வனமகன் சண்முகராஜன்



டைட்டில்ஸ் டாக் 30

‘வனமகன்’ படத்தில் நேர்மறையான கேரக்டரில் நடித்தேன். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அந்தப் படத்தில் பழங்குடி மக்களிடையே அருகி வரக்கூடிய வாழ்க்கை முறை, இயற்கை யுடனா நெருக்கம், வனத்தின் மீது அவர்களுக்கு இருக்கும் மதிப்பீடு, நம்பிக்கை போன்ற விஷயங்கள் நம்மிடமிருந்து எப்படி வேறுபடுகிறது, அவர்களால் எப்படி இயல்பாக இருக்க முடிகிறது என்பதைப் பற்றி படம் பிடித்து காண்பித்தது.

அந்தப் படத்துக்காக கிட்டத்தட்ட பதினெழு நாட்கள் தலக்கோணம் பகுதியில் படப்பிடிப்பு நடந்தது. அப்பகுதி முழுக்க வனத்தை தவிர வேறொன்றுமில்லை.மனிதனுக்கு வனத்தை பாதுகாக்கும் உணர்வு எப்போது தோன்றுகிறதோ, அப்போதுதான் அவன் மனிதனாக வாழ்கிறான். இயற்கையோடு இணைந்து வாழ்வதுதான் மனிதவாழ்க்கை. நம்மாழ்வார் ஐயா போன்றவர்கள் அதைத்தான் முன் வைத்தார்கள். இயற்கை விவசாயம் என்ற பெயரில் பெரும் வனத்தை உருவாக்குவதுதான் அவர்களின் நோக்கமாக இருந்தது.

நம்மாழ்வார் ஐயாவின் குருக்களில் ஒருவர் மசானபு ஃபுகோகா. ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மாபெரும் விவசாயி. அவர் எழுதிய ‘ஒற்றை வைக்கோல் புரட்சி’ (The One Straw Revolution) என்ற புத்தகம் உலக புகழ் பெற்றது.மசானபு என்ன சொல்கிறார் என்றால் நீங்கள் நிலத்தை உழ வேண்டிய அவசியமே இல்லை.

நிலம் பூராவும் வைக்கோலை பரப்பி வைத்துவிட்டாலே அதில் மண்புழுக்கள் உள்பட பல உயிரினங்கள் வாழும். அந்த உயிரினங்கள் மூலம் நிலமும் பண்படுத்தப்படும். நிலத்துக்கு வளமும் சேரும். ஆத்மார்த்தமாக ஏர்கலப்பையை கையில் ஏந்தி விவசாயம் பண்ணும் போதுதான் ஒரு விவசாயின் வாழ்வில் வசந்தத்தை வரவழைக்கிறது என்று சொல்லியிருப்பார்.

அதுமட்டுமல்ல, இயற்கை ஒரு தரிசனம் என்பார். இப்போதுள்ள இயந்திரத்தனமான வாழ்க்கையில் பொதுநலம் இல்லாமல் போய்விட்டது. எங்கும் எல்லாவற்றிலும் சுயநலம் பெருகிவிட்டது. இந்த நிலைக்கு காரணம் எதிர்காலத்தைப் பற்றிய தரிசனம் இல்லாத வாழ்க்கை முறைதான். அவர் இயற்கையை தரிசனம் என்று அழைக்க காரணம் இயற்கையோடு சேர்ந்து மனிதன் வாழ வேண்டும் என்பதுதான்.

எனக்கு இந்த எண்ணங்கள் எனக்குள் அதிகமாக ஒலித்துக்கொண்டிருக்கும் போதுதான் என் மகன் கபிலனை இயற்கை சூழல் அமைந்த ஒரு பள்ளியில் சேர்க்க ஆசைப்பட்டேன். குறிஞ்சி கபிலர் குறுந்தொகை யில் அழகான பாடல்களை எழுதியிருப்பார். அவர் நினைவாக என் மகனுக்கு பெயர் சூட்டினேன். கிருஷ்ணமூர்த்தி ஐயா தத்துவத்தின் அடிப்படையில் இயங்கக்கூடிய பள்ளிகள் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் இருக்கிறது.

