கண்ல காச காட்டப்பா எம்.எஸ்.பாஸ்கர்



டைட்டில்ஸ் டாக் 15

(சென்ற இதழ் தொடர்ச்சி)


காசுக்காக நான் கஷ்டப்பட்ட சம்பவங்கள் நிறைய உண்டு. வசதியான குடும்பத்தில்தான் பிறந்தேன். ஆனாலும், சுயமா உழைச்சு முன்னேறணும்னு தாய் தகப்பன் கிட்டே காசு பணம் கேட்காம நானா கஷ்டப்பட்டு சம்பாதிச்சுதான் இந்த நிலைமைக்கு முன்னேறியிருக்கேன். அதனால்தான் ராத்திரி படுத்தா எனக்கு நல்லா தூக்கம் வருது.

சின்ன வயசுலேயே சினிமான்னா உசுரு. சினிமா பார்க்க காசு கொடுன்னு வீட்டுல கேட்க முடியாது. அதனால என்ன பண்ணுவேன்னா எங்க வீட்டுல தூக்கிப் போடுற பழைய பேப்பரை எல்லாம் தனியா ஸ்டோர் பண்ணி வெச்சிப்பேன். அப்பப்போ வேஸ்ட் பேப்பர் கடையிலே அதைப் போட்டு அதுலே வர்ற காசுலே படம் பார்ப்பேன். அப்போவெல்லாம் ஒரு டிக்கெட்டின் விலை முப்பத்தியொன்பது பைசாதான்.

இன்னிக்கு நான் பணக்காரன். ஆனாலும் ஒரு பத்து ரூபாய் நோட்டை பொக்கிஷம் மாதிரி நினைச்சேன். இருபத்தஞ்சி வருஷத்துக்கு முன்னாடி அண்ணன் பாரதிராஜாவிடம் ஒரு புதுவருஷத்துக்கு ஆசி வாங்கினேன். அப்போ அண்ணன் ஒரு பத்து ரூபா நோட்டில் அவர் கையெழுத்து போட்டுக் கொடுத்தாரு. அதைத்தான் நான் என்னோட சொத்தா அப்போ எப்பவும் பாக்கெட்டில் வெச்சிருப்பேன்.

ஒருமுறை வேலை விஷயமா பிராட்வே வரை போயிருந்தேன். அப்போ என் வீடு ராயப்பேட்டையில் இருந்தது. கையிலே இருந்த எல்லா காசும் செலவாயிடிச்சி. பாரதிராஜா கொடுத்த பத்து ரூபாய் மட்டும்தான் இருக்கு. அதை பஸ்சுக்கோ ஆட்டோக்கோ கொடுத்து சில்லறை மாத்திக்க மனசில்லாம நடந்தே வீட்டுக்கு வர்றேன்.

அப்போ ராயப்பேட்டை ஹாஸ்பிடல்கிட்டே எலும்பும் தோலுமா ஒரு ஆளு. அவன் கூட நாலு வயசு பையன். என்னை மடக்கிப் பேசினாரு.“அய்யா, சொந்த ஊரு செய்யாறு. தெரிஞ்சவங்க மூலமா ரோடு போடுற வேலைக்கு வந்தேன். தேடி வந்தவங்களை கண்டுபுடிக்க முடியலை. நடந்து நடந்து காலு தேஞ்சிப்போச்சு. எனக்கு ஒண்ணும் வேணாம். என் குழந்தைக்கு மட்டும் ஏதாவது சாப்பிட வாங்கித் தாங்க”ன்னு கண்ணீரோடு கேட்டாரு.

ஒரு விநாடி கூட யோசிக்காம பாரதிராஜா அண்ணன் கொடுத்த பத்து ரூபாயை கொடுத்து அந்த குழந்தைக்கு ரெண்டு பன்னும், டீயும் வாங்கிக் கொடுத்தேன். அண்ணன் கொடுத்த காசை விட்டுட்டோமேன்னு ஒரு கணம் கூட எனக்கு தோணலை. ஏன்னா, ‘இதை மாதிரி ஒரு குழந்தையோட பசி தீர்க்க கேட்டாங்க. நீங்க கொடுத்ததாச்சேன்னு நான் கொடுக்கவே இல்லை’ன்னு பெருமையா பாரதிராஜாகிட்டே சொன்னேன்னா, ஓங்கி ஓர் அறை விடுவாரு.

