பொதுவாக எம்மனசு தங்கம்



போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம்

ஊர் ஜனங்களுக்கு நல்லது செய்து நல்ல பெயர் வாங்க நினைக்கும் விளம்பரப் போட்டி ஹீரோ உதயநிதிக்கும், வில்லன் (!) பார்த்திபனுக்கும்.முதன்முறையாக கிராமத்து இளைஞன் வேடம் உதயநிதிக்கு. படம் முழுக்க பின்னி பெடல் எடுக்கிறார்.

கூலிங் கிளாஸ், கலர் சட்டை என்று கலர்ஃபுல்லாக காதலிப்பது, நக்கல் நாயகன் பார்த்திபனுக்கு டிசைன் டிசைனாக டஃப் பைட் கொடுப்பது என்று நிறைவாக செய்திருக்கிறார். அப்பாவியான அவரது முகத்தோற்றம் சென்டிமென்ட் ஏரியாக்களில் மட்டும் லைட்டாக டல்லடிக்கிறது.

நிவேதா பெத்துராஜுக்கு கிராமத்து பைங்கிளி வேடம். பாவாடை தாவணியில் மங்கலகரமாக இருக்கிறார். நம்மூர் இளசுகளின் அடுத்த சில மாத கால கனவுகளுக்கு இவர்தான் தீனி.பார்த்திபன் வழக்கம்போல பட்டாசு. நக்கல், நையாண்டியில் சிகரம் தொடுகிறார். வில்லத்தனத்தையும் விட்டு வைக்காமல் சிக்ஸர் மேல் சிக்ஸராக அடிக்கிறார்.

சூரியின் காமெடி அடைமழையாக இல்லாமல் ஆங்காங்கே சிறுதூறலாக நின்றுவிடுகிறது. இருந்தாலும் வாய்விட்டு சிரிக்க வைக்கிறார். பார்த்திபனின் அல்லக்கையாக மயில்சாமி டகுல் விடுகிறார்.  ரமா, ஜி.எம்.சுந்தர் என அனைவரும் அவரவருக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

இமான் இசையில் ‘சும்மா இருக்கிறது ஈசியில்லை’, அம்மணியே’, ‘சிங்கக் குட்டி’ உள்பட அனைத்துப் பாடல்களும் தாளம் போட வைக்கிறது. பின்னணி இசையும் அருமை. ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியெம் கைவண்ணத்தில் காட்சிகள் வண்ணமயம். திருவிழாவுக்கு சென்று வந்த ஃபீலிங்கை கொடுத்திருக்கிறார்.

ஊருக்கு நல்லவராகவும் உள்ளத்தில் கெட்டவராகவும் பார்த்திபன் கேரக்டரை வடிவமைத்தது உள்பட சில இடங்களில் சபாஷ் வாங்குகிறார் இயக்குநர் தளபதி பிரபு. இயக்குனர் பொன்ராமின் உதவியாளர் என்பதால் அவரைப் போன்றே மசாலா கதையை தேர்ந்தெடுத்து தன் வெற்றியை உறுதிப்படுத்தியிருக்கிறார். இன்னும் கொஞ்சம் வலுவான காமெடி டிராக் அமைந்திருந்தால் இந்த தங்கம், வைரமாகவே மின்னியிருக்கும் என்பதில் சந்தேகம் எதுவுமில்லை.