அப்படி நான் தேடி கண்டுபிடித்த பள்ளிக்கூடம் தான் சோலை. கொடைக்கானல் மலைப் பகுதியில் அந்தப் பள்ளிக்கூடம் பரந்துவிரிந்து கிடக்கிறது. சோலை என்று அவர்கள் சும்மா பெயர் வைக்கவில்லை. நூறு ஏக்கர் காட்டை வாங்கி ஒரு இங்கிலாந்துக்காரர் ஐம்பது பேருக்காக பள்ளிக்கூடம் நடத்துகிறார்.

பொதுவாக இடம் விட்டு இடம் மாறும் போது பிள்ளைகள் ஹோம் சிக் நிலைக்கு தள்ளப்படுவதுண்டு. என் மகனுக்கு இருக்கிற பிரச்சினையே வேறு மாதிரி. போன் பண்ணும் போது, “அப்பா ஹாஸ்டல் பக்கத்துலேயே யானை, காட்டெருமை இருக்குப்பா. பயமா இருக்குப்பா” என்று சொல்லுவான்.
யானையைப் பற்றி பேசும் போது ஜெயமோகன் எழுதிய ‘யானை டாக்டர்’ என்ற கதை நினைவுக்கு வருகிறது.

மிருகங்களை மிருகம் என்று அந்நியப்படுத்தக்கூடாது. மனிதர்களிடம் பழகுவதைவிட நேர்மையான உயிரினத்திடம் பழகுகிறோம் என்று சிந்தனையோடு பழக வேண்டும் என்று என் மகனுக்கு சொல்லியிருக்கிறேன். நான் சின்ன வயதில் கிராமத்தில் பெற்ற அனுபவங்களை அந்தக் காட்டில் இருக்கும் ‘சோலை’ பள்ளிக்கூடம் கொடுக்கும் என்ற நம்பிக்கை இருக்கு.

அதுமட்டுமில்ல, இப்போது என்னுடைய வேலைகளையும் இயற்கையோடு இணைந்து செயலாற்றி வருகிறேன். அதற்காக தென்மாவட்டங்களில் உள்ள நாடக நடிகர்களை ஒருங்கிணைத்து வருகிறேன். அந்த நாடக நடிகர்களின் வரலாற்றை படிக்கும் போது சுமார் முப்பது வருடத்துக்கு முன் அவர்கள் காடு ஆறு மாதம், நாடு ஆறு மாதம் என்று சொல்லி இயற்கை விவசாயம் பண்ணியிருக்கிறார்கள்.

அந்த இயற்கை விவசாயத்தோடு சேர்த்து ஆறு மாத காலத்துக்கு நாடகம் போட்டிருக்கிறார்கள். வாழ்வாதார பிரச்சனை, வறுமை போன்ற எந்த பிரச்சனைகளும் இல்லாமல் வாழ்ந்திருக்கிறார்கள். அந்த இயற்கை விவசாயம் கையை விட்டு போனதால் அவர்கள் நாடகம் போடுவதும் சிரமமான காரியமாக மாறிவிட்டது.

அடிப்படையில் ஒரு கலைஞன் மேடையில் யதார்த்தமா நடிக்கணும்னா அவன் இயற்கையோடு தொடர்புள்ளவனாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட கலைஞர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் நானும் நண்பர் ஜான் சுரேஷும் சேர்ந்து ஒரு முடிவு பண்ணினோம். என்னுடைய நண்பர் வேளாண் அறிஞர். நான் நாடகம், சினிமா என்று பல தளங்களில் இயங்கி வருகிறேன்.

இரண்டு பேரும் சேர்ந்து, விவசாயத்தையும் நடிப்பையும் ஒருங்கிணைக்கும் விதத்தில் PerFormer என்ற அமைப்பை தொடங்கியிருக்கோம். உங்களுடன் பகிர்ந்துகொண்ட இந்த விஷயங்கள் என்னுடைய தனிப்பட்ட அனுபவம் கிடையாது. நிறைய நண்பர்கள் இந்த கான்செப்ட்ல இயங்கி வருகிறார்கள். நானும் இயற்கை விவசாயத்துக்கு மாறிவிட்டேன்.

இது இந்த காலகட்டத்துக்கு ரொம்ப அவசியமானது. வனமகன் என்பவன் அப்பழக்கற்றவனாக வாழக் காரணம் அவன் இயற்கையோடு சேர்ந்து வாழ்வதால்மட்டும்தான் சாத்தியமாகிறது. அதை நோக்கியே நம் பயணம் இருக்க வேண்டும்.

தொகுப்பு: சுரேஷ்ராஜா

(தொடரும்)