காசை சக்கரம்னு சொல்லுவாரு என்.எஸ்.கே. அது சுத்திக்கிட்டேதான் இருக்கணும். நிறைய சம்பாதிக்கிறவன், பணமில்லாதவனுக்கு காசு கொடுத்து கை தூக்கி விடணும். அவன் அதே மாதிரி நாலு பேரை முன்னேத்துவான்.

இப்படி ஒருத்தருக்கு ஒருத்தர் கை கொடுத்து உதவிக்கிட்டா அதுதான் சமூகம்.
இப்போ கைநிறைய சம்பளம் வாங்குறேன். ஆனா, முதன்முதலா வாங்கின இருவத்தஞ்சு ரூபாய்தான் இருவத்தஞ்சு கோடி சம்பாதிச்ச சந்தோஷத்தை கொடுத்தது.

‘சிட்டுக்குருவி’ன்னு ஒரு படம். என்னோட அக்கா ஹேமமாலினி அந்தப் படத்துக்கு டப்பிங் பேசினாங்க. நானும் கூட துணைக்கு போயிருந்தேன். அப்போ ஒரு கேரக்டருக்கு பேசவேண்டிய டப்பிங் ஆர்ட்டிஸ்ட் வரலை. பொன்னு வெக்கிற இடத்துலே பூ வைக்கிற மாதிரி என்னை பேச வெச்சிட்டாங்க.

முதன் முறையா அப்போதான் பேசுறேன். லிப் மூவ்மென்டுக்கு ஏத்தமாதிரி ரொம்ப பக்காவா ஒரே டேக்கில் பேசி ஓக்கே வாங்கிட்டேன். எல்லாருக்கும் ஆச்சரியம். அங்கே இருந்த புரொடக்‌ஷன் மேனேஜர் என்னை கட்டிப் புடிச்சி வாழ்த்தி சம்பளம் கொடுத்தாரு. அதுதான் நான் முதன்முதலா சினிமாவில் வாங்கின சம்பளம்.

இப்போ நிறைவான வாழ்க்கை எனக்கு கிடைச்சிருக்கு. பணத்தை ஒட்டுமொத்தமா வெறுத்துட்டேன்னு சொல்ல முடியாது. வாழ்றதுக்கு அதுவும் தேவையாதானே இருக்கு. இப்போ இறைவன் மீது நாட்டம் அதிகமா இருக்கு. நாலு பேருக்கு உதவி புண்ணியம் சேர்த்துக்கணும்னு முதிர்ச்சி வந்திருக்கு.ஆனா என்னோட அடுத்த தலைமுறைக்கு எனக்கு இல்லாத முதிர்ச்சி இருக்கு.

ஏதாவது சொத்து பத்து வாங்குறப்போ என்னோட மகள், எதுக்கு இதை வாங்குறீங்கன்னு கேட்குறாங்க. உன்னோட எதிர்காலத்துக்கும்மான்னு சொன்னா, நீங்க தன்னம்பிக்கையோடு உழைச்சி முன்னேறினமாதிரி நாங்க முன்னேறிக்கிறோம்னு அவ்வளவு அறிவுபூர்வமா பேசுறாங்க. காசு, பணம் சம்பாதிச்சதைவிட இப்படியொரு நல்ல குடும்பத்துக்கு நான் தலைவனா இருக்குறதுதான் பெரிய பாக்கியம்னு நெனைக்கிறேன்.

என்னோட அடுத்த தலைமுறைக்கு இதைத்தான் சொல்ல விரும்பறேன். தேவையான காசை சம்பாதிங்க. தேவைக்கு அதிகமாவே புண்ணியத்தை சேர்த்து வைங்க. அதுதான் உங்க காலத்துக்கு அப்புறமும் உங்களை வாழவைக்கும்.

எழுத்தாக்கம் : சுரேஷ்ராஜா
(தொடரும்)