலிகளையும் சமூகத்தின் அவலங்களையும் பதிவு செய்திருக்கிறது. இந்த பட பாடல்களுக்காகவும் அவருக்கு தேசிய விருது கிடைக்கும் என்பதே எனது
நம்பிக்கை.”“இயக்குநர் ராம்?”

“ஆக்சுவலா ‘தங்க மீன்கள்’ படத்தை அவர் உருவாக்கும்போதே, திரும்பவும் நாங்கள் பணியாற்றுவது உறுதியாகிவிட்டது. நான் இதுவரை பன்னிரெண்டு டைரக்டர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறேன். பாலா உடனும் பணியாற்றி இருக்கிறேன். ராம், வித்தியாசமான கதை சொல்லி இந்தப் படம் டேக் ஆஃப் ஆனதற்கு ராம் கதை சொன்ன விதமே காரணம்.

காரணம், அவர் எந்த மாதிரி கதை சொல்வாரோ அதேபோல் படம் எடுத்தும் காட்டுவார். தேசிய விருது வென்ற இயக்குநர் என்பதையெல்லாம் சிறிதும் தலையில் ஏற்றாதவர். தயாரிப்பாளருக்கு எது நல்லது என்பதை அறிந்தவர். அவரிடம் தைரியமாக எந்தக் கருத்தையும் சொல்லலாம். அது படத்துக்கு சரியாக இருந்தால் ஏற்றுக்கொள்வார். தவறாக இருக்கும்பட்சத்தில் புரிய வைப்பார்.

ஒரு ஷெட்யூல் முடிந்ததும் அடுத்த ஷெட்யூலுக்கு ஒரு தேதி முடிவு செய்திருப்போம். பணம் இருந்தால் அடுத்த ஷெட்யூல் வைத்துக்கொள்வோம். இல்லையென்றால் பணம் வரும்போதே ஷெட்யூலை முடிவு செய்யலாம் என தயாரிப்பாளரிடம் கூறக்கூடிய டைரக்டர் அவர். அதற்கேற்ப மள மளவென தனது திட்டங்களையும் மாற்றக் கூடியவர்.” “இந்தப் படத்துக்கு புதுமுக ஹீரோ ஏன்?”

“இதே கேள்வியை நான் ராமிடம் கேட்டேன். ‘இந்தக் கதையுடன் சிறிதும் நான் சமரசம் செய்துகொள்ள மாட்டேன். மார்க்கெட்டில் இருக்கும் ஹீரோக்களை நாடினால், இந்த இடத்தில் ஒரு பாடல் வேண்டும் என்பார்கள். இந்தக் காட்சியை இப்படி மாற்றலாம் என்பார்கள். ஆண்ட்ரியாவிடம் ஹீரோ அடி வாங்கும் காட்சி ஒன்று படத்தில் இருக்கிறது.

அதில் நடிக்க ஒப்புக்கொள்ளமாட்டார்கள். குறிப்பாக எந்த இமேஜும் இல்லாத ஒரு நடிகர் இதற்கு தேவைப்படுகிறார். இந்த பையன் சரியாக இருப்பார்’ என்று நான் ஏற்றுக்கொள்ளக்கூடிய விளக்கத்தை சொல்லி, என்னை சம்மதிக்க வைத்தார். அந்த நபர்தான் பட ஹீரோ வசந்த் ரவி. இவர் டாக்டர். இந்த படம் மூலம் ஆக்டர் ஆகிறார். நல்ல ஹீரோவை அறிமுகப்படுத்திய பெருமையை எனக்கு
கொடுத்திருக்கிறார் ராம்.”

“ஹீரோயின்கள்?”
“ஆண்ட்ரியாவுடன் அஞ்சலியும் நடித்துள்ளார். முழுப்படமும் ஆண்ட்ரியாவின் தோளில்தான் பயணிக்கிறது. வழக்கமாக ஹீரோயின்களுக்கு அதிக நாள் கால்ஷீட் இருக்கும்போது, எப்போதுதான் இவரது காட்சிகள் எடுத்து முடிப்போமோ என்று கூட தோன்றும். அதற்கு அவர்கள் தரும் டார்ச்சர் ஒரு காரணமாக இருக்கும்.

ஆனால் ஆண்ட்ரியா அதற்கு எதிர்மாறாக நடந்துகொண்டார். நாங்கள் கூட எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவர் அந்த அளவுக்கு படத்துக்கு ஒத்துழைப்பு தந்தார். சாலைகளில் காட்சிகளை படமாக்கும்போது கேரவன் வேண்டும் என்று கூட கேட்டதில்லை. மற்ற ஆர்ட்டிஸ்ட்டுகளுடன் சேர்ந்து அவரும் ஒரு ஓரத்தில் நாற்காலியில் அமர்ந்திருப்பார். படத்திலும் அவர் ஆங்கிலோ இந்தியன் கேர்ள் வேடம் ஏற்றுள்ளார். இந்த வேடத்தை அவரைத் தவிர யாரும் சிறப்பாக செய்வார்களா என்று தெரியாது.

அந்த கேரக்டருடன் வாழ்ந்திருக்கிறார். அஞ்சலிக்கு முக்கிய வேடம். இடைவேளைக்கு முன்பும் பிறகும் முக்கிய காட்சிகளில் வருவார். ஒரே ஒரு போன் கால்தான் ராம் செய்தார். மறுநாள் தனது வேறு பட ஷூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டு நடிக்க வந்துவிட்டார். கதை கூட கேட்கவில்லை. காரணம், அறிமுகப்படுத்திய இயக்குனர் மீது அவர் வைத்திருந்த மரியாதை. அவரும் இரவில் ஷூட்டிங் இருந்தாலும் விடிய விடிய நடித்து கொடுத்தார். எந்த தொந்தரவும் அவர் தரப்பிலிருந்து வந்ததில்லை.”

