இயக்குநர்கள் ஏன் ஹீரோவாகிறோம்? புதுமுக இயக்குநர் விளக்கம்!



“இந்த உலகத்தில் முடியாதது என்று எதுவுமில்லை. உன்னாலும் முடியும் என்னாலும் முடியும் என்பதுதான் ‘உன்னால் என்னால்’ படத்தோட சாரம்சம்’’ என்று டைட்டிலுக்கு விளக்கம் கொடுத்து பேச ஆரம்பித்தார் இயக்குநர் ஏ.ஆர்.ஜெயகிருஷ்ணா.

“கதை?”“மூன்று இளைஞர்கள் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக சென்னைக்கு வருகிறார்கள். இங்கே வேற மாதிரி பிரச்சினைகள். அதிலிருந்து அவர்கள் எப்படி வெளியே வருகிறார்கள்,  குடும்பம் காப்பாற்றப்பட்டதா என்பதை விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்லியிருக்கிறேன். கேட்குறதுக்கு சீரியஸா இருந்தாலும் கலகலப்புக்கும், ஜாலிக்கும் பஞ்சமிருக்காது.”

“புதுசா என்ன சொல்லப் போறீங்க?”
“இதுவரை உலக சினிமா எதிலும் வராத ஒரு புது விஷயத்தை சொல்லப்போறேன். இன்னிக்கு வாழ்க்கைன்னா என்னென்னனு தெரியாமல் பலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வாழும் முறையே முழுவதும் மாறிவிட்டது. நம்முடைய கலாச்சாரம், பண்பாடை தாண்டி வேறு ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இது நம்முடைய வாழ்க்கை அல்ல என்பதை சொல்லும் படம்தான் இது.

இந்த அவசர உலகத்தில் ஒருவரை கீழே தள்ளிவிட்டுத்தான் மேலே வர நினைக்கிறார்கள். பணத்துக்காக, புகழுக்காக சந்தர்ப்பவாதிகளாக மாறிவிடுகிறார்கள். சூழ்நிலையை காரணம் காட்டி லைஃப் ஸ்டைலை மாற்றிக் கொள்கிறார்கள். பணத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற மனோபாவத்துக்கு மக்கள் வந்துவிட்டார்கள். வாழ்க்கைன்னா என்ன என்பதை இந்தப் படத்தின் மூலம் சொல்ல முயற்சி செய்திருக்கிறேன். அதற்கான தீர்வும் எல்லோரும் ஏற்றுக் கொள்கிற மாதிரியும் இருக்கும்.”

“நீங்கதான் ஹீரோவா?”
“ஏன் சார் நான் ஹீரோவா நடிக்கக்கூடாதா? இந்தக் கதையை இப்போது தயாரிக்கும் ராஜேந்திரன் சுப்பையா உள்பட எட்டுப் பேரிடம் சொன்னேன். எல்லாரும் நான் ஹீரோவா நடிப்பதில் ஆட்சேபம் தெரிவிக்கலை. இதில் என்னுடன் சேர்ந்து உமேஷ், ஜெகாவும் ஹீரோவாக நடிக்கிறார்கள்.நானே நடிகனாக மாறியதற்கு காரணமும் இருக்கிறது.

மார்க்கெட் இருக்கிற நடிகர்களிடம் கால்ஷீட் கேட்டுப் போனால் ஆயிரம் கேள்வி கேட்கிறார்கள். நிறைய விஷயங்களில் சந்தேகப்படுகிறார்கள். இந்தக் கதையை நிறைய ஹீரோக்களிடம் எடுத்து சென்றேன். அவமானம்தான் மிஞ்சியது.

 ஒரு இயக்குநர் தயாரிப்பாளரை ரெடி பண்ணிவிட்டு ஹீரோவிடம் போனால் இவரால் படம் எடுக்க முடியுமா என்று கிராஸ் செக் பண்ணுகிறார்கள். அந்த மாதிரி சூழலில் நாம் ஏன் அவர்களை வைத்து படம் பண்ண வேண்டும் என்ற நிலைக்கு நிறைய இயக்குநர்கள் தள்ளப்படுகிறார்கள். அதன் விளைவுதான் என்னைப் போன்ற இயக்குநர்கள் நடிக்க ஆரம்பித்துவிடுகிறோம்.”

“ஹீரோயின்?”
ஹீரோயின் என்று ஒருமையில் சொல்லாதீங்க பாஸ். படத்துல மூன்று ஹீரோயின்கள். மொத்தம் அறுபது பேரிடம் ஆடிஷன் பண்ணினேன். அதில் செலக்ட்டானவர்கள்தான் லுப்னா, நிகாரிகா, சஹானா. மூவருக்கும் சினிமா அனுபவம் உண்டு.

எனக்கு ஜோடியாக லுப்னா பண்றாங்க. லுப்னாவுக்கு பாலிவுட் படங்களில் நடிக்க வேண்டும் என்பது லட்சியம். அவரைப் பொறுத்தவரை க்ளாமர் அவருக்கு பொருட்டே இல்லை. ஆபீஸுக்கு வரும் போது முழுங்கால் மேலுக்குதான் ட்ரஸ் இருந்தது. ஆனால் கதைக்கு அப்படி தேவைப்படவில்லை. அதனால் அடக்கி வாசிக்க சொன்னேன்.”“படத்துல வேற யாரெல்லாம் இருக்கிறார்கள்?”

