வேலையில்லா பட்டதாரி 2



பணிப்போர்!

கட்டுமானப்பணியில் கொடிகட்டிப்பறக்கும் ஒரு பெண் தொழிலதிபருக்கும் , அதே துறையில் படிப்படியாக முன்னேற தவிக்கும் ஒரு இளைஞனுக்கும் இடையே நடக்கும் ‘பணி’ப்போர்தான் கதை.படம் முழுக்க புகுந்து விளையாடுகிறார் தனுஷ். மனைவி அமலாபாலிடம் அவமானப்படுவது, அப்பா சமுத்திரக்கனியிடம் ஆலோசனை பெற்று மூக்கு உடைபடுவது, கஜோலிடம் அடங்கிப்போகாத தன்னம்பிக்கை என ரவுண்டு கட்டி கலக்குகிறார்.

 “அங்க இருக்கறது காசு, அது எப்ப வேணாலும் கரைஞ்சிடும். இங்க இருக்கறது மாஸ்’’, ‘‘புலிக்கு வாலா இருக்கறதைவிட பூனைக்கு தலையா இருந்துட்டுப்போறேன்’’ என்கிற வசனங்கள் மூலம் வசனகர்த்தா தனுஷ் கைதட்டல் வாங்குகிறார்.

கஜோல் கம்பீரமான கதாபாத்திரத்தில் மிரட்டியிருக்கிறார். ஸ்டைலான நடையும், திமிர் கலந்த பேச்சுமாக பிடிவாதக்காரியாக பிரமாதப்படுத்தியிருக்கிறார்.  அமலாபால் ஒப்பனையில்லாத முகத்துடன் சிறப்பாக நடித்திருக்கிறார். குடும்பப்பொறுப்புள்ள பெண்ணாகவும், கணவன் தனுஷை அவமானப்படுத்தும் அதே நேரத்தில் அவ்வப்போது பாசம் காட்டுவது என நெகிழவைக்கிறார்.

மிகைப்படுத்தாத நடிப்பால் மனதில் நிற்கிறார் பி.சமுத்திரக்கனி. மகன் தனுஷ் முன்னேற வேண்டும் என்கிற அவரது அக்கறை  தந்தைப்பாசத்துக்கு நல்ல உதாரணம். தனுஷும் நண்பர்கள் சொந்த நிறுவனம் தொடங்குவதற்கு தனது சேமிப்பையெல்லாம் அள்ளிக்கொடுக்கும் நட்பு பாராட்டும் கதாபாத்திரத்தில் விவேக் வழக்கம்போல வெளுத்து வாங்குகிறார்.

மாய பிம்பம் வடிவில் வரும் அம்மா சரண்யா பொன்வண்ணன் தாய்ப்பாசத்தில் உருக வைக்கிறார். ஜி.எம்.குமார், சரவண சுப்பையா, செல் முருகன் பாலாஜி மோகன், ரீத்து வர்மா உள்ளிட்ட கதாபாத்திரங்களும் மனதில் நிற்கிறார்கள்.

அனல் அரசுவின் சண்டைக்காட்சியில் நிஜமாகவே அனல் பறக்கிறது. ஷான் ரோல்டன் இசையில் தனுஷ் எழுதிய ‘இறைவனை தந்த இறைவியே’, ‘நடடா ராஜா’, ‘உச்சத்துல கத்துறேனே நானும்’, ‘தூரம் நில்லு மோதாதே’ பாடல்கள் கதைக்கேற்ற மெட்டுக்கள்.

சமீர் தாஹீர் செய்திருக்கும் ஒளிப்பதிவு, படத்தின் ரிச்னஸ்க்கு உதவுகிறது.  பிரசன்னாவின்  படத்தொகுப்பு  அலுப்பில்லா அனுபவத்தை வழங்குகிறது. பகுதி-1க்கு சற்றும் குறைவில்லாமல், நிறைவான பகுதி-2ஐ படைத்திருக்கிறார் இயக்குநர் சௌந்தர்யா ரஜினிகாந்த்.