“திடீர்னு நடிகர் ஆயிட்டீங்களே?”
“இதைப்பத்தி அதிகமா பேச விரும்பலை. ‘தரமணி’யிலே நான் நல்லா நடிச்சிருக்கேன்னு இயக்குநர்கள் நெனைச்சாங்கன்னா, என்னைத் தொடர்ந்து நடிக்க வைப்பாங்க. தயாரிப்பாளர் என்பதால், எனக்கு ஒரு கேரக்டர் கொடுத்தே ஆகணும்னு யாரையும் வற்புறுத்தமாட்டேன்.”
“சென்சாரோடு ஏன் மோதல்?”

“மோதினோம்னு சொல்ல முடியாது. உரிமைக்குரல் எழுப்பினோம். இந்தப் படத்தில் ஒரு காட்சியிலும் ஆபாசம் இருக்காது. படத்தில் சொல்லப்படும் கான்செப்ட் ஆண் - பெண் உறவு பற்றியது. அதாவது இன்றைய மாடர்ன் உலக வாழ்க்கையை பற்றியது என்பதால் சில வசனங்களை மியூட் பண்ண சொன்னார்கள். ஒப்புக்கொண்டோம். ஆனால் பெண் மது குடிக்கிறார் என்பதற்காக ‘ஏ’ சான்றிதழ் தருவோம் என்றதுதான் சகிக்க முடியவில்லை.

ஆண் மது குடிக்கலாம், பெண் குடிக்கக் கூடாது என்கிறார்களா? மது என்றாலே கெட்டது என்றாகிவிட்ட பிறகு யார் குடித்தாலும் தவறுதானே. ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள சமத்துவத்தை பற்றி பேசுகிற படத்தில் பெண் மது குடிக்கிறாள் என்பதற்காகவே ‘ஏ’ சான்றிதழ் தருகிறீர்கள் என்றால் அதற்காக போராடமாட்டோம் என ஒட்டுமொத்த பட டீமும் முடிவு செய்தோம். அதனாலேயே நாங்கள் மறு தணிக்கைக்கு கூட போகவில்லை. ‘ஏ’ சான்றிதழை ஏற்றுக்கொண்டோம்.”

“கலாச்சார சீரழிவு என சில அமைப்புகள் எதிர்க்க வாய்ப்பு இருக்கிறதே?”
“சமூகத்தில் நல்லதும் நடக்கிறது, கெட்டதும் நடக்கிறது. ஒருபக்க பார்வையுடனேயே எல்லாவற்றையும் பார்த்து, நல்லதை மட்டுமே காட்டிக் கொண்டு இருக்க முடியாதல்லவா? அப்பாட்டமான விஷயங்கள் பகிரங்கமாக நடக்கிறது. அதையெல்லாம் பார்த்து கண் மூடிக்கொண்டு இருந்துவிட முடியுமா? யதார்த்தத்தை பதிவு செய்ய வேண்டியது படைப்பாளியின் பொறுப்புதான்.

இந்தப் படத்தில் கலாசாரத்துக்கு எதிரான எந்தக் காட்சியோ வசனமோ இல்லை. நிஜத்தில் நடப்பது படத்தில் இருக்கிறது. அவ்வளவுதான்.”
“வித்தியாசமான கதைக்களங்களையே தேர்வு செய்கிறீர்கள். இந்த ஆர்வம் வந்தது எப்படி?”“நல்ல சினிமாவை தர வேண்டும் என்ற ஆசைதான். நல்ல சினிமாவை பார்த்து பழகியவன், நல்ல சினிமாவை கொண்டாடுபவன், தான் மட்டும் வெறும் வியாபார சினிமாவையே தர வேண்டும் என நினைத்தால் எப்படி? நல்ல சினிமா மூலமும் வியாபாரம் செய்யமுடியும் என்பதை திரையுலகிற்கு காட்ட வேண்டும்.

அதன் மூலம் நிறைய தயாரிப்பாளர்கள் நல்ல படங்களை தர முன் வர வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். அடுத்து எனது தயாரிப்பில் வெளியாகும் ‘அண்டாவ காணோம்’ படமும் ஒரு கிராமத்தில் நடக்கும் யதார்த்தமான விஷயத்தை பதிவு செய்யும் படம். பெண் கேரக்டருக்கு முக்கியத்துவம் தந்து உருவாகியுள்ள படம்.

‘புரியாத புதிர்’, லவ் திரில்லர் கதை. விஜய் சேதுபதியின் சிறந்த படங்களில் இதுவும் முக்கியமானதாக இருக்கும். ‘மம்மி சேவ் மி’ என்ற ஹாரர் படத்தையும் தயாரிக்கிறேன். புதியவர் லோகித் இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம் என 3 மொழிகளில் இப்படம் உருவாகிறது. பிரியங்கா திரிவேதி ஹீரோயின்.”

“பக்கா மாஸ் மசாலா படத்தை உங்களிடமிருந்து எதிர்பார்க்க முடியாதா?”
“ஏன் அப்படி கேட்குறீங்க? ‘வா டீல்’ படம் அந்த வகையறா தான். நல்ல படங்கள் எல்லா ஜானரிலும் இருக்கிறது. அருண் விஜய் நடிக்கும் இந்த படம், பக்கா கமர்ஷியல் படமாக இருந்தாலும் நல்ல படமாக இருக்கும்.”

- ஜியா