லாஜிக் இல்லை மேஜிக்!



சித்திரைத் திருநாளுக்கு ரிலீஸ் ஆன நம் படங்களில் எது ஹிட்டு, எது ஃப்ளாப்பு என்று முதல் மூன்று நாட்களுக்கு காரசாரமாக விவாதங்கள் நடந்துகொண்டிருந்தன. ஆனால், எல்லாத் தரப்புமே ஒட்டுமொத்த குரலில் ஹிட்டு என்று இரண்டு கைகளையும் தூக்கி ஒப்புக் கொண்ட படம், ஹாலிவுட் ஆக்‌ஷன் படமான ‘ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ்-8’தான். இந்த சீரிஸ் படங்களின் விசேஷ அம்சமே முந்தைய பாகம் செய்த வசூல் சாதனையை, அடுத்த பாகம் அனாயாசமாக நொறுக்குவதுதான்.

அப்படி என்னதான் ஸ்பெஷல்?
விதவிதமாக கார்கள். வியர்க்க வைக்கும் சேஸிங். கிளாமர். அதிரடி அடிதடி. உலக மசாலா வெறியர்கள் கொண்டாடித் தீர்க்க இது போதாதா? ‘லாஜிக்கெல்லாம் பார்க்க வேணாம். லவ்வபிள் மேஜிக். விசில் அடிக்கலாம் வா தல’ என்று ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக தியேட்டருக்கு படையெடுக்கிறார்கள்.

வின் டீசல், மிச்செல் ரோட்ரிக் இருவரும் ஜாலியாக ஹனிமூன் போகிறார்கள். அங்கும் தீ பறக்க கார் ரேஸ். இவர்களது ஹனிமூனுக்கு ஸ்பீட் பிரேக்கராக வருகிறார் சைபர் தீவிரவாதி சார்லிஸ் திரோன். அதன் பிறகு திடீரென வில்லனாகும் வின் டீசல், தன்னுடைய குழுவினருடனேயே மோதுகிறார். அவரை திரோன் எப்படி திசை திருப்பினார் என்பதற்கு உருக்கமான ஒரு சஸ்பென்ஸ் வைத்திருக்கிறார்கள். கிளைமேக்ஸ்? வழக்கம்போல சுபம்தான்.

படத்தின் தொடக்கக் காட்சியே தகதகவென எரியும் காரை ரிவர்ஸில் ஓட்டி வெற்றிக்கோட்டை எட்டும் வின்டீசலின் சாகஸம்தான். அந்தக் காட்சியிலேயே விர்ரூம் என்று விறுவிறுக்கிறது கதை. குறிப்பாக தமிழ் டப்பிங் வசனங்கள் உட்டாலக்கடி வடகறிதான். “யப்பா.. அந்த சொப்பன சுந்தரி காரு எனக்குதான்” ரேஞ்சுக்கு மிகவும் மண்வாசனையோடு டயலாக் எழுதிய ரைட்டருக்கு பூசணிக்காய் சுற்றி திருஷ்டி எடுக்க வேண்டும்.

‘கார் மழை பொழியட்டும்’ என்று கவித்துவமாக வில்லி டயலாக் அடித்த உடனேயே நிஜமாகவே கார் மழை பொழிகிறது. சினிமாவை ‘காட்சிப்பிழை’ என்பார்கள். கண்கட்டு வித்தை என்று சொன்னால் இன்னும் பொருத்தமாக இருக்கும். சுத்து சுத்தென்று ரசிகர்களின் காதில் அவர்கள் டன் கணக்கில் பூ சுற்றினாலும், லாஜிக்கெல்லாம் பார்க்காமல் உதடுகள் வீங்க விசிலடிக்கிறார்கள் ரசிகர்கள்.குடும்பத்தோடு கோடையை என்ஜாய் செய்ய குதூகலமான படம் இது!

- ஷாலினி நியூட்டன்