“ராஜேஷ், சோனியா அகர்வால் இருவரும்தான் இந்தக் கதையை தாங்கி நிற்கும் சுமை தாங்கிகள். ராஜேஷ் மிகப் பெரிய ரோல் பண்ணியிருக்கிறார். கேரக்டரும் வித்தியாசமா இருக்கும். அவரை மையமாக வைத்துதான் கதையே நகரும். அவர் கேரியரில் இது புதுமையாக இருக்கும். ‘தர்மதுரை’யில் அவருடைய கேரக்டர் பேசப்பட்டது போல் இந்தக் கேரக்டரும் பேசப்படும்.

சோனியா அகர்வால் வில்லியா வர்றாங்க. நல்ல கதையாக இருந்தால்தான் நடிப்பேன் என்று கண்டிஷன் போட்டுவிட்டுதான் கதையை கேட்டார். மூன்று மணி நேரம் நடித்து காண்பித்து நான் கதை சொன்ன விதம் அவருக்கு பிடித்திருந்தது.

தன்னுடைய கேரக்டர் நெகடிவ்வாக இருந்தாலும் கதை மீதுள்ள நம்பிக்கையில் நடிக்க சம்மதித்தார். படப்பிடிப்பில் அவருடைய அப்ரோச் எனக்கு பிடித்திருந்தது. பெரிய நடிகை என்று பந்தா இல்லாமல் நடந்துகொண்டார். ‘படையப்பா’ நீலம்பாரி மாதிரி சோனியா அகர்வாலின் கேரக்டர் வித்தியாசமா இருக்கும்.”
“டெக்னீஷியன்ஸ் பற்றி?”

“கிச்சாஸின் ஒளிப்பதிவுக்கு நான் அடிமை. அவர் ஒளிப்பதிவு பண்ணிய ‘என் ராசாவின் மனசிலே’ போன்ற படங்களின் விஷுவல்ஸ் இப்போதும் மனசுல நிக்குது. என்னைப் பொறுத்தவரை கிச்சாஸ் ஆகச் சிறந்த கேமராமேன். எப்போதும் தன்னை இயக்குநரின் ஒளிப்பதிவாளராகதான் வெளிப்படுத்துவார். ஒரு இயக்குநர் என்ன கற்பனை செய்துவைத்திருக்கிறாரோ அதை அப்படியே இம்மி பிசகாமல் எடுத்துக் கொடுப்பதில் கில்லாடி. எங்களுக்குள் சில சமயம் வாக்குவாதமும் நடக்கும். அது படத்தை மெருகேற்றுவதற்காக நடக்கும்.

முகமது ரிஸ்வான் மியூசிக். மலையாளத்தில் சில படங்கள் பண்ணியிருக்கிறார். ஐந்து பாடல்களும் வெரைட்டியா வந்திருக்கு. பாடல்களுக்கு பெரிசா ரீச் கிடைக்கும். பாடலாசிரியர்கள் தமிழமுதன், கருணாகரன், பொன்சீமான் மூவரும் சிச்சுவேஷன் சொன்னதும் ஆன் தி ஸ்பாட்டில் எழுதிக் கொடுத்தார்கள். பில்லா ஜெகன் கை வண்ணத்தில் பைட் சீன்ஸ் யதார்த்தமாக இருக்கும்.

நான் கொஞ்சம் விவரமான ஆளு. விஜய், அஜித் மாதிரி நான் சண்டை போட்டால் யார் பார்ப்பாங்க. ராஜு சுந்தரம் உதவியாளர் கெளசல்யா குருவுக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் பிரமாதமா நடனக் காட்சிகளை அமைத்துக் கொடுத்தார்.”
“உங்க படத்தைப் பத்தியே பேசிக்கிட்டிருக்கீங்க. உங்களைப் பத்தி சொல்லுங்களேன்!”

“சொந்த ஊர் ஈரோடு அருகில் உள்ள சென்னிமலை. சினிமாவில் என்னுடைய இன்ஸ்பிரேஷன் பாலுமகேந்திரா சார். முதன் முதலாக அவரை சந்தித்தபோது படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்காமல் உங்கள் முன்னாடி நடித்து காண்பிக்க வேண்டும் என்று சொன்னேன். அவரும் என்னை ஒரு நடிகனாகத்தான் பார்த்தார். அசிஸ்டென்ட் டைரக்டராக பார்க்கவில்லை. யோசித்து பார்த்துவிட்டு மறுநாள் ஆபீஸ் வர சொன்னார்.

அடுத்தநாள் அவரே அவருடைய டேபிள், சேரை ஓரமாக ஒதுக்கிவைத்துவிட்டு நடிக்க சொன்னார். என் நடிப்பு மீது அவருக்கு திருப்தி வந்ததால் உனக்கு லீட் கேரக்டர் தருகிறேன் என்றார். தொடர்பில் இருங்கள் என்று சொன்னார். ஆனால் சந்தர்ப்பங்கள் அமையாததால் அவர் டைரக்‌ஷனில் நடிக்க முடியவில்லை. அதன் பிறகு உதவி இயக்குநராக கஸ்தூரி ராஜா, கவின் பாலா ஆகியோரிடம் வேலை பார்த்தேன்.”

- சுரேஷ்ராஜா